SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை காப்போம்

2019-08-13@ 00:30:28

காற்று, தண்ணீர், உணவு - இவையின்றி பூமியில் உயிரினங்கள் இல்லை. அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தின் வேகத்துடன் ஒப்பிடும் போது, இந்த மூன்றும், இன்னும் எத்தனை காலத்துக்கு நமக்கு குறைவின்றிக் கிடைக்கும் என்கிற அச்சுறுத்தல் எழுகிறது. இந்த நிகழ்கால அச்சம், நம் எதிர்காலத்தின் மீது கேள்விக்குறியை வீசுகிறது.அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்யமுடியாத அபாய நிலையை மனிதர்கள் விரைவில் சந்திக்கவேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. உண்மைதான். வளர்ச்சி என்கிற பெயரில் உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுகின்றது. விளைநிலங்கள் சூறையாடப்படுகின்றன.வீடு, தொழிற்சாலைகள் கட்ட, சாலைகள் அமைக்க, எரிவாயு குழாய்கள் பதிக்க... என காரணங்கள் பல காட்டி, விவசாய நிலங்களின் பரப்பளவை நாளுக்கு நாள் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் உணவு உற்பத்தி செய்வதற்கான நிலப்பரப்பு குறைகிறது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்திக்கான நிலப்பரப்பை முதலில் அதிகப்படுத்த வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நிலத்தை காக்கவே போராட வேண்டியுள்ளதால், விவசாயம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனாலும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. விவசாயத்தை காப்பாற்றத் தவறினால், அடுத்த தலைமுறை உணவுக்காக அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகும். சாலைகள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டிய மரங்களுக்கு பதிலாக கூடுதல் மரக்கன்றுகளை நடுவதில்லை. இதனால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. கார்பன் டை ஆக்ஸைட் எனப்படும் இந்த கரியமில வாயு தான் பூமியை வெப்பமடைய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை, வாகனங்கள் வெளியிடும் புகை ஆகியவற்றால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ைஸட் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. இது தொடர்ந்தால் காற்று மண்டலத்தில் கார்பனின் அளவு 540 முதல் 970 பிபிஎம் (parts per Million) அளவு உயர்ந்து விடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு உயர்ந்தால் பூமிக்கு பெரும் அழிவு ஏற்படும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வன வளம் மிக முக்கியம். பருவமழைக் காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக காடுகள் இருக்கின்றன. இயற்கை வளங்களை காப்போம் என அறிவுறுத்தும் அரசுகள், வளர்ச்சி என்ற பெயரில் வனங்களையும், மலைகளையும், மரங்களையும் அழிக்கத் துணைபோவது வேதனைக்குரியது.தமிழகத்தில் மிக சமீபத்தில் நிலவிய கோர குடிநீர் பற்றாக்குறை பிரச்னை... ஒரு பாடம். பற்றாக்குறை பட்டியல் முடிந்து விடவில்லை. இன்று தண்ணீர். நாளை காற்று, அடுத்து உணவு. தூய காற்றுக்கும், உணவுக்கும் திண்டாட வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. இயற்கையை இன்று நாம் பாதுகாத்தால்... நாளை அது நம்மை பாதுகாக்கும் என்ற விதியை மனதில் பதிப்பது, இன்றைய தேதியில் மிக முக்கியம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்