SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லஞ்சம் வாங்க கற்றுக்கொடுக்கும் அரசு பள்ளியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-16@ 00:23:47

‘‘தனி மரம் தோப்பாகாது...பல மரங்கள் சேர்ந்தால்தான் அதை தோப்பு என்று அழைப்பார்கள். அப்படி தானே விக்கி...’’ என்று கிண்டலடித்தார் பீட்டர் மாமா. ‘‘தனிமரம் தோப்பாகாது என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல்வாதிகளை நம்பினால் மரத்தை கூட கிளையாக்கி, சரகாக்கி கடைசியில் குப்பையில் போட்டுவிடுவார்கள் என்று சொல்வது வேறு யாருமல்ல அமைச்சர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வரும் தோப்புதான். அரசியல்வாதிகளின் சொல்லுக்கு இருக்கும் மரியாதையைவிட சேலம்காரரின் உறவினர்களின் சொல்லுக்கு தான் அதிக முக்கியத்துவம் கோட்டையில் கொடுக்கப்படுகிறதாம். இதை எப்படியோ மோப்பம் பிடித்த தோப்பு, இப்போது அவர்களின் மூலம் காய்களை நகர்த்தி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அப்புறம்...’’‘‘ தோப்பு அமைச்சராவதை தடுக்க மஞ்சள் மாவட்டத்தை சேர்ந்த 2 மாஜி அமைச்சர்கள் பகீரத முயற்சி செய்துகிட்டு இருக்காங்க. கோட்டை அமைச்சரும், சோப்புநுரை அமைச்சரும் சேலம்காரரிடம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆனாலும் விடாப்பிடியா தோப்பு முயற்சி செய்கிறார். ஈரோடு மாஜி அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ.வுமான இவர், கடந்த சில மாதங்களாக சைலன்ட் மோடில் இருந்துகொண்டு, அமைச்சர் பதவிக்காக காய்களை நகர்த்திக்கொண்டு வந்தார். இந்த சூழலில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.டி.துறை அமைச்சரின் இலாகாவை கைப்பற்ற இவர் தீவிரமாக களத்துல இறங்கிட்டாராம். மஞ்சள் மாவட்டத்தில் இருக்கிற 2 அமைச்சர்களும் புறநகரில் இருக்கிறதால மாநகர் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கிற வகையில் தனக்கு அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் என சேலம் உறவுகளிடம் புள்ளிவிவரத்தோடு எடுத்து சொன்னாராம். அவர்களும் நீங்க கவலைப்படாதீங்க... அடுத்த அமைச்சர் நீங்க தான் என்று உறுதி கொடுத்து இருக்கிறார்களாம்... அந்த சந்தோஷத்தில் தற்போது திளைத்து வருகிறார் தோப்பு...’’ என்றார் விக்கியானந்தா.  

‘‘மாணவர்களையே லஞ்சம் வாங்குவது எப்படி என்று கற்றுக் கொடுக்குதாமே ஒரு பள்ளி...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திண்டுக்கல் மாவட்டத்துல அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் ெகாடுத்திட்டு இருக்காங்க... இதை வழங்குவதற்காக திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் ரூ.200 வசூலிக்கின்றனராம். இந்த தொகை கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும், அமைச்சர் வரைக்கும் அனுப்ப வேண்டும் என பகிரங்கமாக சொல்லி வசூலிக்கப்படுகிறதாம்.  கொடுக்க முடியாது என கறாராக பேசும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்காமல் இழுத்தடிக்கிறார்களாம். தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் நடத்தும் ‘வசூல் வேட்டை’, அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும் தெரியுமாம்... அவர்களுக்கும் இதுல பங்குத்தொகை உண்டாம். அவர்கள் ஆசியுடன்தான் வசூல் வேட்டை நடப்பதாக மாணவ, மாணவிகள் புலம்பறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘இப்போது 200 லஞ்சம் கொடுத்து லேப்டாப் வாங்கும் மாணவர்கள், நாளை இதே முறையை பின்பற்றமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். மாணவர்களை கெடுப்பதே சில ஆசிரியர்கள்தான்... அரசுக்கல்லூரிகளில் புதுசா உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யுறதுக்கு முன்னாலேயே, 81 புது கோர்ஸ்க்கு அனுமதி கொடுத்திருக்காங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘முறையா புதிய கோர்ஸ்களை தொடங்கனும்ன்னா, அதற்கு முன்னாடியே தேவையான உதவி பேராசிரியர்களை வேலையில் வைக்கணும். அப்புறம் தான் கோர்ஸ் ஆரம்பிக்கணும். ஆனா இங்க எல்லாமே உல்டாவா நடக்குது. மாணவர்களை சேத்துட்டு பிற்சேர்க்கைங்கிற பேர்ல உதவி பேராசிரியர்களை சேத்துப்பாங்களாம். இப்படித்தான் அரசுக்கல்லூரிகள்ல ஏராளமான ஆசிரியர் இடங்களை காலியா வச்சு, இருக்குற ஆசிரியர்களை வச்சு பாடம் நடத்தி வர்றாங்கன்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கறாங்க. இந்த நிலையில பாடம் நடத்தினா மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான் போங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘நெல்லையில இருந்து இனி சென்னைக்கு தினமும் கட்சி நண்பர்கள் மூலம் அல்வா கிடைக்கும்னு சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வாஸ்தவம்தான். தமிழகத்துல இடைத்தேர்தல் என்றாலே கொண்டாட்டம்தான். அமைச்சர்களின் வாகனங்கள் பரபரக்க... வாடகைக்கு வீடு, உள்ளூரில் ஓட்டல், டீக்கடைகளில் சூடுபிடிக்கும் வியாபாரம், மேளதாளம் என அனைத்திலும் பண மழைதான்.

