SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்

2019-07-17@ 01:09:17

துபாய்: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது, நடுவர்கள் ஓவர் த்ரோவுக்கு 6 ரன் வழங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதில் தலையிட முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் கடந்த 14ம் தேதி மோதின. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் இன்னிங்ஸ்களின் முடிவில் இரு அணிகளும் தலா 241 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது இதனால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளும் தலா 15 ரன் எடுத்ததால் மீண்டும் ‘டை’ ஆக அமைந்தது. இதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, இங்கிலாந்து அணி சேஸ் செய்தபோது ‘ஓவர் த்ரோ’வுக்கு நடுவர்கள் 6 ரன் வழங்கியது சர்ச்சைக்குள்ளானது. போல்ட் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தை  அடித்த ஸ்டோக்ஸ் முதல் ரன்னை பூர்த்தி செய்து 2வது ரன் எடுக்க ஓடியபோது, கப்தில் எறிந்த பந்து ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டுத் தெறித்து எல்லைக் கோட்டை கடந்தது. இதற்கு நடுவர்கள் 6 ரன் வழங்கினர்.  ஆனால் விதி 19.8ன் படி, பந்து மட்டையில் பட்டு ஓவர் த்ரோவாக அமைந்ததால் 2வது ரன்னை கணக்கில் கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்திருந்தால் இங்கிலாந்துக்கு 5 ரன் தான் கிடைத்திருக்கும். மேலும், பென் ஸ்டோக்சுக்கு அடுத்த பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்காது. நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி இருக்கலாம். சூப்பர் ஓவருக்கான அவசியமே இருந்திருக்காது. நடுவர்களின் இந்த தவறால் நியூசி. அணி உலக கோப்பையையே பறிகொடுத்துள்ளது என்றால் மிகையல்ல.

ஆண்டின் சிறந்த நடுவருக்கான ஐசிசி விருதை 5 முறை வென்றவரான சைமன் டாபெல்லும் ‘கள நடுவர்கள் மிகத் தெளிவான தவறை செய்துவிட்டனர்’ என்று விமர்சித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து ஐசிசி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘நடுவர்கள் எடுக்கும் எந்த முடிவையும் விமர்சிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. களத்தில் இருக்கும் நடுவர்கள் சூழ்நிலைக்கேற்ப தங்கள் பார்வையின், புரிதலின் அடிப்படையில் விதிகளை அமல்படுத்துகின்றனர். அதில் தலையிடுவதில்லை என்பதே ஐசிசியின் கொள்கை முடிவாகும்’ என்று தெரிவித்துள்ளார். இது போன்ற மிக முக்கியமான போட்டிகளில், நடுவர்கள் நன்கு ஆலோசித்து முடிவுகளை அறிவித்தால் சர்ச்சைகளை தவிர்க்கலாம் என்பதே கிரிக்கெட் பிரபலங்கள் பலரின் கருத்தாக உள்ளது.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்