SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூச்சாண்டி

2019-07-22@ 01:13:57

நாடு முழுவதும் புற்றுநோய் போல் பரவிவிட்ட லஞ்சம், தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறையிலும் தலைவிரித்தாடுகிறது. கடந்த மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியன், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை என ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் சோதனைகளை நடத்திடவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். மறுநாளே தாலுகா அலுவலகங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து அரசு துறைகளில் அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த ரெய்டுகளின் பின்னணியில் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை. பலசமயங்களில் இந்த ரெய்டுகள் வெறும் கண்துடைப்பாகவே நடக்கின்றன. ஆவணங்கள் பறிமுதல், ₹1 லட்சம், 2 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் என்கிற வார்த்தை ஜாலங்களோடு ரெய்டுகள் முடிந்து போகின்றன. சிலசமயங்களில் அரசு அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு செல்வது, அத்துறை ஊழியர்களுக்கு முன்கூட்டியே தெரிந்தும் விடுகிறது.  இத்தகைய சோதனைகளில் திடீரென சில ஊழியர்களை கைது செய்வதும் உண்டு. எப்போதாவது ஒரு அதிகாரியை மடக்குவதும் உண்டு. மற்றபடி மாநில அளவிலான சோதனைகளில் எவ்வித பிரயோஜனமும் இருப்பதில்லை.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையோ இன்று வரை புகார் கொடுத்தவரின் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கவே தயக்கம் காட்டுகிறது. லஞ்சம் கேட்டதற்கான ஆடியோ ரிக்கார்டிங், மேலதிகாரிகளின் உத்தரவு ஆகியவற்றுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மாதக்கணக்கில் காத்திருப்பது வேடிக்கை. லஞ்சம் வாங்கியதாக சிக்கும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் அலுவலகங்களின் பட்டியலில் எப்போதும் பிரதானமாக இருப்பது பத்திரபதிவுத்துறை, ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் என சிலவற்றை பட்டியலிட முடியும். இங்கு செல்லும் பொதுமக்களுக்கு 5 நிமிடத்தில் முடியும் வேலையை அரசு அதிகாரிகள் 5 நாட்கள், 10 நாட்கள் என இழுத்தடிக்கின்றனர். வழக்கிற்கு பயந்து சாமானிய மக்களும் லஞ்ச ஒழிப்புத்துறையை அணுகுவதும் இல்லை. இத்தகைய முக்கிய துறைகளின் செயல்பாடுகளை நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க அரசிடம் உரிய நடவடிக்கை இல்லை.

நாடு முழுவதும் லோக்பால் சட்டத்திற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. குறைந்தபட்சம் தமிழகத்தின் அமைச்சர், அரசு அதிகாரிகளின் சொத்து மதிப்பு விபரங்கள், அரசு அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்டவை உடனடி தேவையாகும். அரசு நிர்வாகத்தை கண்காணிப்பதில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தன்னிச்சையான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். லஞ்சம் வாங்கியதாக சிக்கும் அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல், பணி நீக்கம், குடும்பத்தில் எவருக்கும் அரசுப்பணி வழங்காமல் தடுப்பது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுத்தால்தான் அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-08-2019

  26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்