SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளையர்களை விரட்டிய நெல்லை தம்பதிக்கு அதீத துணிவு விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்

2019-08-14@ 18:56:26

சென்னை: நெல்லையில் கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் அருகே  கல்யாணிபுரத்தை சேர்ந்தவர்  சண்முகவேல் (72). விவசாயி. இவரது வீடு, கல்யாணிபுரம் மெயின் ரோட்டில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு. இவரது மனைவி செந்தாமரை (65). இவர்களது 2 மகன்கள், ஒரு மகள்  திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 11ம்  தேதி இரவு 10 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை, சண்முகவேல், செந்தாமரை தம்பதி அருகிலிருந்த செருப்பு, சேர், ஸ்டூல் உள்ளிட்டவற்றை எடுத்து தாக்கி விரட்டியடித்த சிசிடிவி காட்சி சமூக  வலைதளங்களில் வைரலாக பரவியது. தம்பதியினரின் வீரச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, நேற்று காலை சண்முகவேல் வீட்டை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் ஆய்வு செய்தார். அப்போது சண்முகவேல் மற்றும் செந்தாமரை தம்பதியை பாராட்டினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியர் கோயிலுக்கு சென்றிருந்தபோது  வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதையடுத்து வீட்டை சுற்றி 14 கேமராக்கள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கொள்ளையர்களை விரட்டியடித்த மூத்த தம்பதிக்கு விருது வழங்க தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிந்துரை செய்தார். சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில்  சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு தமிழக அரசின் வீர தீர விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வீரத்துடன் விரட்டியடித்த சண்முகவேல், செந்தாமரை மூத்த  தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் தம்பதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதை வழங்குகிறார்.

அமிதாப், ஹர்பஜன் பாராட்டு:

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பதிவில், முதிய தம்பதியின் தீரமிகுந்த செயலுக்கு தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பதிவில், திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த  வீடியோ பாத்தா அல்லு விடும். வீரம், பாசத்துக்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்ட பார்வை. முதிர்ந்த தம்பதிகளுக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்