SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 சாராயக்கடைகள் மூடல் எதிரொலி... நகரப்பகுதியில் குறைந்துவரும் அனாதை சடலங்கள்

2019-08-14@ 11:43:19

புதுச்சேரி: புதுவை நகரப்பகுதியில் 5 சாராயக்கடைகள் மூடப்பட்டதால் கடந்த ஆண்டைவிட அனாதை சடலங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இதனால் போலீசார் நிம்மதியடைந்துள்ளனர். வெளியூர்காரர்களுக்கு புதுச்சேரி என்ற பெயரை கேட்டவுடன் உடனே போதை ஏறி விடுவது போல, என்னப்பா? புல்லா, ஆஃபா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். புதுச்சேரி மாநிலத்துக்கு எவ்வளவோ வரலாற்று செழுமையும், பாரம்பரியமும் இருப்பதை மறந்து எல்லோரது நினைவிலும் மதுச்சேரியாக பதிந்து விட்டது. இதனை மாற்றி எழுதுவது என்பது, இப்போதைக்கு இயலாத காரியம் தான். பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதே, இந்த மண்ணில் கொழும்பு சாராயமும், பத்தாவி சாராய (லோக்கல்) சரக்கு என ஆறாகத்தான் ஓடியிருக்கிறது. மதுபாட்டிலை பரிசாக கொடுத்து போரை நிறுத்திய வரலாறெல்லாம் இங்குண்டு. இன்றைக்கு சீமை சரக்கை அரசே விற்பனை செய்வதுடன், புதுச்சேரியில் சாராயக்கடைகள் இன்னமும் செயல்பட்டு வருகிறது. கூரை கொட்டகையும், சிவப்பு நிறத்தில் சாராயக்கடை என்ற பலகையும் அதனுடைய எண்ணும், அதனருகில் பச்சை, பிங்க் நிறத்தில் எரியும் டியூப் லைட்டுகளும் ஹைலைட். கூலி வேலை செய்யும், எளிய மக்களின் உயிர்குடிக்கும் சாராயத்தின் மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகின்ற போதிலும், அரசுக்கு வருவாயை கொடுப்பதால், தொடர்ந்து நடத்தப்படுகிறது.

அரசுக்கு லாபம் என்றாலும், அதன் பின்விளைவுகள் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், வீட்டில் இருந்து வெளியேறியவர்களுக்கு மதுவுடன் புதுச்சேரி அடைக்கலம் தருகிறது. சுற்றுலா பகுதி என்பதால், இங்கேயே தங்கி பிச்சை எடுப்பது, சாராயம் குடித்துவிட்டு காலத்தை கழிப்பது, இறுதியாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் பலர் சுற்றித்திரிவதை காணமுடியும். இறுதியில் ஓவர் குடியால் அனாதையாக சாலையோரங்களில் இறந்து கிடப்பதை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். இப்படி இறந்து கிடக்கும் நபர் யார்? என்பதை கண்டறிந்து சடலத்தை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு பெரும் சவாலானது.

பத்திரிகைகளில் புகைப்படத்தை வெளியிட்டு, சில நாட்கள் காத்திருக்க வேண்டும். யாரும் சடலத்துக்கு உரிமை கொண்டாடி வரவில்லையெனில், அடக்கம் செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் தலையில் விழுந்துவிடும். இதற்கு பயந்து கொண்டே, ரோந்து செல்லும் போலீசார் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் போதையுடன் சுற்றித்திரியும் நபர்களை வேறு பகுதிக்கு துரத்தி விடுவார்கள். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 2009ம் ஆண்டு மிக அதிகபட்சமாக 212 அனாதை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2010ல் 186, 2011ல் 190, 2012ல் 198, 2013ல் 196, 2014ல் 166, 2015ல் 161, 2016ல் 133, 2017ல் 92, 2018ல் 110 என அனாதை சடலங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

இதில் 70 சதவீத சடலங்கள் உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை, பெரியகடை, கோரிமேடு காவல்நிலைய பகுதிகளில் இருந்து தான் அனாதை சடலங்கள் கண்டெடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை குறைந்து வருவது போலீசாரை நிம்மதியடைய வைத்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு ஜூலை மாதம் வரை 37 அனாதை சடலங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, சாலையோரங்களில் இறந்து கிடக்கும் நபர்களில் 90 சதவீதம் பேரின் சாவுக்கு சாராயம் குடிப்பதே காரணம். பெரும்பாலும் வெளிமாநிலங்கள், வெளியூரை சேர்ந்தவர்கள் தான் இப்படி இறந்து போகிறார்கள். இறந்தவரின் இருப்பிடத்தை கண்டறிந்து உறவினர்களுக்கு தெரிவித்தாலும் பலர் சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருவதில்லை என்பது தான் சோகம். அனாதை சடலங்களை அடக்கம் செய்வதற்கு துறை சார்பில் கொடுக்கப்படும் நிதியும் சொற்பம் என்பதால், காவலர்களே சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி, சுற்றுலா திட்டம், நெடுஞ்சாலைகளில் மதுக்கடை அமைக்க கூடாது என்ற உத்தரவுகளால் நகரப்பகுதியில் செயல்பட்டு வந்த 5 சாராயக்கடைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அதிரடியாக அகற்றப்பட்டது. குறிப்பாக ஆட்டுப்பட்டி, திப்புராயப்பேட்டை, வழுதாவூர், காட்டாமணிக்குப்பம், முத்தையா முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த கடைகள் பெரும் தலைவலியாக இருந்தது. வீட்டை விட்டு வெளியேறிவர்களுக்கு அடைக்கலம் தந்து கொண்டிருந்தது. இதுவும் மூடப்பட்டதால், குடிமகன்கள் நகரப்பகுதிக்குள் வருவதில்லை. தற்சமயம் சாராயக்கடை மூடப்பட்டதால், அனாதை சடலங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. வரும் காலங்களிலும் எண்ணிக்கை இன்னமும் வீழ்ச்சியடையும். அதேசமயம் அனாதை சடலங்களை அடக்கம் செய்ய துறை சார்பில் வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க புதிய டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்