SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கி குவித்துள்ள அதிகாரிகளின் அதிர வைக்கும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-24@ 00:28:28

‘‘என்ன பீட்டர் ஒரு அதிகாரி டிரான்ஸ்பர் ஆனதை குடித்து கும்மாளமிட்டதோடு, அரசு கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்து ஆனந்தப்பட்ட ஊழியர்களை பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த மலரை பெயராக கொண்டவர் சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு விருப்ப மாறுதல் பெற்று சென்றாராம். அவர் பணியில் இருந்த காலத்தில் ஒவ்வொரு  துறையிலும் கட்டுப்பாடு முக்கியம் என்ற வகையில் நடந்து கொண்டாராம். இதனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதுடன் மருத்துவ தரம் மற்றும் பணியாளர்களும் நோயாளிகளிடம்  இன்முகத்துடன் நடந்து கொண்டார்களாம். இவரது கண்டிப்பு ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு டீனாக இருந்த வம்சதாராவை பின்பற்றுவது போல இருந்ததால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பணி நேரத்தில் சொந்த  வேலைகளையும் மற்ற வேலைகளையும் செய்ய முடியாமல் தத்தளித்து வந்தனர். இந்த நிலையில் மலர் பெயர் டீன் திடீரென விருப்ப மாறுதலில் சென்ற தகவல் அறிந்ததும் வேலையே செய்யாத சில ஊழியர்கள் சந்தோஷத்தில்  மிதந்துள்ளனர். அன்று இரவு, மருத்துவமனை வளாகத்திலேயே மதுவிருந்து நடந்ததாம். அப்போது போதையில் 150வது வார்டு எக்ஸாமினேஷன் ஹாலின் கண்ணாடிகளை 3 பேர் உடைத்தார்களாம். மறுநாள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த  டீன் பொறுப்பில் இருந்த துறை தலைவர், அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டியை அழைத்து விசாரித்தபோது, உண்மையை போட்டு உடைத்தாராம். இதை அறிந்த துறை தலைவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாராம்...’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘ஸ்டிரிக்டான அதிகாரியை யார் விரும்புவார்கள்... அதுதான் இந்த மது விருந்து போல. இலை கட்சியில போட்டியிட கடும் போட்டி இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுகவினரிடையே இப்போது கடும் போட்டி நிலவுகிறது. நெல்லை தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் எம்பி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நன்றி  சொல்வதற்காக சென்றாராம். அப்போது அவரது ஆதரவாளர்கள் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அவரது பெயரைக் குறிப்பிட்டு நாங்குநேரி தொகுதிக்கு வாரீர் வாரீர் என தொகுதி  முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அவரும் உற்சாகத்தில், தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்றாராம். அதிமுகவில் எல்லாம் முன்னாலேயே போஸ்டரிலும், கல்வெட்டிலும்  வந்து விடும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். காரணத்தை விசாரித்தால் நாங்குநேரி தமிழக வரலாற்றில் இரண்டாவது ஆர்கேநகர் ஆகும் போல் தெரிகிறது.. இலை தரப்பில் பணத்தை அள்ளி வீச ரெடியாக இருக்கிறார்களாம்... அதில்  குளிர்காயலாம் என்று இலை தரப்பு அடிப்பொடிகள் நினைக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘பணம் புரளும் அதில் நாமும் கொஞ்சம் சுருட்டலாம் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கும். அது அரசியலில் சகஜம்தானே... புதுச்சேரியில் என்ன புதுக்குழப்பம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரியில் ராணுவத்துக்கு உடை நெய்து கொடுத்த பிரெஞ்சு காலத்தில் இருந்து இயங்கி வரும் ஏஎப்டி பஞ்சாலை, தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதையடுத்து ஏ மற்றும் பி யூனிட்டுகள் மூடப்பட்டு, தொழிலாளர்களுக்கு லே ஆப்  வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ₹ 500 கோடி நிதி பெற்று மில்லை நவீனப்படுத்தி இயக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால  வைப்பு நிதியை கூட கொடுக்க முடியாத அளவுக்கு அரசின் நிதி நிலைமை சீரழிந்துள்ளது. ஆலை லாபகரமாக இயங்கிய போது வாங்கிய நிலத்தை விற்று தொழிலாளர்களுக்கு கடனை அடைக்கலாம் என்றால், மத்திய அரசு விற்பதற்கு அனுமதி  வழங்க மறுத்து வருவதால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல், அரசு தத்தளித்து வருகிறது. போதாதக்குறைக்கு கடந்த காலங்களில் வங்கிகளில் வாங்கிய கடன் ₹ 26 கோடியை கட்டுமாறும், தவறினால் ஆலையை ஏலத்தில் விடுவோம்  என நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதில் அரசியல் உள்குத்து இருப்பதால் பல கோடி சொத்துக்கள் உள்ள மில்லை அரசியலுக்காக பலி கொடுக்கப்போவதாக தகவல் பரவுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்காநகர ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அதிர்ச்சியில் இருக்காங்களாமே...’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா. ‘‘மதுரை மாநகராட்சியில் சமீபத்தில் நகர பொறியாளர் அலுவலக அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அந்த வகையில் நிர்வாக அலுவலர்களில் ஐவர் தங்களது வருமானத்திற்கும் அதிகமான சொத்துகள் வைத்திருப்பதை  கண்டுபிடித்தனர்.‘ஆனந்தமான பெண் அதிகாரி’ மதுரைக்குள் சிறிது சிறிதாக 60 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தது தெரிந்தது. அந்த பெண் ஊழியர் சொத்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல திருப்பதி தேவஸ்தான பெயருடன்  தொடர்புடைய ஆண் ஊழியரிடம் 70 வீடுகள் வரை சொத்து மதிப்பு இருக்கிறதாம். இவரும் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவர் பற்றிய முழுவிபரத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தோண்டி எடுத்து வைத்துள்ளனர். இதுதவிர ‘இரு பெயர்  கொண்ட’ நிர்வாக அலுவலர் வெளிப்புறங்களில் தோட்டம், பண்ணை வீடு வைத்துள்ளாராம். அவரது மகன் மூலம் மாநகராட்சி கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. ‘அறுபடை நாயகனின் வெவ்வேறு பெயர்களைக்  கொண்ட’ நிர்வாகத்தில் இருக்கும் 2 பேர் பணமாக சேர்த்து வைத்திருப்பதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மோப்பம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதால், மாநகராட்சி அதிகாரிகளிடம் பெரும்  பதற்றம் நிலவி வருகிறது என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்