SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும்போது செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

2019-08-15@ 02:08:24

சென்னை: அணைகள், கால்வாய்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து நீர் வெளியேறும்போது பொதுமக்கள் அதன் அருகே நின்று செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும்  கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளது. அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் அண்மையில் எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும்  கடலூர் கலெக்டர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து அவ்வப்போது பொதுமக்களுக்கு  தெரிவிக்கப்படும். காவிரி நீர் கால்வாய்கள் பிற நீர்நிலைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படும்போது  நீச்சல் அடித்தல் மற்றும் பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் பொதுமக்கள் யாரும் ஈடுபடக்கூடாது. அணைகளில் இருந்து  அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும்போது, பொதுமக்கள் சென்று செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டது. நீரின் முன்பாக நின்று செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள் ஆற்றங்கரையில் குளிப்பதற்கும், விளையாடுவதற்கும் பெற்றோர் அனுமதிக்க கூடாது. விவசாயிகள் தங்களின் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும். அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக  வெளியேற்றப்படும்போது காவிரி, கொள்ளிடம், பவானி மற்றும் அமராவதி ஆற்றங்கரைகளில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அவசர காலத்தில் பொதுமக்களை வெளியேற்றவும்,   கால்நடைகளை பாதுகாக்கவும், முறிந்து விழும் மரக்கிளைகளை அகற்றவும் நடமாடும் முதல்நிலை மீட்பாளர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்துறை மண்டலக்குழுக்கள், தமிழ்நாடு  பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற  காவலர்கள், பேரிடர் உதவிப்படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவித பீதியும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காவிரி படுகையில் உள்ள அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்