SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லஞ்சம் வெறுப்போம்

2019-07-16@ 00:15:01

நாடு முழுவதும் லஞ்சம், ஊழல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை, லஞ்சம் கொடுத்துத்தான் வாங்க வேண்டிய அவல நிலை தொடர்கிறது. லஞ்சம் இல்லாமல் அரசு  அலுவலகங்களில் சான்றிதழ் வாங்குவது இன்றைய நாளில் குதிரைக்கொம்பு.சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சம், ஊழல் குறைந்தபாடில்லை. காலத்திற்கு ஏற்ப இவை இரண்டும் வெவ்வேறு வடிவில் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே, இவற்றை ஒழிப்பதில் பெரும் சவால்   ஏற்படுகிறது. கடந்த வாரம் வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, ‘‘சென்னை, மதுரை மாநகராட்சி அலுவலகங்கள் லஞ்சம், ஊழலில் திளைக்கின்றன. தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. ஊழலில் ஈடுபடும் பொது  ஊழியரை சமூக விரோதியாக அறிவிக்கலாம்...’’ என அதிரடியாக கருத்து தெரிவித்தது. அரசு சேவைகளை சாமானிய பொதுமக்கள் பெறுவதில் நடைபெறும் ஊழல் குறித்து கடந்த ஆண்டு நடந்த ஆய்வில், தமிழகம் முதலிடம் பெற்றதை  எளிதில் மறந்து, கடந்து விடமுடியாது. இந்தப் பிரச்னைக்கு எப்படி தீர்வுகாண்பது?லஞ்சம் குறித்து புகார் அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்பதை முதலில் உறுதி செய்யவேண்டும். அப்படி செய்தால் எங்கெல்லாம் லஞ்சம் தலைதூக்கியுள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்களுடன் அதிகளவில் புகார்கள் குவியலாம். அந்த புகார்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் கொடுத்தால் / வாங்கினால் சட்டப்படி தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் மனதில் பதிந்தால் தான் இந்தப் பிரச்னையை ஓரளவுக்காவது ஒழிக்க முடியும்.

கணினிமயமாக்கல், ஆன்லைன் முறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்தினாலும் ஊழல் குறையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். எளிதாக காரியம் முடிந்து விடுகிறது என்பதற்காக ஒரு சிலர், சம்பந்தப்பட்ட  துறையினருக்கு லஞ்சம் கொடுக்கின்றனர். இதனால் நேர்மையான முறையில் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வாங்க வேண்டும் என நினைப்பவர்களிடம், அதிகாரிகள் லஞ்சத்தை எதிர்பார்க்கின்றனர்.சார் பதிவாளர் அலுவலகம், காவல் துறை, மாநகராட்சி என பல்வேறு துறைகளில் லஞ்சம் தலைதூக்கி உள்ளது. தமிழகத்தில் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கக்கூடிய துறைகளில் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களில்  புரோக்கர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. சில அதிகாரிகள் நேரிடையாக லஞ்சம் வாங்காமல், புரோக்கர்கள் மூலமே வாங்குகின்றனர். அதனால் லஞ்ச வழக்குகளில் கீழ்மட்ட அதிகாரிகள், புரோக்கர்கள் மட்டுமே சிக்குகின்றனர்.லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை அரசு அதிகப்படுத்த வேண்டும். இவற்றை ஒழிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. மக்களை விட அதிகாரிகளுக்கு அந்த பொறுப்பு அதிகம் வேண்டும். தேசம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு  திறமையான, நேர்மையான அரசு அலுவலகங்கள் தேவை. அதிலும்,  லஞ்சத்தை வெறுக்கும் மனப்பான்மை தேவை; அப்போது தான் லஞ்சத்தை வேரறுக்க முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்