SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் விவகாரத்தில் அடுத்து சிக்குவது உதவி கமிஷனர்தான் என்கிறார்: wiki யானந்தா

2019-07-20@ 00:14:50

‘‘ஆந்திரா கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்திருந்த திருச்சி மாநகர பெண் எஸ்ஐ புவனேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறாரே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘அந்த டாபிக் தான் காவல்துறையில் இப்போ பற்றி எரியுது. கட்டிய கணவரை விவாகரத்து செய்து, எஸ்ஐ பணிக்கு உடன் இருந்து செலவு செய்த கலெக்டர் அலுவலக ஊழியரை ஏமாற்றியதால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாராம்... பின் புறநகரில் எஸ்ஐயுடன் தொடர்பு, அதன்பின் மாநகரில் டிரைவருடன் தொடர்பு, அதற்குபின் இன்ஸ்பெக்டருடன் தொடர்பு என பட்டியல்கள் நீண்டு கொண்டே போனதாம். இந்நிலையில் ஆந்திராவில் உள்ள மிகப்பெரிய கஞ்சா வியாபாரியுடன், இன்ஸ்பெக்டர்களுக்கான அரசு காவலர் குடியிருப்பில் குடியிருந்து கொண்டு குடும்பம் நடத்தியது தற்போது வெட்ட வெளிச்சமானது. இதில் காவலர் குடியிருப்பில் இருக்கும் ஆந்திரா வியாபாரி வீட்டிற்கு வந்தால், உடனடியாக கண்ட்ரோல் அறைக்கு குடும்ப பிரச்னை, ஒரே சண்டையாக உள்ளது என தகவல் தெரியும். அதன்பின் போலீசார் சென்றால், ஒன்றும் இல்லை என கூறப்படும். இப்படியே நீடித்த பிரச்சனையால் தற்போது எஸ்ஐ சஸ்பெண்ட் வரை சென்றுள்ளாராம். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர்களுக்கான குடியிருப்பில் எப்படி எஸ்ஐக்கு வீடு ஒதுக்கப்பட்டது என போலீசார் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்புகின்றார்களாம். இதற்கு யார் உதவி செய்தது எனவும் கேட்டு அதிர வைக்கிறார்களாம். எஸ்ஐக்கு அப்படி உதவிய செய்த அந்த உதவி கமிஷனர் யார், அவர் மீது ஏன் இதுவரை நடவடிக்ைக எடுக்கவில்லை, இந்த சம்பவம் முழுவதும் மூடி மறைக்கப்படுவதால் போலீஸ் கமிஷனர் தான் இதுகுறித்து தீவிர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் கோரஸாக கூறுகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘வேலூர் மாவட்டத்திலும் அமமுக கூடாரம் காலியாகுதாமே..’’ ‘‘ஆமா.. அமமுகவில் இருந்து பல விஐபிக்கள் மாற்று கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் பலர் வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரத்துக்கு வரும் அதிமுக, திமுக முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சிகளில் சங்கமம் ஆவார்கள் என்ற அச்சம் அமமுக கூடாரத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சசிகலாவின் தீவிர விசுவாசியும் தினகரனின் நட்பு வட்டத்தில் இடம் பெற்றவருமான உள்ளூர் பெண் மாஜி எம்எல்ஏ தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் ரகசிய கூட்டம் நடந்தது. இதில் வேலூர், ஆம்பூர், சோளிங்கர், பேரணாம்பட்டு, குடியாத்தம், அணைக்கட்டு என மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் அமமுக நிர்வாகிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அழைத்து வந்தார்களாம். அப்போது அமமுக கூடாரம் காலியாவது பற்றி உருக்கமாக பேசிய நிர்வாகி, யாரும் மாற்றுக்கட்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், விரைவில் நீங்கள் திணறும் வகையில் கிப்ட் பாக்ஸ் கிடைக்கும் என்று உறுதிமொழி அளித்தாராம்.

