SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டு பயணம் முடிந்ததும் அமைச்சரவை மாறுவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-15@ 00:16:17

‘‘இரண்டு பதவிக்கு 10 பேர் போட்டியிடறாங்களாமே... அவ்வளவு முக்கியமான பதவியா அது...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலையில மந்திரி பதவி இரண்டு காலியா இருக்கு. அதுல ஒன்றை தன் தரப்புக்கு ஒதுக்கணும்னு துணை கேட்க... முடியாது இரண்டு பேரும் என்னுடைய ஆட்கள்தான். எனவே இரண்டு பதவிகளையும் என் தரப்புக்குதான் என்று சேலம்  சொல்ல... யாருக்கு பதவியை கொடுப்பது என்ற சிக்கல் நீடித்து வரும் நிலையில். சேலத்துக்கு ரொம்ப வேண்டிய 10 ேபர் ஆரம்பத்தில் இருந்தே உங்களுடன் தான் இருக்கிறேன். நீங்கள் சொல்லும் இடங்களில் படித்து பார்க்காமலேயே  கையெழுத்து போட்டு இருக்கேன்... அமைச்சர்களாக இருந்தும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைக்காதவர்கள் எல்லாம் இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வேறு  கட்சிக்கு தாவும் திட்டத்துடன் பணத்தை குவித்து வருகின்றனர். ஆனால் நாங்கள் அப்படியல்ல. நீங்கள் பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களுடனேயே இருப்போம். அப்படிப்பட்ட எங்களுக்கு அமைச்சர், வாரிய பதவிகளை  வழங்கினால் மக்களிடம் செல்வாக்கு அதிகரிப்பதுடன், அதை இலைக்கான வாக்கு வங்கியாக மாற்றுவோம் என்று சொன்னார்களாம். இதையெல்லாம் கேட்ட சேலம்காரர் என் வெளிநாட்டு பயணம் முடியட்டும் மந்திரிகளை பதவியில் இருந்து  தூக்குகிறேனோ இல்லையோ உங்களுக்கு நிச்சயம் பதவி தருகிறேன் என்று ஆறுதல் சொல்லி அனுப்பினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இது அல்வா பேச்சா... இல்ல நிஜமா பதவி கொடுப்பாரா... சீனியர்கள் தொடர்ந்து சேலம்காரருக்கு குடைச்சல் கொடுக்கிறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மதுரையை ேசர்ந்த செல்லமானவரை தொடர்ந்து மூத்த அதிமுக உறுப்பினரும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ‘ஜக்கு’, நான் எம்ஜிஆர் காலத்துல இருந்து அரசியல்ல இருக்கேன். 2 அமைச்சர்களோட பொறுப்பை கூடுதலாக மத்தவங்ககிட்டே  கொடுத்திருக்கீங்க. அதை எனக்குத்தான் தரணும்... நீங்க சொல்லித்தான் கிப்ட் பக்கம் போகாம கடைசி நேரத்துல உங்க பக்கம் வந்தேன்... இதற்காகவாவது நீங்க அமைச்சர் பதவி தரணும்னு, சேலம்காரர் முன்னாடி ஒத்தக்கால்ல ‘ஜக்கு’  நிற்கிறாராம். அவருக்கு கொடுத்தால் துணையை பகைத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் பொறுமை காக்க சொல்லி இருக்கிறார் சேலம்காரர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அதுக்கு ‘ஜக்கு’ என்ன சொன்னாராம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதை ஏற்க மறுத்த ‘ஜக்கு’ ஏற்கனவே தேனி மாவட்டம் அதிமுக கோட்டையாக இருந்தது. துணை ஆதரவாளர்களுக்கு போன தடவை பொறுப்புகளை அள்ளிக் கொடுத்ததால, யாருமே கட்சி வேலை பார்க்கிறது இல்லை. இதே நிலைமை  நீடிச்சா கட்சி நிலைமை வீணாப்போயிரும்... ஏற்கனவே மாவட்ட தலைமை அலுவலகத்தை நம்ம பக்கம் இழுக்க, டிடிவி கட்சிக்காரங்களோட போராட வேண்டியிருக்கு... துணையும் சென்னை, டெல்லின்னு பிஸியாய் இருக்காரு... அதனால இந்த  முறை எனக்கு அமைச்சர் பதவி வேணும்னு சென்னைக்கும், கம்பத்துக்கும் ‘ஜக்கு’ பறந்து கொண்டிருப்பதாக அவரது அடிப்பொடிகள் பேசிக்கிட்டு இருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.‘‘மின்சாரம் வருதோ இல்லையோ... வசூல் வேட்டை மட்டும் நிற்பதே இல்லையாமே..’’

