SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கமிஷன் கேட்டு அரசுப் பணிகளை முக்கிய பிரமுகர் நிறுத்தி வைத்துள்ள விவகாரத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-23@ 00:07:24

‘‘ஆளுங்கட்சியினரின் ஆக்கிரமிப்பை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தப்போறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ராமநாதபுரம் நகராட்சிப்பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் செஞ்சுட்டு வந்தாங்க... ஆனாலும் நகராட்சி நிர்வாகம் கொஞ்சமும் அசைந்து கொடுக்கலையாம்... சமீபத்தில் பொதுமக்களே, ‘நகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்’ என்று ஓங்கி குரல் கொடுத்தாங்களாம்... பிரச்னை பெருசாகுதே என யோசித்த நகராட்சி நிர்வாகம், ‘ஆக்கிரமிப்பு அகற்றப்படும்’ என கடந்த வாரம் ஒரு தேதி பிக்ஸ் பண்ணாங்களாம்... ஆனால், அந்த தேதியையும் ரத்து செஞ்சிட்டாங்களாம்... காரணத்தை விசாரிச்ச போதுதான் பல தகவல்கள் கிடைச்சிருக்கு...’’ என்று சொல்லி நிறுத்தினார் விக்கியானந்தா.
‘‘என்னவாம்...’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதாவது, நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை, பெரிய பஜார், கேணிக்கரை, பஸ் ஸ்டாண்ட் என பல்வேறு இடங்களிலும் கடைகள் போட்டும், கட்டிடங்கள் அமைத்தும் ஆளுங்கட்சியினரே அதிக ஆக்கிரமிப்பு பண்ணியிருக்காங்களாம்... இவர்கள் உள்ளூர் அதிமுக முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள், போலீசாருக்கு ஒரு தொகையை ஒதுக்கிருவாங்களாம்... இதனால் நடவடிக்கை எடுக்க நகராட்சி தயங்குதாம்... முக்கிய தெருக்கள் எல்லாம் குறுகிப்போன நிலையில், நெரிசலும், விபத்தும் அதிகரித்து வருதாம்... கடைசி முயற்சியாக மாவட்ட கலெக்டரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோருவதென்றும், அவரும் நடவடிக்கை எடுக்கலைன்னா முழு வீச்சில் போராட போவதாவும், பொதுமக்கள் முடிவு எடுத்திருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கமிஷன் கேட்டு அரசு பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்குன்னு சொன்னியே.. அது என்ன விவகாரம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசு, மாவட்ட நிர்வாகம் சார்பில் கந்தவர்வகோட்டை தொகுதியில் பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், தார்சாலை அமைக்கும் பணிகள், அங்கன்வாடி கட்டிங்கள் உள்ளிட்ட பல அரசு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் அந்தந்த துறை சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு நடக்கிறது. சில இடங்களில் பணிகள் முடிந்துவிட்டது. ஒப்பந்தகாரர்களிடம் இப்பகுதி மக்கள்பிரதிநிதி இரண்டு முறை கமிஷன் கேட்டதோடு, பணிகளை தொடங்கவிடாமலும், முடித்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராத வகையிலும் பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வருவதாக அதிகாரிகள் மட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கமிஷனுக்காக ஆளுங்கட்சி பிரமுகரே முட்டுக்கட்டை போட்டு இருப்பதால் கந்தர்வகோட்டை தொகுதியில் வளர்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா, முடித்த பணிகளாவது மக்கள் பயன்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகத்தில் தொகுதி மக்கள் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரி மாவட்ட விவகாரம் ஏதுமிருக்கா..’’
 ‘‘இருக்கே.. இந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக ராகுல் நாத் பணியாற்றி வருகிறார். இவர் குமரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்து மூன்றாண்டுகளை கடந்து விட்டது. ஒரே இடத்தில் தொடர்ந்து அவர் பணியில் இருந்து வருகிறார். விரைவில் அவருக்கு மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான பட்டியல் அரசு மட்டத்தில் தயாராகி வருகிறது. அப்போதும் அவர் பிற மாவட்டங்களை தேர்வு செய்யாமல் தொடர்ந்து குமரி மாவட்டத்திலேயே மாவட்ட கலெக்டராகவும் பணியாற்ற ஆசைப்படுவதாகவும், இது தொடர்பான தனது விருப்பத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்காக அவர் முனைப்புடன் காய்களை நகர்த்தி வருவதாகவும் கலெக்டர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. அவரது ஆசை நிறைவேறுமா என்பது நியமன பட்டியல் வெளியாகும்போது தெரியவரும்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சீனியர்-ஜூனியர் மோதல் நடக்குதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இங்குள்ள உழவியல் துறையில் 4 சீனியர் பேராசிரியர்கள், 3 ஜூனியர் பேராசிரியர் இருக்காங்க... இதுல, 10 வருட ஜூனியர் பேராசிரியர் ஒருத்தர், பக்கத்து மாவட்ட அமைச்சர் ஒருவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். இதனால, சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு ஜூனியருக்கு துறை தலைவர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. சத்தம் இல்லாமல் இந்த ஓவர்லுக் நடந்து முடிந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் கசிய துவங்கிவிட்டது. இதுசம்பந்தமாக, பாதிக்கப்பட்ட சீனியர்கள், தங்களது அசோசியேஷன்ல புகார் செஞ்சிருக்காங்க... துணைவேந்தர் கிட்டேயும் புகார் மனு கொடுத்திருக்காங்க... ஆனால், அவர், ‘இது மேலிடத்து விவகாரம்... என்னால் ஒன்னும் செய்ய முடியாது...'' என கைவிரித்து விட்டார். ஆனாலும், பாதிக்கப்பட்ட சீனியர்கள் விடவில்லை. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருக்காங்க... பதில் எப்படி வரப்போகுதுன்னு தெரியல.... ஜூனியருக்கு கீழே சீனியர்கள் வேலைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ஒத்துழையாமை இயக்கம் ஓடிக்கிட்டு இருக்கு... சீனியர்-ஜூனியர் மோதல் காரணமாக, இப்பல்கலைக்கழக வளாகத்தில் பெரும்பாலான ரெகுலர் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மாறாக, ஒரே புலம்பல்தான் கேட்கிறது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்