SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டியூப்-டியூப்லெஸ் எந்த டயர் பெஸ்ட்?

2019-07-07@ 00:20:12

கார் உள்ளிட்ட வாகனங்களின் மைலேஜ், கையாளுமை, சொகுசு என பல்வேறு அம்சங்களிலும் டயர்களின் பங்கு இன்றியமையாதது. டயர்களை தேர்வு செய்வதிலும், பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலான வாகனங்களில் டியூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. டியூப் டயரைவிட டியூப்லெஸ் டயர்கள் பல்வேறு விதங்களில் நன்மை அளிக்கின்றன. இந்த அவசர உலகில் பாதுகாப்பு, எளிமையான பழுது நீக்கும் முறை ஆகியவற்றால் டியூப்லெஸ் டயர்கள் முன்னிலை பெற்றுள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையை டியூப்லெஸ் டயர்கள் கணிசமாக குறைத்துள்ளன. இந்த டயர்களின் சாதக, பாதகம் பற்றிய ஒரு ரவுண்ட்அப்...

1. டியூப்லெஸ் டயர்களில் மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருப்பது, பஞ்சரானால்கூட சிறிது தூரம் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச்செல்ல முடியும். அதாவது, உடனடியாக டயரில் காற்றழுத்தம் குறையாது. அருகில் உள்ள மெக்கானிக் ஷாப் வரை ஓட்டிச்செல்ல வாய்ப்பு தருகிறது. இதனால், நடுவழியில் நின்று அவதிப்படுவதை அவஸ்தையை குறைகிறது. குறிப்பாக, பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைகிறது.
2. டியூப்லெஸ் டயர்கள் பாதுகாப்பில் மட்டுமல்ல, கார், பைக்கிற்கு சிறந்த கையாளுமையை தருகிறது. உட்புறத்தில் டியூப் இல்லாத காரணத்தால், ஸ்டீயரிங் வீல் ஓட்டுவதற்கு மென்மையாகவும், இலகுவான உணர்வையும் வாகன ஓட்டிக்கு வழங்கும். இதனால், ஓட்டுனர் அயர்ந்து போவதை தவிர்க்கிறது.
3. டியூப்லெஸ் டயர்களில் காற்றழுத்தம் சீராக இருக்கிறது. மேலும், டியூப் டயர்கள் போன்று உடனடியாக குறையாது என்பதும், மற்றொரு மிகப்பெரிய சாதக விஷயம், டியூப் டயர்களைவிட சற்றே அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. உராய்வு குறைவதால், வாகனத்தின் எரிபொருள் மிச்சமாகிறது.
4. டியூப் டயர்கள் பஞ்சர் ஏற்பட்டால் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று சக்கரத்தை கழற்றி மாட்டிதான் பஞ்சரை சரி செய்ய இயலும். ஆனால், டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பஞ்சர் ஏற்பட்டாலும் சக்கரத்தை கழற்ற வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீரை ஸ்பிரே செய்து பஞ்சரை கண்டறிந்து அப்படியே பஞ்சரை சரிசெய்துவிட முடியும்.
5. டியூப் டயர் பஞ்சரானால் நடுரோட்டில் உதவிக்குகூட ஆள் இல்லாமல் கழற்றி மாட்ட வேண்டி இருக்கும். டூ வீலராக இருந்தால் நிலைமை இன்னும் சிக்கல். ஆனால், டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பஞ்சர் ஒட்டுவதற்கு அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பிற்கு செல்லும் நேரம் விரயமாவதும் தவிர்க்க முடியும்.
6. டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தை ஓட்டும்போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ரிம்மில் பாதிப்பு ஏற்பட்டால், காற்றழுத்தம் குறைந்து கொண்டே இருக்கும். எனவே, ரிம் பாதிக்கப்படாத வகையில் ஓட்டுவதும், பராமரிப்பதும் அவசியம்.
7. இன்று டூவீலர் வைத்திருக்கும் பலர் டியூப் டயருக்கு பதிலாக டியூப்லெஸ் டயரை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஸ்போக்ஸ் வீல் என்றாலும், அலாய் வீல் என்றாலும் அதன் ரிம் அமைப்பு டியூப்லெஸ் டயருக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே மாற்றவும். சிலர் சொல்வது போல், டேப் போட்டு ஒட்டிவிட்டு டியூப்லெஸ் டயரை போட வேண்டாம்.
8. ரிம் அமைப்பு சரியில்லாமல் டியூப்லெஸ் டயரை மாற்றினால், சில சமயம் விபத்துக்கு வழி வகுக்கும். எனவே, மிக கவனமாக இதில் முடிவு எடுக்க வேண்டியது அவசியம். பலர், டியூப்லெஸ் டயரை மாற்றலாம் என்று கூறினாலும், கைதேர்ந்த மெக்கானிக்கிடம் ஆலோசனை பெற்றே முடிவு எடுக்க வேண்டும். ரிம்முடன் சேர்த்து மாற்றினால் மட்டுமே பலன் தரும்.
9. டியூப்லெஸ் டயருக்குள் டியூப் போடுவதையும் இப்போது சிலர் செய்கின்றனர். இதுவும் தவறான விஷயம்தான். இது தேவையில்லாத உராய்வு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனையும் செய்யாதீர்கள். டியூப் டயருக்கும், டியூப்லெஸ் டயருக்குமான கட்டமைப்பு, கட்டுமானம் ஆகியவை முற்றிலுமே வேறானது.
10. டியூப் டயரைவிட டியூப்லெஸ் டயர்கள் சற்று விலை அதிகம். எனினும், காரின் செயல்திறன், மைலேஜ், பாதுகாப்பு, எளிதான பழுது நீக்கும் முறை ஆகியவற்றால் சிறப்பான மதிப்பை தருகின்றன. அதேநேரத்தில், டியூப்லெஸ் டயர் இருந்தால் தினசரி ஒருமுறை பரிசோதிப்பது நல்லது. காற்றழுத்தம் சற்று குறைந்தாலும் பஞ்சர் இருக்கிறதா என்பதை கவனமாக பார்த்துவிட்டு வெளியில் எடுத்துச்செல்லுங்கள்.

