SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட மனு தாக்கல் செய்த வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு: பேரவை செயலாளர் சான்றிதழ் வழங்கினார்

2019-07-12@ 00:31:07

சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட மனு தாக்கல் செய்த வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான சான்றிதழை தமிழக சட்டப்பேரவை செயலாளர் நேற்று வழங்கினார். தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), வி.மைத்ரேயன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), டி.ராஜா (சிபிஐ), உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.
அதன்படி, ஜூலை 1ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஜூலை 8ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீது ஜூலை 9ம் தேதி பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுவை திருப்ப பெற ஜூலை 11ம் தேதி கடைசி நாள் ஆகும். 6 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால், ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் திமுக, அதிமுக சார்பில் 3 வேட்பாளர்கள் வெற்றிபெறுவது உறுதியானது. அதன்படி திமுக சார்பில் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் வைகோவும் மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.இந்த நிலையில் வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்று பேசப்பட்டது. இதனால் திமுக சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, புதியதாக மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வேட்பு மனு பரிசீலனையில் வைகோ மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் என்.ஆர்.இளங்கோ தனது மனுவை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றார். வேட்புமனு வாபஸ் பெற நேற்று 3 மணி வரை கால அவகாசம் இருந்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட மனு தாக்கல் செய்திருந்ததால், நேற்று மாலை 3 மணிக்கு 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதி முடிவடைகிறது. இதனால் ஏற்படும் காலியிடங்களுக்கு, மு.சண்முகம் (திமுக), பி.வில்சன் (திமுக), வைகோ (மதிமுக), முகமதுஜான் (அதிமுக), ந.சந்திரசேகரன் (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக) ஆகியோர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 6 பேரும் நேற்று மாலை 3 மணிக்கு தலைமை செயலகம் வந்து, சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனை சந்தித்து, மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் மற்றும் வைகோ சான்றிதழ் பெற்றபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் அன்புமணி ஆகியோர் சான்றிதழ் பெறும்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மூன்று பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்