SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை

2019-07-16@ 00:07:13

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய உலக கோப்பை பைனலில், அதிக பவுண்டரி விதி அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை நழுவவிட்டதால் இதயமே நொறுங்கிவிட்டது போல உணர்கிறோம் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், போட்டியை நடத்திய இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. நிகோல்ஸ் 55, லாதம் 47, கேப்டன் கேன் வில்லியம்சன் 30, கப்தில், நீஷம் தலா 19 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ், பிளங்கெட் தலா 3, ஆர்ச்சர், வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவரில் 241 ரன் எடுத்து ஆல் அவுட்டானதால், ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 84 ரன் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பட்லர் 59, பேர்ஸ்டோ 36, ராய் 17 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குசன், நீஷம் தலா 3, ஹென்றி, கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் 86 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இங்கிலாந்து தடுமாறிய நிலையில், ஸ்டோக்ஸ் - பட்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.

நீஷம் வீசிய 49வது ஓவரின் 4வது பந்தில் ஸ்டோக்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை எல்லைக் கோட்டருகே நின்றிருந்த போல்ட் அபாரமாக பிடித்தாலும், அவரது கால் துரதிர்ஷ்டவசமாக பவுண்டரியை மிதித்ததால் சிக்சராக அமைந்தது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து போல்ட் வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தை ஸ்டோக்ஸ் சிக்சருக்கு தூக்கியதும், அடுத்த பந்தில் ரன் அவுட் செய்வதற்காக எறிந்த பந்து ஓவர் த்ரோவாக அமைந்து 6 ரன் கிடைத்ததும் ஸ்கோரை சமன் செய்ய இங்கிலாந்துக்கு உதவியது.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் இன்னிங்ஸ்களின் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்ததால், சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. போல்ட் வீசிய அந்த ஓவரில் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் - பட்லர் இணை 15 ரன் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, 6 பந்தில் 16 ரன் எடுத்தால் சாம்பியன் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் சரியாக 15 ரன் மட்டுமே எடுக்க சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்தது. ஆர்ச்சர் வீசிய ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், 2வது ரன் எடுப்பதற்காக ஓடியபோது கப்தில் ரன் அவுட்டானார்.உலக கோப்பை விதிகளின்படி, சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் அதிக பவுண்டரி அடித்த அணியே வெற்றி பெற்றதாக தீர்மானிக்கப்படும். அந்த அடிப்படையில் 26-17 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி புதிய சாம்பியனாகி கோப்பையை முத்தமிட்டது. ஒரு நேர்த்தியான த்ரில்லர் திரைப்படத்தை விடவும் சுவாரசியமான திருப்பங்களுடன் களத்தில் இருந்த வீரர்களையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்த பைனல் குறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவது:வெற்றிக்காக இறுதி வரை போராடியது திருப்தி அளிக்கிறது. எங்கள் வீரர்களின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது. தொடர் முழுவதுமே முனைப்புடன் விளையாடினோம். சூப்பர் ஓவரும் சரிசமனில் முடிந்து, அதிக பவுண்டரி அடிப்படையில் சாம்பியன் பட்டம் கை நழுவியது மிகுந்த வேதனையாக உள்ளது. உண்மையில் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. இதயமே நொறுங்கிவிட்டது போல உணர்கிறோம். அதே சமயம், விதிகளை மதிக்க வேண்டும். எங்கள் இன்னிங்சில் எத்தனை பவுண்டரி அடித்தோம் என்ற கணக்கு கூட என்னிடம் இல்லை. உலக சாம்பியன் யார் என்பதை இப்படி பவுண்டரி விதி தான் தீர்மானிக்கப் போகிறது என்று யாருமே நினைத்திருக்க முடியாது. இதை நானும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம், இந்த வெற்றிக்கு இங்கிலாந்து அணி முழு தகுதி வாய்ந்தது தான்.இவ்வாறு கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

‘ஓவர் த்ரோ’ சர்சை!
நியூசிலாந்து அணியின் வெற்றியை தட்டிப் பறித்த முக்கிய திருப்பு முனை என்றால், அது ஓவர் த்ரோவில் வழங்கப்பட்ட 6 ரன் தான். போல்ட் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தை  அடித்த ஸ்டோக்ஸ் முதல் ரன்னை பூர்த்தி செய்து 2வது ரன் எடுக்க ஓடியபோது, கப்தில் எறிந்த பந்து ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டுத் தெறித்து எல்லைக் கோட்டை கடந்தது. இதற்கு நடுவர்கள் 6 ரன் வழங்கினர். ஆனால் விதி 19.8ன் படி, பந்து மட்டையில் பட்டு ஓவர் த்ரோவாக அமைந்ததால் 2வது ரன்னை கணக்கில் கொண்டிருக்கக் கூடாது. அப்படி செய்திருந்தால் இங்கிலாந்துக்கு 5 ரன் தான் கிடைத்திருக்கும். நியூசிலாந்து அணியும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி இருக்கலாம். சூப்பர் ஓவருக்கான அவசியமே இருந்திருக்காது. நடுவர்களின் இந்த தவறால் நியூசி. அணி உலக கோப்பையையே பறிகொடுத்துள்ளது.

* ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் வார்னர், வங்கதேசத்துக்கு எதிராக 166 ரன் விளாசி முதலிடம் பிடித்தார். ஜேசன் ராய் (153 ரன், இங்கி.), ஆரோன் பிஞ்ச் (153 ரன், ஆஸி.), இயான் மோர்கன் (148 ரன், இங்கி.), வில்லியம்சன் (148 ரன், நியூசி.) அடுத்த இடங்களை பிடித்தனர்.

* அதிக சிக்சர் விளாசியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 22 சிக்சர்களுடன் முதலிடம் பிடித்தார். பிஞ்ச் (18), ரோகித் (14), ஜேசன் ராய் (12), கிறிஸ் கேல் (12), பென் ஸ்டோக்ஸ் (11), பேர்ஸ்டோ (11) அடுத்த இடங்களை பிடித்தனர்.

உலக கோப்பை அணியில் ரோகித், பூம்ரா தேர்வு
உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய உலக அணியை வர்ணனையாளர்கள் இயான் பிஷப், இயான் ஸ்மித், இசா குஹா, கிரிக்கெட் எழுத்தாளர் லாரன்ஸ் பூத், ஐசிசி பொது மேலாளர் (கிரிக்கெட்) ஜெப் அலார்டைஸ் ஆகியோரடங்கிய குழு தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்