SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிக்கெட் வீரரின் பெயர் கொண்ட ஐபிஸ் அதிகாரியின் தில்லாலங்கடி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-17@ 04:01:24

‘‘விக்கி நீங்க சொன்ன மாதிரியே ஓய்வுபெற்ற சர்வ அதிகாரம் கொண்ட பெண் அதிகாரி மற்றும் ஆளும்கட்சியின் விவிஐபிக்கள் மறைத்த விஷயம் என்னன்னு சொல்லு பார்ப்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியது பற்றி அப்போது சர்வ வல்லமையுடன் இருந்த பெண் அதிகாரிக்கும், இலை கட்சியின் விவிஐபிக்களில் சிலருக்கும் நன்றாகவே தெரியும். எப்படி என்றால் ஒரு மசோதாவை அரசு நிராகரிக்கிறது என்றால் அதற்கான காரணத்தை சொல்லி திருப்பி அனுப்பும். ஆனால் இப்படி ஒரு மசோதா பைல் திரும்பி வரவே இல்லை என்று இலை தரப்பு சொல்வது நம்பும்படி இல்லை என்று ஏற்கனவே ஓய்வுபெற்ற சீனியர் அதிகாரிகள் மத்தியில் பேச்சு வந்தது. அது தற்போது உண்மையாகி இருக்கிறது. இன்னும் எத்தனை மசோதாக்கள் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி மத்திய அரசால் திருப்பி அனுப்பி ைவக்கப்பட்டுள்ளது என்பது ரகசியமாகவே இருக்கிறது. இதில் மேகதாது விவகாரமும் இருக்கலாம். ஹைட்ரோ கார்பனும் இருக்கலாம். மீத்தேனும் இருக்கலாம். எழுவர் விடுதலையும் இருக்கலாம். முல்லை பெரியாரும் இருக்கலாம். வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிரகாரிக்கப்பட்டு அந்த பைல் மாநிலத்துக்கு திரும்பி வந்து இருக்கலாம். இவை அனைத்தும் ரகசியமாக தமிழகத்தின் தலைமை அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கலாம்... இவை எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வழியில் ெவளியாகலாம்... இப்படிதான் தலைமை செயலகத்தில் உள்ள ஊழியர்கள் மட்டத்தில் ‘டாக்’ ஓடுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலூர் எலக்‌ஷன் எப்படி போகுது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எலக்‌ஷன் நடக்கிற அறிகுறியே தெரியவில்லை. ஆனால் ஐடி அதிகாரிகள் பற்றி தான் பரபரப்பாக பேசி வர்றாங்க. நினைச்ச இடத்துக்கு போறாங்க.. நினைச்ச இடத்துல ரெய்டு அடிக்கிறாங்கனு மக்கள் பேசிக்கிறாங்க... மற்றபடி சோதனை என்ற பெயரில் கடமையேன்னு போலீசாரும் தேர்தல் அதிகாரிகளும் வேலை பார்க்கிறாங்களாம். எனினும் இலைக்கு ஆதரவாகவே உயரதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளதாம். தேர்தல் நடத்தை விதிமுறை என ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. சேலம் விவிஐபி தன் அறிக்கையில் புதுசு புதுசா ஊர் பெயரை சொல்லாமல் 15 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் இத்தனை கோடியில் திட்டங்கள் நடந்து வருகிறது. இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கிறார். ஆனால் தேர்தல் நடக்கும் ஊரின் பெயரை சொல்லாமல் அவர் அறிவித்தாலும் உள்ளூர் மக்களுக்கு நம்ம ஊருக்குதான் இந்த திட்டம் என்று அதிகாரிகள் ரகசியமாக வேண்டப்பட்டவர்கள் மூலம் ரகசியமாக தகவல் பரப்புகிறார்களாம்... தேர்தல் கமிஷன் ஒன்று செயல்படுவதே அநேகமாக தெரியாத தொகுதியாக வேலூர் இருந்து வருகிறது என்றே மக்கள் பேசிக் கொள்கின்றனர்... சேலம் விவிஐபி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திட்டங்களை அறிவிக்கிறார். அல்லது பக்கத்து தொகுதியில் அறிவிக்கிறார். எல்லாம் தேர்தல் நடத்தை விதிமீறல் என்றாலும் அதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இந்த முறையாவது மழைநீரை சேகரிக்க முடியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ சிறிய, பெரிய ஏரிகள், குளம், குட்டை உள்பட பலவற்றை தூர்வாரவும், கரையை பலப்படுத்தவும் அரசு 450 கோடிக்கு மேல் ஒதுக்கி இருக்கிறது. இதுல வேதனையான விஷயம் என்னவென்றால் பல இடங்களில் ஏரிகளின் கரையை மட்டும் மண் போட்டு உயர்த்தி இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த மழையில் புதிதாக உயர்த்தப்பட்ட ஏரிகளின் கரைகளும் மழைநீரில் கரைந்து பாலம் பாலமாக வெடித்து காணப்படுகிறதாம்.