அதுவும் அதிமுக உடைந்து இரண்டான பிறகு, இரண்டு தரப்பிலும் பண மழை என்பதால் இடைத்தேர்தலில் பணம் பத்தும் செய்யும் என்றாகி விட்டது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக நெல்லை மாவட்டத்தில் கிப்ட்காரரின் கை ஓங்கியிருந்தது. ஆனால் மக்களவை தேர்தலில் கிப்ட்டின் கனவு பலிக்காமல் போனதால் நெல்லை அமமுக கூடாரம் மொத்தமும் அதிமுகவில் ஐக்கியமாகி விட்டது. நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் என்றவுடன் வாக்காளர்கள் குஷியாக இருந்தனர். ஆனால் கிப்ட்காரர் வேலூர் தொகுதியில் போட்டியில்லை என்பதுபோல இடைத்தேர்தலிலும் போட்டியில்லை என அறிவித்ததால் நாங்குநேரி இடைத்தேர்தல் பிசுபிசுப்பின்றி போனது. இங்கு போட்டியில்லை என்றாலும் ஆளுங்கட்சியினருக்கு ஷாக் கொடுக்க ‘கிப்ட்'' கட்சியினர் சுயேட்சையாக களமிறங்கலாமா என ஆலோசித்து வருகின்றனராம். இதனால் பணத்தை இறைத்தாவது வெற்றி பெறலாம் என்ற நமது கனவை சிதைத்து விடுவார்களோ என்ற பதைபதைப்பில் ஆளுங்கட்சி வட்டாரம் உள்ளதாம்... எனவே சென்னையில் இருந்து பல இலை கட்சியினர் நெல்லைக்கு போய்ட்டு வந்துட்டே இருக்காங்களாம்... அப்டி செல்பவர்களிடம் உறவினர்கள், நண்பர்கள் அப்படியே அல்வா வாங்கிட்டு வாங்க என்று சொல்லி அனுப்புகிறார்களாம்... இப்போது நாங்குநேரி நிலவரத்தை சிலர் அடிக்கடி போய் பார்த்துட்டு வந்து சேலம்காரர்கிட்ட நிலவரத்தை சொல்லிட்டு வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போலிகளை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஐஎஸ்ஐ முத்திரை உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த முத்திரை இல்லாத பொருட்களின் விலை குறைவாக இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கறாங்களாம்... இவற்றை ஆய்வு செய்ய செல்லும் தொழில் வணிகத்துறை அதிகாரிகள் அந்த பணியை செய்யாமல் இருக்க கடை உரிமையாளர்களிடம் இருந்து தவறாமல் மாமூலை பெற்று விடுகிறார்களாம். இதனால் வேலூர், காட்பாடி உட்பட மாவட்டம் முழுவதிலும் போலி எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர் பொருட்களின் விற்பனை படுஜோராக நடக்கிறதாம்... எல்லாம் அதிகாரிகளின் தயவுதான்...’’ என்று தைரியமாக சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்