 ‘‘கிருஷ்ணகிரியில் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றி வந்தவர் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்றாராம். அங்கு தங்கமான அமைச்சரின் ஆதரவுடன் வேலூர் மண்டல அளவிலான உயர் பொறுப்பில் கடந்த மாதம் பொறுப்பேற்றுக்  கொண்டாராம். இந்த நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்ற இங்கு முகாமிட்டிருந்த தங்கமானவருக்கு முழு செலவையும் இவர்தான் கவனித்துக் கொண்டதாக கூறி தனக்கு கீழே உள்ளவர்களிடம் சில லட்சங்களை  வசூலித்துவிட்டாராம். அவர்கள் கட்சி வேட்பாளருக்காக தங்கமானவர் இங்கு வந்து தேர்தல் பணியில் ஈடுபட்டார். அதற்கு நாங்கள் ஏன் கப்பம் கட்ட வேண்டும் என்று சில கீழ்நிலை அதிகாரிகள் மண்டல தலைமையிடம் எகிற, ‘நான் தங்கமான  அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவன். நான் சொன்னால் அந்த பேச்சை அவர் தட்டமாட்டார். உங்களுக்கு எதுவானாலும் நான் செய்வேன்’ என்று அன்பாகவும், மிரட்டலாகவும் சொன்னாராம். அதனால் அவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்று  ஒதுங்கிக் கொண்டதுடன் அவர் கேட்ட பணத்தை கொடுத்து சென்றார்களாம். அப்படியும் படியாதவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் மண்டல தலைமையில் இருப்பவர் பழிவாங்கி வருகிறாராம். குறிப்பாக அவர்கள் ஓய்வு பெறும் நிலையில்  இருந்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டியதை தாமதமாக கிடைக்க செய்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திருச்சொந்தூர்ல அரசு செயல்படவே இல்லையாமே என்ன காரணம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘திருச்செந்தூர் கோயிலில் கிரி பிரகார மண்டபம் இடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை கிரி பிரகார மண்டபம் கட்ட இந்து சமய அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெயில் காலங்களில்  பக்தர்கள் சுடும் தரையில் நடக்க முடியாமல் ஓடி, ஓடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பெண்கள் பாடு சொல்லி மாளாது. இந்நிலையில் திருச்செந்தூரில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட துறையின் அமைச்சர் கிரி பிரகார  மண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என பெயருக்கு அறிவித்துள்ளார். மண்டபம் இடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்காலிக பந்தல் பற்றி இந்து சமய அறநிலையத்துறை யோசிக்கக் கூட இல்லை. பக்தர்கள் இதற்காக பலமுறை  கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்  கிரி பிரகார மண்டபம் கட்டுவதற்கு முன்பாக ₹3.50 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பந்தல் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியது தான் விந்தை.  ஒன்றரை ஆண்டு கழித்து தான் தற்காலிக பந்தலா, அப்படியானால் நிரந்தர மண்டபம் எப்போது கட்டப்படும் என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிலும் தற்காலிக பந்தலுக்கே 3.5 கோடியா.. எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம் என்று  மனவேதனையுடன் சொன்னார்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்