கியா செல்டோஸ் புக்கிங் துவக்கம்

ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா நிறுவனம், தனது கால் தடத்தை இந்தியாவில் பதிக்கும் விதமாக, விரைவில் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்ய இருக்கிறது. அந்தவகையில், இந்தியாவிற்கான முதல் மாடலாக, எஸ்யூவி ரகத்திலான செல்டோஸ் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது. இந்த காரை கடந்த ஜூன் 20-ம்தேதி உலக வெளியீடாக, தலைநகர் டெல்லியில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரை, நாடு முழுவதும் விற்பனை செய்வதற்கான அனைத்து பணிகளையும் கியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த காருக்கான புக்கிங் 25 ஆயிரம் என்ற தொகையில் துவங்கியுள்ளது. தலைநகர் டெல்லி போன்ற சில நகரங்களில் மட்டுமே இந்த முன்பதிவு துவங்கியுள்ளது.

கியாவின் இந்த செல்டோஸ் கார், உள்நாட்டு சந்தையில் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போட இருக்கிறது. இந்திய எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் புதிய செல்டோஸ் காருக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கு, செல்டோஸின் எதிர்கால டிசைனும், அதில் வழங்கப்பட்டுள்ள பிரத்யேக தொழில்நுட்ப அம்சமுமே முக்கிய காரணம். ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெற்றிருப்பதை போன்ற ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சம் இந்த காரில் வழங்கப்பட உள்ளது. இதற்கான, பிரத்யேக சிம் கார்டை பயன்படுத்தி உலகின் எந்தவொரு மூலையில் இருந்தும் இந்த காரை இயக்கலாம். அத்துடன், ஆட்டோ இன்டெலிஜென்ஸ் நுண்ணறிவு கொண்ட வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த காரில் இணைக்கப்பட உள்ளது. இந்த அம்சத்தின் மூலம், காரில் உள்ள சில வசதிகளை, அதன் உரிமையாளர் வாய்ஸ் கமேண்ட் மூலம் கன்ட்ரோல் செய்ய முடியும்.

வென்டிலேடிங் திறன் கொண்ட இருக்கைகள், ஹீடட் ஓஆர்விஎம்கள், சன்ரூப், பெரியளவிலான நேகிஷன் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் மியூஸிக் சிஸ்டம் மற்றும் மியூசிக் ஏற்றவாறு எரியக்கூடிய மின் விளக்குகள் உள்ளிட்ட பிரிமியம் வசதிகள் இணைக்கப்பட உள்ளன. இப்புதிய செல்டோஸ் மாடல் கார், 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜெட் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய மூன்று விதமான இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார், சிங்கிள் மற்றும் டியூவல் டோன் வண்ணத்திலும் கிடைக்கும். இந்த காரின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாக 11 லட்சத்தில் இருந்து 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

தீபாவளிக்கு புது ரிலீஸ் மாருதி எஸ் பிரெஸ்ஸா


பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி சுஸுகி நிறுவனம், மிக வலுவான வர்த்தக சந்தையை தன்னுள் வைத்துள்ளது. சந்தைப்போட்டியை சமாளிக்கும் விதத்தில் தொடர்ந்து புதிய கார் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில், தற்போது புத்தம் புதிய கிராஸ்ஓவர் ரக மாடலை களமிறக்க உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பியூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில் இப்புதிய மாடல் தயாரிப்பு நிலை மாடலாக மேம்பட்டு இருக்கிறது. டிசைனில் சில மாறுதல்களுடன் இந்த கார் வர இருக்கிறது. இந்த காருக்கு ‘எஸ் பிரெஸ்ஸா’ என மாருதி பெயரிட்டுள்ளது. வரும் தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு வர இருக்கிறது. இப்புதிய பட்ஜெட் கார், எஸ்யூவி போன்ற டிசைன் அம்சங்களுடன் வர இருக்கிறது.

ஹரியானா மாநிலம், ரோதக் பகுதியில் செயல்படும் மாருதி மையத்தில்தான் இந்த காரின் அனைத்து உருவாக்கப்பணிகளும் நடந்தன. இதனால், சுஸுகி நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய ராயல்டி தொகை அளவு கணிசமாக குறையும். மாருதியின் ‘அரேனா’ ஷோரூம்கள் வாயிலாக இப்புதிய கார் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இப்புதிய காரில் மாருதி ஆல்ட்டோ கே10 காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற உள்ளது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் டோன் இன்டீரியர் முக்கிய அம்சங்களாக இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பான கார் மாடலாக இருக்கிறது. இந்த கார், பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை கொண்ட கார் மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்