அதனால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக பிரமுகர்கள் இப்போதெல்லாம் பரிசு பெட்டியை எங்கு பார்த்தாலும் ஏக்கத்தோடு பார்க்கின்றனர். அதற்கேற்ப ஆர்.கே.நகர்காரரும் குடியாத்தத்துக்கு ரகசிய விசிட் அடித்து பெண் பிரமுகரை பார்த்துவிட்டு சென்றதாக பரவும் தகவல்கள் அவர்களின் நம்பிக்கையை எகிற வைத்துள்ளது. ஆகவே, வேலூர் எம்பி தேர்தலில் அமமுக போட்டியிடாத நிலையிலும் தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விடும். அதுவரை பொறுமையுடன் இருக்கலாம் என்று அக்கட்சியினர் காத்திருக்கின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘நெல்லையிலும் நிலைமை மோசமாமே..’’ ‘‘மக்களவை தேர்தலுக்கு பின்னர் நெல்லையில் அமமுகவினர் ஒவ்வொருவராக ஓட்டம் பிடித்து இலை கட்சியில் ஐக்கியமாகி விட்டனர். நெல்லை மாநகர், நெல்லை புறநகர் வடக்கு, தெற்கு என 3 மாவட்ட செயலாளர்களும் அதிமுகவிற்கு தாவி விட்ட நிலையில் கிப்ட்காரர் கடந்த ஒரு மாதமாக மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு ஆள் நியமிக்கவில்லை. கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதில் கிப்ட்காரர் மும்முரமாக இருக்கிறார் என எஞ்சிய அவரது கட்சியினர் மேம்போக்காக கூறி வந்தனர். ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திற்கு 4 பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார். மாவட்ட செயலாளர் இல்லாமல் இருந்தால் கட்சியில் எஞ்சியிருக்கும் தொண்டர்களும் ஓட்டம் பிடித்து விடக் கூடாது. இருக்கும் ஆட்களையாவது தக்க வேண்டும் அல்லவா அதற்காக தான் பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளாராம். அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் நியமனம் இருக்கும் என்கின்றனர் கிப்ட் தரப்பினர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுவை அரசியல் நிலவரம் எல்லாம் எப்பிடியிருக்கு..’’

 ‘‘புதுச்சேரியில் பிரதான எதிர்கட்சியான என். ஆர் காங்கிரஸ், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அக்கட்சி  தோல்வியை சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணியமைத்து தேர்தலை சந்தித்ததால் மக்கள் புறக்கணித்துவிட்டதாக நிர்வாகிகள்  குமுறி வருகின்றனர்.  இதன்காரணமாக தேர்தலுக்கு பின்னர் பாஜக கூட்டணி நிலைப்பாட்டில் என். ஆர் காங்கிரசிடம்  பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அதேபோல் கர்நாடாகா, கோவை போல் புதுச்சேரியிலும்  ஆளும் கட்சியின் ஆட்சிக்கு தொல்லைக்கொடுக்கலாம் என பாஜக திட்டமிட்டிருந்தது. இதற்காக  என். ஆர் கங்கிரஸ் கட்சி தலைவரை சந்திக்க வருமாறு  அமித்ஷா  அழைப்பு விடுத்தார்.  ஆனால் அவர் சந்திக்க செல்லவில்லை.  ஏற்கனவே ஒருமுறை அவரை சந்திக்க சென்றபோது, என்.ஆர் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய வேண்டுமென   அழுத்தம் தரப்பட்டது. அதுபோல தற்போதும் வலியுறுத்துவார்கள் என்பதால், அமித்ஷாவுடனான சந்திப்பை ரங்கசாமி மறுத்துவிட்டதாக தெரிகிறது. ரங்கசாமி மூலம் புதுச்சேரியில் காலூன்ற திட்டமிட்ட பாஜக, அது முடியாததால்,  மாற்று வழியை தேர்வு செய்துள்ளது. என்.ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்பியை பாஜக சார்பில் முன்னிலைப்படுத்த திட்டமிட்டு வருகிறார்களாம். விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள  காமராஜர் நகர் தேர்தலில்  பாஜக சின்னத்தில் முகம் காட்டுவார் என  கூறுகின்றனர். இதற்கு என்.ஆர் காங்கிரசின் ஆதரவும் இருக்கும் என கூறிவருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்