SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நச்சரிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-13@ 00:25:14

கடற்கரையில் காலாற நடந்தபடி பேசிக்கொண்டிருந்தனர் பீட்டர் மாமாவும் விக்கியானந்தாவும்.
‘‘தமிழக அமைச்சரவையில் இனி ஏதாவது அதிரடி மாற்றம் இருக்குமா...’’ என்று ஆவலோடு கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இரட்டை தலைமைக்குள்ளேயே பிரச்னை இருக்கிறப்ப.. மாற்றம் எல்லாம் உடனடியா வர்றதுக்கு இப்ப வாய்ப்பில்ல..’’ என்று சிரித்தபடி கூறினார் விக்கியானந்தா.
‘‘இப்ப என்ன பிரச்னை ஓடுதாம்..’’
‘‘அதான் ஏற்கனவே சொன்னேனே.. வெளிநாடு போற நேரத்துல இங்க ஏதாவது சடுகுடு ஆடிடுவாங்களோன்னு சேலம்காரர் கவலையோடு இருக்கார். துணை மேலதான் கண்ணா இருக்காரு. இதுக்கு இடையில, அங்க நீலகிரியில வெள்ளம்,  நிலச்சரிவுன்னு மக்கள் வேதனையில் தத்தளிச்சுட்டு இருக்காங்க. அதைப்பத்தி கொஞ்சம்கூட முதல்வர் கவலைப்படாம இருக்கார். அதாவது பரவாயில்லை.. வண்டலூருக்கு போய் புலி, சிங்கத்துக்கு எல்லாம் பேரு வச்சிட்டு இருக்காரு..  அதுக்கான நேரமா இதுனு காட்டமா விமர்சனம் வந்துட்டிருக்கு. இந்த நேரமா பாத்து வெள்ளப் பகுதிகளை பார்வையிட துணை வேகமா போகப்போறாரு. உடனே இவரும் மேட்டூர் அணையை திறக்க கிளம்பிட்டாரு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அதிருக்கட்டும்.. அமைச்சர் பதவி கேட்டு ஏகப்பட்ட எம்எல்ஏக்கள் நச்சரிக்கிறாங்களாமே..’’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.
‘‘சிறைதண்டனை விதிக்கப்பட்டதால் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரோட இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை பொறுப்பை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலா பாத்துட்டு இருக்கார். இப்ப  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரா இருந்த மணிகண்டன் நீக்கப்பட்டிருக்கிறார். இவர் துறையை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூடுதலா கவனிக்கிறார்.  இதனால இரண்டு அமைச்சர் பதவி காலியா கிடக்கு. இதனால  முதல்வர் ஆதரவு எம்எல்ஏக்களும் துணையின் ஆதரவு எம்எல்ஏக்களும் சம்பந்தப்பட்ட தலைகளை அடிக்கடி சந்திச்சு பாத்து செய்யுங்கன்னு அழுத்தம் கொடுத்துட்டு வர்றாங்களாம். இதையொட்டி சிலர் அதிருப்தியில இருக்காங்க..’’ என்றார்  விக்கியானந்தா.  
‘‘புதுச்சேரி நிலவரம் எல்லாம் எப்பிடி இருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி அமைச்சரவைக்குள் ஏற்பட்ட மோதல் ஒரு சுமுக முடிவுக்கு வந்துள்ளதால், காங்கிரசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.  வாரியங்களில் கட்சிக்காரர்களுக்கு சேர்மன் பதவி கொடுப்பதற்காக 25 பேர் கொண்ட பட்டியல்  தயாரிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்சி மேலிடத்திலும்  ஒப்புதல் பெறப்பட்டது. ஆனாலும் சேர்மன் பதவி கொடுக்காததால் காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறிக்கொண்டிருந்தனர். தற்போது  காங்கிரஸ் தலைவரின்  கோபத்தால், இந்த  விஷயமும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாம். கட்சி மேலிடம் உடனடியாக வாரிய தலைவர் பதவிகளை நிரப்ப வேண்டுமென கூறியிருக்கிறது. இதனையேற்று  இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு அனுப்பி  வைக்கப்படவுள்ளது. எம்எல்ஏக்கள் அல்லாதவர்களுக்கு சேர்மன் பதவி வழங்குவதற்கு கவர்னர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கு அனுமதி மறுத்தால், அமைச்சரவையில் வைத்து அனுமதி கொடுக்க முதல்வரும்,  அமைச்சர்களும் தயாராகியிருக்கிறார்கள். மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பல புதிய திட்டங்களும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பேச்சாளர்கள் பயிற்சி முகாமில் சரஸ்வதி சவுண்டு ஜாஸ்தியா இருந்ததாமே..’’
‘‘டெல்டா மாவட்டமான தஞ்சை மாநகர், வடக்கு, தெற்கு, நாகை வடக்கு, தெற்கு, திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் அமமுக தலைமை கழக பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சமீபத்தில் தஞ்சையில் நடந்தது. இந்த  பயிற்சி முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர். சரஸ்வதி அழைக்கப்பட்டு இருந்தார். பேச்சாளர்களிடம் அவர் பேசுகையில், ‘அதிமுக கைவிட்டாலும் அமமுக உங்களை கைவிடாது. முதலில் நமக்கு  நிரந்தர சின்னம் தேவை. அதற்குப் பிறகுதான் பிரசார கூட்டங்களை நடத்த முடியும். இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் சேர்ந்து நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். ஆனால் அது நிலைக்காது. சீக்கிரமே இரட்டை இலையையும் அதிமுகவையும்  சின்னம்மா மீட்டெடுப்பார். நமக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கு..’ என்று ஆவேசமாகவும் உற்சாகமூட்டும்படியும் பேசினாராம். ஆனால் கூட்டத்துக்கு வந்தவர்கள்தான் சுரத்தே இல்லாமல் கடமைக்கு கைதட்டி வைத்தார்களாம்’’ என்றார்  விக்கியானந்தா.        


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்