SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீர் 370வது சிறப்பு சட்டம் ரத்து விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை பாகிஸ்தான் முயற்சி பலிக்கவில்லை

2019-08-17@ 01:22:42

ஐநா : ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக  சீனா விடுத்த கோரிககையை ஏற்று, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று மூடிய  அறைக்குள் ஆலோசனை நடத்தியது.  இதில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்ற முயன்ற பாகிஸ்தான் முயற்சி தோல்வியடைந்தது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இதற்காக காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங்கிடம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மகமூத் குரேஷி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் விவகாரத்தில் நீதி கிடைக்க சீனா துணை நிற்கும் என குரேஷியிடம் வாங் தெரிவித்தார்.
மேலும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதன் தலைவரும், போலந்து ஐ.நா தூதருமான ஜோனா ரோனெக்காவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, நேற்றிரவு நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் இப்பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.  
ஐநா ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஐநாவுக்கான இந்திய தூதர்  சையத் அக்பருதீன் பேட்டியளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியாவின்  முந்தைய நிலைபாட்டில் எந்த மாற்றமுமில்லை. அரசியலமைப்பின் 370 வது பிரிவு  தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம். இதை  வெளியில் பேச தேவையில்லை. காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக நம்ப  வைக்க சிலர்(பாகிஸ்தான்) முயன்றனர்.

ஆனால், அவை காஷ்மீரின் கள  யதார்த்தத்திற்கு மாறானவை. இந்தியா பாகிஸ்தானுக்கு தெரிவிப்பதெல்லாம், '  தீவிரவாதத்தை நிறுத்துங்கள், பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்' என்பது தான். ஒரு மாநிலம் ஜிஹாத் என்கிற பதத்தை பயன்படுத்துவதும்,  அம்மாநில தலைவர்கள் உட்பட அனைவரும்  இந்தியாவில் வன்முறையை ஊக்குவிப்பதும் கவலைக்குரியது. இவ்வாறு கூறினார். முன்னதாக, ஐநா கூட்டத்திற்கு பின்  பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி கூறுகையில், ' ஐநா  பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் மக்களின்  குரல்கள் இன்று கேட்கப்பட்டன. இதன்மூலம், காஷ்மீர் விவகாரம் என்பது,  'சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னை என்பதற்கு  இது ஒரு சான்றாகும்'. இவ்வாறு கூறினார்.

‘மத்திய அரசு தோல்வி’

முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிப்பது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று கூறுகையில், ‘‘காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் ஆலோசிக்க அனுமதிப்பது மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது. பிரதமர் மோடி நட்பு நாடுகளின் தலைவர்களிடம் போனில் பேசி, இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்