SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு: முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பசுமைத் திட்டத்தில் புதிய வீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

2019-08-14@ 20:47:32

சென்னை: நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கிய கனமழை 9-ம் தேதி வரை கொட்டி தீர்த்தது. இந்த  மழையால், ஊட்டி, கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் பாதித்தன. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மண் சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஊட்டி சென்றார். அங்குள்ள தமிழகம் மாளிகையில்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்ட அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு  செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரியில் பெய்த கன மழையின் காரணமாக 500 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நிலங்கள் மறு சீரமைப்பிற்கு தோட்டக்கலைத்துறைக்கு ரூ.4 கோடியே 37 லட்சம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், மாநில நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரை 852  கி.மீ., தூரம் கொண்ட சாலை  பழுதடைந்துள்ளது. இச்சாலையை சீரமைக்க ரூ.10.5  கோடி தேவை. மின் வாரியத்திதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய ரூ.23 கோடி தேவைப்படுகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள  பாதிப்புகளை சீரமைக்க ரூ.39.6 கோடி தேவைப்படுகிறது. பேரூராட்சிகளுக்கு ரூ.28.30 லட்சம் மறு சீரமைப்பிற்கு தேவை. மாவட்டத்தில் மழை சேதங்களை சீரமைக்க மொத்தமாக ரூ.200 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை உடனடியாக மாநில  பேரிடர் நிதியில் இருந்து விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் நிதி பெற மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கப்படும், என்றார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சேத விவரங்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி  வைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100 வழங்கப்படும் என்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசை வீடுகளுக்கு தலா  ரூ.5,000 வழங்கப்படும் என்றும் முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பசுமைத் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திமுக எம்.பி.க்கள் 10 கோடி உதவி:

மு.க.ஸ்டாலின் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய  நான்கு தாலுகா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவைகளை மேம்படுத்த எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க. நடவடிக்கை எடுக்கும். இந்த நான்கு  வட்டாரங்களில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த நீலகிரி எம்.பி. ராசா தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். அதேபோல், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.2   கோடியும், ராஜ்யசபா எம்.பி.க்கள் திருச்சி சிவா, இளங்கோவன், ஆலந்தூர்  பாரதி, வில்சன், சண்முகம் ஆகியோர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி நிதி என வசூலித்து மொத்தம் ரூ.10 கோடியில் வளர்ச்சி பணி மேற்கொள்ள   நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்