SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு : நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது

2019-08-14@ 00:13:09

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து விட்டார். முதலில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக இருந்தது படிப்படியாக மாலையில் 10,000 கனஅடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 106.70 அடியானது.  தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் 2012 முதல் தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மூலம், 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப் படவில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை விநாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 103 கனஅடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 69.85 டிஎம்சியாக இருந்தது.

இதையடுத்து, 86வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு தாமதமாக நேற்று காலை திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையின் வலது கரையின் மின்விசை மூலம் அணையின் மேல் மட்ட மதகுகளை உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். தொடக்கத்தில் விநாடிக்கு 3000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக நேற்று மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஜனவரி 28ம்தேதி வரை டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடியாக குறைந்தது. பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 106.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 73.79 டிஎம்சி.இந்நிலையில், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் இரவு 3 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இது மாலை 6மணியளவில் 70ஆயிரம் கன அடியாக சரிந்தது.

மின் உற்பத்தி தொடக்கம்


மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் மின்நிலையம் மூலம் விநாடிக்கு 50 மெகாவாட் மின்சாரம், சுரங்க மின்நிலையம் மூலம் விநாடிக்கு 200 மெகாவாட் மின்சாரம், செக்கானூர், நெறிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல் மேடு, ஊராட்சிக்கோட்டை, கோனேரிப்பட்டி கதவணைகள் உள்பட 7 கதவணைகள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.

65வது ஆண்டாக 100 அடியை தாண்டியது


நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,நேற்று அதிகாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் மலர் தூவி, அதிகாலையில் சிறப்பு பூஜை செய்து காவிரிக்கு நன்றி தெரிவித்தனர். 65வது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.

கால்வாய் பாசனத்திற்கும்...


மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து டிசம்பர் 15 வரை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் தாமதமாக நேற்று மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் 200 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக 500 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது.

4 நாளில் 48 அடி உயர்ந்தது


மேட்டூர் அணையில், கடந்த 10ம் ேததி 57.16 அடியாக இருந்த நீர்மட்டம், 11ம் தேதி 67.40 அடியாகவும், 12ம் தேதி 82.62 அடியாகவும் உயர்ந்தது. நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106.70 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 48.54 அடி வரை உயர்ந்துள்ளது. வரத்து அதிகமாக இருந்தால் இன்னும் ஓரிரு தினங்களில் மேட்டூர் அணை 120 அடியை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்