SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-08-17@ 00:34:15

‘‘வசூல் வேட்டையில் கடும் போட்டி நடக்கிறதா சொன்னியே.. அது என்ன விவகாரம்..’’ என்று கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2019 மே மாதம் ஊதியம் கிடையாதுன்னு சொன்னதுனால, மே மாதம் ஊதியம் கேட்டு ஒருசில பகுதிநேர ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்காங்க. இந்த வழக்கு முடியும் நிலையில் இருக்கிறது. இதனால், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஒருவர், ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியர்களும் தலா ரூ.6 ஆயிரம் கொடுத்தால், நீதிமன்றத்தின் மூலம் பணி நிரந்தரம் செய்து கொடுப்பதாகக்கூறி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார். இவர்கிட்ட, பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், நாங்கதான் உண்மையான டீம்... என இன்னொரு பிரிவினர் களம் இறங்கி, பகுதிநேர ஆசிரியர்களை தங்கள் பக்கம் இழுத்துக்கிட்டு இருக்காங்க... இதனால், யார் பக்கம் போறதுனு தெரியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் பலர் குழப்பத்தில் தவிக்கிறாங்க. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நடந்துகிட்டே இருக்கு... எது எப்படியோ, பாக்கெட் நிறைந்தால் போதும் என்கிறது ஒரு குரூப்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலூர் மாவட்டத்துல ரேஷன் அரிசி கடத்தல் சர்வசாதாரணமா நடக்குதாமே..’’ ‘‘கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் என்னதான் புதிய வழிகளை கையாண்டாலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் நொந்துகொள்ளும் நிலைதான் உள்ளது. குறிப்பாக நாட்றம்பள்ளி வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனை அங்குள்ள அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. பச்சூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய இடங்களில் இருந்து கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் சோபநாயக்கன்பட்டி வழியாக ஆந்திராவிற்கு கடத்தி செல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் அண்டை மாநில பெரும்புள்ளிகளின் கை ஓங்கி இருக்கிறதாம். அதனால் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் ‘உள்ளூரில் புடிச்சு போடு போதும். அந்த பக்கம் விடுங்க... இந்த பக்கம் புடிங்க...’ என்று கடமையை கண்ணாக செய்து வருகின்றனராம். வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக செல்லும் ரயில்களிலும் சர்வசாதாரணமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதையும் கண்டும் காணாமலும் விட்டு விடுகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வருவாய்த்துறை துணையுடன் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை தொடருதாமே..’’‘‘திருச்சி மாவட்டத்தில் மாநகரை தொடர்ந்து , புறநகர் பகுதிகளில் ஆற்றில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறதாம்... தினமும் அதிகாலையில் ஆரம்பித்து தொடர்ந்து இடைவிடாது மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு ஒரு குறிப்பிட்ட எல்லையில் குவித்து விற்பனை செய்யப்படுகிறதாம்... திருச்சி மாவட்டத்தில் ஆற்றுப்படுகை ஓரங்களில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை போட்டுள்ளது. அந்த தடையும் மீறி அள்ளப்படும் மணலால் புறநகர் பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம், கொஞ்சமாக குறைவதுடன் அருகிலுள்ள விவசாய நிலங்களும் பெரியளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாம்... மேலும் இது சம்பந்தமாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கொள்ளை நடப்பதையும் வருவாய்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருவதால் இரவு நேரங்களில் ரகசியமாக நடந்து வந்த இந்த மணல் கொள்ளை தற்போது பகல் நேரங்களிலும் நடந்து வருகிறதாம்....

இரவு நேரத்தை தொடர்ந்து, பகல் நேரங்களிலும் தைரியமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணலை கடத்தப்படுவதால் வருவாய்த்துறை துணையுடன் தான் நடப்பது என சந்தேகம் எழுந்துள்ளது. மணல் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’
‘‘தேனி மாவட்டத்துல 8 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கு... இதில் 130 ஊராட்சிகள்ல வளர்ச்சி திட்டப்பணிகள் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்தக்காரர்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாம்... சம்பந்தப்பட்ட ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்து, பணிகளை முடித்த ஒப்பந்தக்காரர்களுக்கு நிதி விடுவிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு பரிந்துரை செய்து விட்டார்களாம்... ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், கலெக்டரிடம் நிதி விடுவிக்க கோப்புகளை அனுப்பிட்டாராம்... ஆனால், கலெக்டர் நீண்ட காலமாக கோப்புகளில் கையெழுத்திடாம வச்சிருக்காராம்.... அதனால, கலெக்டர் அலுவலகத்துல கோப்புகள் எல்லாம் ‘கொர்ர்ர்...’. இதனால் ஒப்பந்தக்காரர்கள் பணம் கிடைக்காமல் தவிக்கின்றனராம்... ‘‘கோப்புகளில் சந்தேகம் இருந்தால் நடந்து முடிந்த பணிகளை நேரில் ஆய்வு செய்து, திருப்தி இல்லாவிட்டால் பணிகளை மேலும் செய்யச்சொல்லி உத்தரவிடலாம். ஆனால் கோப்புகள் குறித்து எந்தமுடிவும் எடுக்காமலும், கோப்புகளில் கையெழுத்திடாமலும் கலெக்டர் காலம் தாழ்த்தி வருகிறாரே...’என ஒப்பந்தக்கார்கள் தரப்பு ஒப்பாரி வைக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்