SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி உறுப்பினர்கள் சேர்த்த கைத்தறி நெசவாளர் சங்கங்களில் பல கோடி ஊழல்

2019-07-12@ 00:31:24

* கிடைத்ததை உண்ணும் அவலத்தில் நெசவாளர்கள்
* துறை மானிய கோரிக்கையில் தீர்வு கிடைக்குமா?
சென்னை: தமிழகத்தில், தொழில் கெட்டு, வாழ்க்கை சீரழிந்து, உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் கையில் கிடைத்ததை உண்டு வாழும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் கிராமங்களில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்கள்.அப்பாவி நெசவாளர்கள் பசியில் சாவதைத் தடுக்க ஆங்காங்கே ஊர் மக்களே கூடி கஞ்சித் தொட்டி திறக்கும் பரிதாப நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 2001-06ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியில் இருந்தபோது விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், கடம்பத்தூர் ஆகிய ஒன்றியங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி முக்கிய தொழிலாக நடந்து வருகிறது. ஆடையை உற்பத்தி செய்து மற்றவர்களின் மானத்தைக் காக்கும் இவர்கள், தங்களது இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி உழைத்தால்தான் உணவு. வேறு வழியில் வருமானம் கிடையாது. ஆனால், உழைப்புக்கேற்ற போதிய கூலி கிடைக்காத நிலை. அதிமுக அரசும் கண்டுகொள்ளவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல், கையில் காசும் இல்லாமல் குமைந்து போன நெசவாளர் குடும்பங்கள் பசியால் தவித்தன. இதை பார்த்து கொதித்தெழுந்த திமுகவினர், ஊர் ஊராக கஞ்சித் தொட்டி திறக்க ஆரம்பித்தனர். இது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பில் ஆழ்த்தியது.
இப்போது கைத்தறி நெசவாளர்கள் நெய்து கொடுத்த சேலையை அரசு கொள்முதல் செய்யாததால் கூலியும் இல்லை. தொடர்ந்து  வேலையும் இல்லை. இப்போது, அதிமுக ஆட்சியில் மீண்டும் மக்களே கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, நெசவாளர் சங்கங்களில் உள்ள போலி உறுப்பினர்களை களைந்து, கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். மேலும், ஊழலில் திளைக்கும் அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கை.கைத்தறி நெசவுக்கு தேவையான நூல், நெசவு கூலி உள்ளிட்ட மொத்த செலவினங்கள், ஒரு சேலைக்கு ₹330 என வைத்துக் கொள்வோம். அதை 20 சதவீதம் லாபம் கொடுத்து ₹396க்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. நிகர லாபம் சங்கத்திற்கு ₹66 கிடைக்கிறது. ஒரு உறுப்பினர் வாரம் 6 சேலை நெசவு செய்ய இயலும். ஒரு வாரத்தில் ஒரு உறுப்பினர் மூலம் சங்கத்திற்கு வருவாய் ₹396. ஒரு சங்கத்தில் 100 உறுப்பினர்கள் என்றால் ஆண்டுக்கு அந்த சங்கத்திற்கு, வருவாய் ₹20 லட்சத்து 59,200 கிடைக்கிறது. இது நியாயமாக நேர்மையாக கணக்கில் காட்டி பெறப்படும் தொகை. இதில், நெசவு என்றால் என்ன என்றே தெரியாத உறுப்பினர்களும் அடக்கம். நெசவுத் தொழில் செய்யாத உறுப்பினர்களும் சேலை நெய்து கொடுப்பதாக கணக்கு காட்டத் தான் கூட்டுறவு சங்கம் இருக்கிறதோ எனும் அளவில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டதுஅதாவது, உறுப்பினர் நெசவு செய்து தரவேண்டிய கைத்தறி சேலைக்கு பதிலாக, விசைத்தறியில் சேலை வாங்கப்பட்டு, அந்த சேலை உறுப்பினர் நெசவு செய்ததாக, கணக்கில் உத்தரவாதம் பெற்ற நபர் மூலம் (இவர்களே அந்த கையெழுத்தை போட்டுக் கொள்வதும் உண்டு) வரவு வைக்கப்படும். விசைத்தறியில் வாங்கப்படும் சேலை விலை ₹210. ஆனால் கணக்கில் உற்பத்திச் செலவு ₹330 ஆக காட்டப்படுகிறது. இதில் ஒரு சேலைக்கு ₹120 வீதம் கணக்கில் வராமல் லாபமாகிறது. ஒரு உறுப்பினர் வாரம் 6 சேலை வீதம் ஆண்டிற்கு 312 சேலை நெய்ததாக கணக்கு எழுதப்படுகிறது.

