SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடாது வெறுப்பு

2019-07-15@ 02:17:01

செம்மொழி தமிழை சிதைக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ, அனைத்தையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் மொழி சார்ந்த பிரச்னைகளில் எப்போதுமே விட்டுக் கொடுத்ததில்லை.  தமிழகத்தில் இந்தி திணிப்பு நடந்தபோது மாநிலமே பொங்கி எழுந்தது. தமிழை காக்க தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த தலைவர்களின் போராட்டங்களும், மாணவர்களின் எழுச்சியும் அப்போதைய மத்திய அரசை பணிய வைத்தன. மொழியின் நலனே முக்கியம் என முழங்கிய திராவிட பாரம்பரியத்தின் முன்னர் மத்திய அரசுகள் இதுநாள் வரை மண்டியிட்டே நின்றன.ஆனால் தற்போது நடக்கும் ஆட்சியின் பலவீனத்தை அறிந்து கொண்ட பாஜ அரசு, மெல்ல மெல்ல இந்தியை அரங்கேற்றம் செய்கிறது. அதன் முதற்படி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர்களை திணிப்பதாகும். அதிலும் குறிப்பாக ரயில்வேயில் இந்தி பேசும் வடநாட்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதை தொடர்ந்து தபால்துறையிலும் இந்தியின் கிளைகள் படரவிடப்பட்டுள்ளன.தபால்துறையில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, தபால் உதவியாளர் உள்ளிட்ட ஆயிரம் பணியிடங்களை நிரப்பிட நேற்று நாடு முழுவதும் தேர்வு நடந்தது. இத்தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இத்தேர்வை எழுத முடியாது என கூறியிருப்பது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. தென்மாநிலங்களில் உள்ளவர்கள் மத்திய அரசு பணிகளுக்கு செல்வதை தடுப்பதே இந்த உத்தரவின் நோக்கமாகும்.

தமிழக இளைஞர்களின் வாய்ப்புகளை தட்டி பறிப்பதோடு, தமிழக பணியிடங்களில் வடநாட்டவரை அமர்த்தவும் இது வழிவகுக்கும். மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டை அவசரமாக அணுகியுள்ளனர். தேர்வை நேற்று திட்டமிட்டபடி நடத்த உத்தரவிட்ட ஐகோர்ட், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. மத்திய அரசு பதில் அளித்த பின்னர் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மருத்துவ துறையே மழுங்கிப்போனது. ஆயிரம் கனவுகளோடு மேல்நிலை கல்வியை முடிக்கும் தமிழக மாணவர்கள், நீட் தேர்வில் தோற்று மருத்துவ படிப்பையே மறக்கும் சூழல் நிலவுகிறது. அதன் தொடர்ச்சியாக ரயில்வே மற்றும் தபால்துறைகளில் வடநாட்டவர்களின் வருகைக்காக இந்தி என்னும் மாயவலைகள் பின்னப்படுகின்றன. இந்தியாவை இந்தி நாடாக்கும் முழு முயற்சிகளில் மத்திய அரசு சளைக்காமல் ஈடுபடுவது கண்கூடாகத் தெரிகிறது. இது தமிழக மக்களிடையே வெறுப்பை தான் ஏற்படுத்தும். அரசியலமைப்பு சட்டம் அங்கீகரித்த மொழிகளின் சமத்துவம் பேணிகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமைகளில் ஒன்றாகும். மத்திய அரசு பணியிட தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட 8-வது அட்டவணையில் இடம் பெற்ற 22 மொழிகளிலும் வினாத்தாள் தருவதே இந்திய இறையாண்மைக்கு நலம் சேர்க்கும். அந்த வகையில் தபால்துறை தேர்வுகளில் மீண்டும் தமிழுக்கு மணிமகுடம் சூட்டப்படுவதே சாலச்சிறந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்