இதில் விசேஷம் என்ன தெரியுமா... குளம், குட்டை, ஏரிகளின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, கட்டிடங்களாக உள்ளதாம். காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தை ஏரியில்  அரசு கட்டி இருக்கிறது. தற்போது அதைவிடுத்து அந்த ஏரியின் கரைகள்  உயர்த்தப்பட்டுள்ளதாம். இது ஒரு சாம்பிள்தான். இன்னொரு தகவல் என்ன தெரியுமா, இப்போது பெய்த மழையில் சில ஏரிகளில் தண்ணீர் காணப்படுவதால், நாங்கள் தூர்வாரியதால் தான் தண்ணீர் தேங்குவதாக பணம் பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்.  பல ஏரிகள், குளங்கள், குட்டைகள் கார், பஸ் போக முடியாத இடத்தில் உள்ளதால் அதை சாதகமாக பயன்படுத்தி எத்தனை கோடி பணத்தை சுருட்டினார்களோ என்று உண்மையான விவசாயிகள் வருத்தத்துடன் பேசிக்கிறாங்க...’’என்றார் விக்கியானந்தா.
‘‘போலீஸ் அதிகாரி பற்றி ஏதோ சொல்ல வந்தீர்களே...’’ என்றார் பீட்டர் மாமா.
தென் மாவட்டங்களில் பணியாற்றிய கிரிக்கெட் வீரர் பெயர் கொண்ட போலீஸ் அதிகாரி, சமீபத்தில் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவர், தென் மாவட்டத்தில் பணியாற்றியபோது, சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்ட ரவுடிகளுடன் இருந்த சீட்டிங் குற்றவாளி ஒருவருடன் நெருக்கமாக இருந்தாராம். குற்றவாளியின் காரில்தான் ஐபிஎஸ் அதிகாரி செல்வாராம். அந்த அளவுக்கு நெருக்கமாம். அந்த குற்றவாளி முக்கியமான வழக்குகளை முடிப்பதற்கான டீலிங்குகளை பார்த்துக் கொண்டாராம். இருவரும் ஒருநாள் கூட சந்திக்காமல் இருந்தது இல்லையாம். சீட்டிங்கில் கிடைக்கும் பணத்தில் 60 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிக்காம். 40 சதவீதம் சீட்டிங் பார்ட்டிக்காம். தென் மாவட்ட அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டதும், தனது நண்பரான குற்றவாளிக்கு பார்ட்டி வைத்து விட்டு தான் வந்தாராம். சென்னையிலும் அவருடைய அலுவலகத்தில் இந்த குற்றவாளிதான் அதிகமாக இருக்கிறாராம். இது எங்குபோய் முடியும் என்று போலீசார் புலம்புகிறார்களாம், என்றார் விக்கியானந்தார்.
               


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்