SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதி தவறலாமா?

2019-08-11@ 06:08:14

தமிழகம் வானம் பார்த்த பூமி. மழை பொய்த்தால் வறட்சிதான். விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் பிரச்னையும் தலைதூக்கும். தமிழகத்தில் இரு பருவ மழைகளால் சராசரியாக ஆண்டுதோறும் சுமார் 900 மி.மீ. மழை பெய்கிறது. இந்த நீர்  ஆதாரத்தை சேமிக்க தவறியதே பிரச்னைக்கு காரணம் என்பதை காலம் உணர்த்திய பாடமாகக் கருதி, நீர்நிலைகளை சீரமைக்கவும் பராமரிக்கவும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மழை நீர் சேமிக்கவும் மக்கள் ஆர்வம்  காட்டுகின்றனர். சென்னையில் கடந்த 4 மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகருக்கு குடிநீர் தந்துவந்த புழல், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன. குடிநீர் தட்டுப்பாட்டால் மக்களின் இயல்பு வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏரிகள் சரியான நேரத்தில், சரியான முறையில் தூர்வாரப்படாததும், நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றாததும்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை சென்னை உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது.

இவ்வளவு பிரச்னைக்கு இடையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4,500 ஏக்கர் பரந்து விரிந்துள்ள புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சிட்கோ, 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. சிறு தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிட்கோ மண்டலத்தை அமைக்க அரசு திட்டமிட்டு அதன் அடிப்படையில் புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டால் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து தடைபட்டுவிடும். இதனால், புழல் ஏரி மெல்ல சாகும் நிலைக்கு தள்ளப்படும். ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி தண்ணீர் வரும்போது ஏரிக்குள் தண்ணீர்  வரத்துக்கு தடை ஏற்பட்டுவிடும். ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிதான் மிக முக்கியம். ஆனால், அந்த பகுதியையே அரசு தற்போது ஆர்ஜிதம் செய்துவருவது மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் நடந்தபோது, தற்காலிக பேருந்து நிலையம் யமுனை நதிக் கரையில் அமைக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பின்னரும் அதை டெல்லி நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியது.  இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. அதில், நீர் நிலைகளில் மாசு ஏற்படுத்தும் எந்த செயலையும் அனுமதிக்க முடியாது என்றும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி பேருந்து நிலையத்தை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் சிட்கோ 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கையோடு வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே இந்த முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்