SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு... மேகதாது அணை கட்டினால் உபரிநீர் கூட மேட்டூர் வராது

2019-06-26@ 12:16:37

சேலம்: காவிரியின் குறுக்கே கர்நாடகம், மேகதாது அணை கட்டினால் மழைக்காலங்களில் உபரிநீர் கூட மேட்டூர் அணைக்கு வராத நிலை உருவாகும் என்று நீர்வள ஆர்வலர்கள், அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காவிரியாறு,கர்நாடகாவில் 320 கிலோ மீட்டர், தமிழக-கர்நாடக எல்லையில் 64 கிலோமீட்டர்,தமிழகத்தில் 416 கிலோ மீட்டர் பாய்ந்து கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் காவிரியின் துணையாறுகளின் குறுக்கே கபினி, கேஆர்எஸ், ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட பெரிய அணைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைகளில் குறைந்த பட்சம் 120 டிஎம்சி நீர்,சேமிக்க முடியும். காவிரி நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி ஆண்டு தோறும் கர்நாடகம், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்.ஆனால் இதுவரை கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பெருமழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதியே நீரை திறந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் கர்நாடக அரசு, காவிரி பாய்ந்து வரும் மேகதாது என்னுமிடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்டி நீரை தேக்க முடிவு செய்துள்ளது.இதற்கான மத்திய நீர்வளத்துறையிடம் தற்போது அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளிக்க கூடாது தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.இதனை மீறி,மத்திய அரசு,கர்நாடகத்திற்கு அணை கட்ட அனுமதி அளித்தால் தமிழகத்தில் டெல்டா பாசனம் அடியோடு அழியும் அபாயம் ஏற்படும். மேட்டூர் அணைக்கு உபரி நீர்வரத்து கூட பாதித்து,குடிநீருக்கே அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் அவலநிலை உருவாகும் என்கின்றனர் நீர்வள ஆர்வலர்கள். இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது:காவிரிநீரால் தமிழகத்தின் 12 டெல்டா மாவட்டங்களில் 16.40லட்சம் ஹெக்டர் பரப்பளவு பாசனவசதி பெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து, தண்ணீர் தேவை குறையும். இதன்மூலம் 34.20 லட்சம் டன்,நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு மட்டும் 330டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதேபோல் 18 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் மேட்டூர் அணைக்கு வரும் நீர் தான். கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தினமும் ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும். இவ்வாறு ஆண்டு முழுவதும் திறக்க, குறைந்த பட்சம் 30 டிஎம்சி தண்ணீர் தேவை. ஆனால் கடந்தாண்டில் கர்நாடகம் பாசனத்திற்கும்,குடிநீர் தேவைக்கும் சேர்த்து மொத்தமாக 67 டிஎம்சி நீரை மட்டுமே வழங்கியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான் கபினி, கேஆர்எஸ் அணைகளில் திறக்கப்படும் நீரை சேமித்து, தங்கள் மாநில பாசனப்பகுதிகளுக்கு திருப்ப,கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த 40 டிஎம்சிநீரை சேமிக்கும் கொள்ளவு கொண்ட, இந்த அணை மூலம் 400 மெகாவாட் மின்உற்பத்திக்கு திட்டமிட்டு,அதற்கான நீர்மின் நிலையமும் அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற வாதத்தை அங்குள்ள அமைச்சர்களும், அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.காவிரி மேலாண்மை வாரியம்,உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு என்று எதையும் மதிக்காத கர்நாடகம்,இப்படி கூறுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

மேகதாது அணைநீரை கர்நாடகத்தின் பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக சுற்றுப்புறங்களில் உள்ள மைசூர்,சாம்ராஜ்நகர், தும்கூர் மாவட்டங்களில் ரூ.1,885 கோடியில் 490 ஏரி,குளங்களை சீரமைத்து கூடுதல் நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது.இதனால் பெருமழைக்காலங்களில் காவிரி உபரிநீர் கூட,மேட்டூர் அணைக்கு வரமுடியாத நிலையே உருவாகும்.காவிரி மேலாண்மை வாரிய இறுதி தீர்ப்பில்,இனிமேல் காவிரியின் குறுக்கே எந்த மாநில அரசும் அணை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அப்படி இருந்தும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த வேகத்தில்,அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு அதிரடியாக எடுத்திருப்பது வேதனைக்குரியது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஓடும் நீரை,இங்கேயே தேக்கி வைக்கும் வகையில் ராசிமணலில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.இப்படி நீரை சேமிப்பதற்கான பணிகளுக்கு மத்திய அரசு,துணை நின்றால் மகிழ்ச்சியோடு வரவேற்கலாம்.இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்