SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்‘நாடகம்’

2019-07-20@ 00:14:54

கர்நாடக மாநில அரசியலில் நாளுக்கொரு திருப்பம் மேல் திருப்பம். மஜத-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு ஆதரவை திரும்பபெற்று பாஜவை ஆதரிப்பதாக கடிதம் கொடுத்துவிட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் எந்த பக்கமும் சாராமல் ஒதுங்கியுள்ளார். இப்படியுள்ள நிலையில் பேரவையில் மஜத-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை பலம் சரிந்துவிட்டது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தீர்ப்பால் அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியாத நிலை சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலையும் எழுந்துள்ளது. இந்நிலையில் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏ மந்த்பாட்டீலை பாஜவினர் மும்பைக்கு கடத்தி சென்றுவிட்டதாக பேரவையில் காங்கிரஸ் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், என்னை யாரும் கடத்தவில்லை. நெஞ்சுவலி சிகிச்சைக்காக நானே மும்பை மருத்துவமனைக்கு வந்தேன் என்று அவர் அறிவித்துவிட்டார்.

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்த நாளே எவ்வளவு நேரமானாலும் உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தின் மீது பேசி முடித்துவிட்டு வாக்கெடுப்பை நடத்துவது தான் சபையின் விதி. ஆனால் கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது குமாரசாமி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் பேசி பல்வேறு சட்டசிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் முழுமையான தீர்ப்பு வழங்கும் வரை நம்பிக்கை தீர்மானத்தை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டதால், பாஜவினர் பேரவையில் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. இதற்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தி முடிக்க முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். ஆனால் அதையும் அலட்சியம் செய்துள்ள கூட்டணி அரசு, பேரவை நடவடிக்கைகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியதுடன், பாஜவின் ஏஜென்டாக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டியது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது 20 உறுப்பினர்களுக்கு மேல் பேச வேண்டி இருப்பதால் திங்கள், செவ்வாய் வரை கூட பேரவை கூட்டம் தொடரும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளின் இந்த பேரவை நாடகங்களை பார்க்கும் போது நம்பிக்கை தீர்மானத்தை உடனே நடத்தாமல் இழுத்தடிக்கும் யுக்தியில் செயல்படுகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. அதேசமயம், ஒவ்வொரு சட்டசிக்கலையும் காரணம் காட்டி மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் கர்‘நாடக’ அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்