SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு கொடுக்கும் புதிய டார்ச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-13@ 00:25:36

‘‘சங்க பெயரை சொல்லி ஒரு ஆசிரியர் டிமிக்கி கொடுத்துட்டு வர்றாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டத்தில் சங்கத்தின் பெயரை கூறிக்கொண்டு பள்ளிக்கு வராமல் பல ஆசிரியர்கள் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். அதில் முதன்மையான இடத்தில் பணத்தின் மறுபெயரை கொண்ட சிவப்புக்கட்சியை சேர்ந்தவர் தோளில் தொங்கும் பையுடன் சுற்றி சுற்றி வருவாராம். வேலூர் மாநகர எல்லையான பாகாயம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் அவர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கூட்டமைப்பின் உள்ளூர் நிர்வாகத்தில் இருப்பதால் அவரை யாரும் கண்டுகொள்வதில்லையாம். அப்படி யாராவது அதிகாரி கேள்வி கேட்டால் அவர் மீது பெட்டிஷன் பறக்குமாம். அல்லது போராட்ட அறிவிப்பு நோட்டீஸ் வெளியாகுமாம். அப்போதும் எடுபடாவிட்டால் முன்னாள் எம்எல்ஏவான தனது மனைவியின் பெயரை கூறி மிரட்டுகிறாராம். இந்த பூனைக்கு மணி கட்டுவது யார் என்று சக ஆசிரியர்களே குமுறுகின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா.
  ‘‘கோவை மண்டல மின்வாரிய புதிய தலைமை பொறியாளர் ஆபிசுக்கே வர்றதில்லைன்னு புகார் வருதே..’’
 ‘‘ஆமா.. கடந்த மாதம் தான் பதவி ஏற்றார்.  அன்றிலிருந்து இன்று வரை 10 நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு  வந்துள்ளார். ஒரே ஒரு மீட்டிங் நடத்தியிருக்கிறார். ஏதாவது ஒரு  காரணத்தைக்கூறி, ஆபீசுக்கு விடுப்பு எடுத்துவிட்டு பறந்துவிடுகிறார்.  அதனால், இவர் கைெயழுத்து போட வேண்டிய முக்கிய கோப்புகள் அனைத்தும் தேங்கி  கிடக்கிறது. வழக்கமாக, இதுபோன்ற உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள்  விடுமுறையில் செல்லும்போது, தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். அப்படி சென்றால்  கோப்புகள் தேங்காது. ஆனால், இவர் இன்-சார்ஜ் பொறுப்பை கொடுப்பதில்லை,  ஆபீசுக்கும் வருவதில்லை. அதனால், கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய தலைமை  பொறியாளர் அலுவலகம் எப்போதும் வெறிச்சோடி கிடக்கிறது. இங்குள்ள ஊழியர்கள்  இஷ்டத்துக்கு வருவதும், போவதுமாக உள்ளனர். தலை இருந்தால்தான் உடல்  இயங்கும், தலையே இல்லை, பிறகு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என  இங்குள்ள ஊழியர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். ஆபீசுக்கு வந்து பார்க்கும்  சில ‘முக்கிய’ வேலைகளை இவர் வீட்டில் இருந்தபடியே பார்ப்பதாகவும் தகவல்  வந்துகொண்டிருக்கிறது. வரும்... ஆனா வராது.. என்ற வடிவேல்  காமெடிபோல் இவரது அலுவலக வருகை உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு தரப்புல டார்ச்சர் கொடுக்கப்படுதாமே..’’
‘‘அரசின்  கல்வி தொலைக்காட்சி காமராஜர் பிறந்தநாளில் ஒளிபரப்பை துவங்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகிக்கிட்டிருக்கு... இதற்கான படப்பிடிப்பு காமராஜர் பிறந்த  மாவட்டமான விருதுநகரில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறதாம்... கல்வி  தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு, ஒளிபரப்புக்கான செலவின நிதி  கல்வித்துறையில் ஒதுக்கப்படவில்லையாம்.... கடந்த சில மாதங்களாக பல  மாவட்டங்களில் நடந்த படப்பிடிப்பிற்கான செலவுத்தொகை அந்தந்த மாவட்ட  கல்வித்துறை அதிகாரிகளின் தலையிலும், பள்ளி, கல்லூரிகளின் தலையிலும் கட்டி  சமாளித்து வந்தார்களாம். விருதுநகர் மாவட்டத்துல நடைபெறும் படப்பிடிப்பிற்கான செலவு 30 லகரத்தை  தாண்டுகிறதாம்... நிதி ஒதுக்கீடு இல்லாததால் மாவட்டத்தில் உள்ள நான்கு  கல்வி மாவட்ட அதிகாரிகள் தலையில் கட்டி, அவர்கள் மூலம் தனியார் பள்ளி,  கல்லூரிகளில் விளம்பரத்தொகை என்ற கணக்கில் வசூலிக்க வேலை நடக்குதாம்...  அதிகாரிகளும் அரசை பகைக்க முடியாதே என்ற கோணத்தில் கையை பிசைந்து  வருகிறார்கள். தொலைக்காட்சி சேனல் துவங்க நினைத்தால் அதற்கு நிதி  ஒதுக்காமல் இப்படியா எங்களை டார்ச்சர் பண்ணுறது. இருக்கிற வேலையில இந்த  வேலை வேறயா என கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில ஒரே பீலிங்காம்...’’  என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்குமான அதிகார போட்டி எப்பிடி இருக்கு..’’
‘‘அது இப்போதைக்கு முடிவது போல் இல்லை. உயர்நீதிமன்றம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அமைச்சரவை  அறிவுறுத்தியபடி செயல்பட வேண்டும், கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம்  கிடையாது என கூறியது. இதனை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம், கிரண்பேடி  ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர். இதனை விசாரித்து  இறுதியாக ஒரு தீர்ப்பினை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  மீண்டும் சுத்தலில் விட்டுள்ளதாக சட்டநிபுணர்கள் கருத்து  தெரிவித்திருக்கின்றனர்.  மீண்டும் உயர்நீதிமன்றத்திலே மேல்முறையீடு  செய்யலாம் என கூறியுள்ளதன் மூலம் பிரச்னை முடிந்தபாடில்லை. உள்துறை  அமைச்சகம் உயர்நீதிமன்றத்திலே மேல்முறையீடு செய்யுமா, அப்படியே  விட்டுவிடுமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கிரண்பேடியோ, தன்னால்  தற்போதைக்கு எதுவும் தெரிவிக்கமுடியாது. புதுச்சேரி மக்கள் நலனில்தான்  முன்னுரிமை உள்ளதாக கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் புதுச்சேரி  யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும், இல்லையெனில் மாநில  அந்தஸ்து பெறுவதே பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். மத்தியில் பாஜ  இருப்பதால், தற்போதைக்கு இது சாத்தியமில்லை’’ என்றார் விக்கியானந்தா..


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்