100 உறுப்பினர்கள் ஒரு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் போலியாக இருந்தால், அரசை ஏமாற்றி விசைத்தறி துணியை, கைத்தறி என்று வரவு வைத்து ஒரு வாரம், ஒரு சங்கம் மட்டும் எடுக்கும் ஊழல் பணம் ₹34 லட்சம்.தமிழகத்தில் மொத்தம் 1161 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த கைத்தறி சங்கங்கள் விசைத்தறி சேலையை, கைத்தறி சேலையாக கணக்கு காட்டி, நெசவு தெரியாத போலி உறுப்பினர்களை வைத்து, பல கோடி ரூபாய் வரை ஊழல் செய்து வருவதாக கூறப்படுகிறது.எனவே, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

பணம் கொடுத்தால் இலவச மின்சாரம்
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் 200 யூனிட் வரை (இரண்டு மாதங்களுக்கு) அரசின் இலவச மின்சாரம் கிடைக்கும். அந்த உறுப்பினர் இலவச மின்சாரம் பெற மாவட்ட இயக்குனர் ஒப்புதல் கடிதம் சமர்ப்பித்து மின் வாரியத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலையொட்டி, ஒவ்வொரு சங்கத்திலும் 200 உறுப்பினர்கள் வரை புதிதாக கட்டாயமாக சேர்க்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் அனைவரும் நெசவு செய்ய தெரியாத, ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தறியே இல்லாத இவர்களுக்கும், குறைந்தது ₹500 முதல் ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு, இலவச மின்சாரம் வழங்க கைத்தறி துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் அதிகாரிகளுக்கு வருமானம் இருந்தாலும், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பிழைப்பிற்காக ‘டை’ அடிக்கும் பரிதாபம்
கைத்தறி நெசவாளர்கள் பலர் தங்களது குடும்பத்தை காப்பாற்ற, மாற்றுத்தொழிலை நாடிச் சென்றாலும் போதிய கல்வித்தகுதி இல்லை என்ற காரணத்தால், தனியார் தொழிற்சாலைகளுக்கு செக்யூரிட்டி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது அவர்கள் 40 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு தலைமுடி நரைத்துவிட்டது. இவர்களை வயதானவர்கள் என்று கருதி பல தொழிற்சாலைகள் பணி வழங்க மறுத்துவிடுகின்றன. இதனால், பலர் தலைக்கு ‘டை’ அடித்துக் கொண்டு வேலை தேடும் அவலம் நிலவுகிறது.

இதுகுறித்து செக்யூரிட்டி வேலை பார்க்கும் நெசவாளர் ஒருவர் கூறுகையில், ‘‘நெசவுத் தொழில்தான் எங்கள் வாழ்க்கை என நம்பி இருந்தோம். கூலி பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறையால் தொழில் நலிவடைந்து விட்டது. இதனால், மாற்று வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வயது கடந்து முடி நரைத்து விட்ட பலருக்கு தொழிற்சாலைகளில் செக்யூரிட்டி வேலை கூட வழங்க மறுக்கின்றனர். இதனால், இளைஞர்கள் போல இருக்க தலைக்கு ‘டை’ அடித்து கொண்டு பலர் வேலை தேடி வருகின்றனர்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்