SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்த பதவிக்கு அதிமுகவில் நடக்கும் அடிதடி பற்றி கூறுகிறார்: wiki யானந்தா

2019-06-23@ 02:36:24

‘‘அதிமுகவில் ஒரே அடிதடியா கிடக்காமே... என்ன விஷயம்...’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தலைபோகிற தண்ணீர் பிரச்னைக்காக உரிய நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். பதவிக்காக அடித்துப்பிடித்துக் கொள்வார்கள். ஆளும்கட்சியில் இப்படித்தான் நடக்கிறது. அதிமுகவில் ராஜ்ய சபா எம்பி பதவிக்கு குடுமிப்பிடியாக உள்ளது. ஏற்கனவே மக்களவையில் தற்போது ஒரு எம்பி மட்டுமே உள்ள நிலையில் ராஜ்ய சபா எம்பி பதவியை குறிவைத்து அதிமுகவினர் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர்.

ஜெயலலிதா இருக்கும் வரை அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போதோ இபிஎஸ், ஓபிஎஸ் என ஆளாளுக்கு ஒவ்வொருவரையும் பிடித்து கட்சித் தலைமையை நச்சரித்து வருகின்றனர். அதிமுகவிற்கு கிடைக்கும் 3 ராஜ்ய சபா எம்பி பதவிகளில் ஒன்றை பாமகவிற்கு தருவதாக மக்களவை தேர்தலுக்கு கூட்டணி வைத்தபோது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதவியை தமிழகத்தைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தர வேண்டும் என பாஜ கட்டாயப்படுத்தி வருகிறது. பாஜவுக்கும், பாமகவுக்கும் ஒன்று போனால் எஞ்சியது ஒன்றே ஒன்றுதான். நெல்லையைச் சேர்ந்த முன்னாள் ராஜ்ய சபா எம்பிக்கு மக்களவை தேர்தலில் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் தோற்றுப் போனதால் இந்த ராஜ்ய சபா எம்பி பதவிக்கு குறி வைத்துள்ளார்.

சட்டப்புலியான இவர் ஓபிஎஸ் மூலம் இதற்காக காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே ராஜ்ய சபா எம்பி பதவி வகித்தவர் என்பதால் தனக்குத்தான் மீண்டும் தர வேண்டும் என்கிறாராம். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கேபி.முனுசாமி, மைத்ரேயன் என பலரும் ராஜ்ய சபா எம்பி பதவி கேட்போர் பட்டியலில் உள்ளனர். இப்படி ஒரு பதவிக்கு அதிமுகவில் அடிதடி சண்டை போடாத குறையாக உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கூடங்குளம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துகிற சத்தத்தையே காணோமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  
‘‘நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ஏற்கெனவே அணு உலைகளை கண்டித்து வருடக் கணக்கில் தொடர் போராட்டம் நடந்தது. இந்நிலையில் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவுகளை கூடங்குளத்திலேயே இருப்பு வைக்க அணுசக்தி கழகம் முடிவு செய்தது. இதற்கான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

இதை கண்டித்து அணு உலை எதிர்ப்பாளர்களும், எதிர்க்கட்சிகளும் கண்டன குரல் எழுப்பின. போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இந்த கூட்டத்தை ராதாபுரத்தில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், போலீசும் தயக்கம் காட்டியது. இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறு தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைத்துள்ளது.

ஏற்கெனவே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மத்தியில் ஆளும் பாஜ படுதோல்வியை சந்தித்தது. இவ்வாறு தொடர்ந்து எதிர்ப்பை சம்பாதித்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் சட்டசபை தேர்தலையும் எதிர்கொள்வது கடினம் என உளவுத்துறையும் அறிக்கை அனுப்பியதாம். இதனால் தான் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏதாவது பரபரப்பான தகவல் இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேர்தலை விடு... உள்ளாட்சிகள்ல நடக்கிற முறைகேடுகள், ஊழல் விவகாரம்தான் இப்ப கொடி கட்டி பறக்குது... அதாவது, தமிழகத்துல உள்ளாட்சி தேர்தல் நடக்காததால, தனி அதிகாரி தலைமையில் உள்ளாட்சி நிர்வாகம் நடந்துட்டு வருது... இதனால சில ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காட்டுல கரன்சி மழை பொழியுதாம்... ராமநாதபுரம் மாவட்டத்துல 60 பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய பெரிய யூனியனாக கடலாடி உள்ளது.

இங்கு வட்டார ஊராட்சியை கவனிக்கும் பிடிஓ ஒருவர் நீண்ட விடுப்பில் சென்று விட்டாராம்... இதனால கிராம ஊராட்சிகளை கவனிக்கும் பெண் பிடிஓ கூடுதலாக கவனித்து வருகிறாராம்... இரு பொறுப்புகளை கவனித்து வருவதால், ஏழை மக்கள் கட்டக்கூடிய அரசு வீடுகளுக்கு அனுமதி மற்றும் அனைத்து ஒப்பந்த பணிகளுக்கும் குறிப்பிட்ட சதவீதத்தில் கமிஷன் கொடுத்தால் மட்டுமே கோப்புகளில் கையெழுத்து போடுகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ம்... அப்புறம்...’’
‘‘சொல்றேன்... இதுபோக கிராமங்களில் தெருவிளக்கு அமைத்தல், குப்பைகள், கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் தொட்டி, குழாய் சீரமைத்தல், மின்கட்டணம், குடிநீர் வரி கட்டுதல் போன்றவற்றிற்கு தேவைப்படும் நிதியை பெற, ஊராட்சி கணக்கு காசோலையில் பிடிஓவிடம் கையெழுத்து வாங்க வேண்டுமாம்... இதற்கும் கறாராக கமிஷன் கேட்பதால் பல ஊராட்சி செயலர்கள் தலைதெறித்து ஓடுறாங்களாம்... தினந்தோறும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும்போது, தனது கைப்பையில் குறைந்தது 5 டிஜிட் பணம் இருந்தால்தான், பெண் பிடிஓ நிம்மதியாக வீட்டுக்கு போகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நில அளவை துறையினர் கலக்கத்தில் இருக்காங்களாமே..’’
‘‘அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதில், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் கலந்து கொண்டு, வருவாய் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறார்.

மேலும், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஜமாபந்தியில் அரக்கோணம் டவுன் பகுதி நில அளவையர் பிரிவில் ஆயிரக்கணக்கில்  கொடுத்தால்தான் பட்டா தொடர்பான எந்த பணியும் நடப்பதாக ஒருவர், சப் கலெக்டரிடம் புகாராக கூறினார்.

அதற்கு வாய்மொழியாக எதையும் சொல்ல வேண்டாம். புகார் தெரிவித்தால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் கூறினார். இதையடுத்து, புகார் கூறியவர் எழுத்துப்பூர்வமாக நிலஅளவையர் துறையில் பணம் கொடுத்தது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட சப் கலெக்டர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். யார் மீது நடவடிக்கை பாயப்போகிறதோ என்ற கலக்கத்தில் அரக்கோணம் நிலஅளவை துறையினர் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakmissiletest

  இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

 • indhragandhi102

  இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

 • californiagunshot

  பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

 • isisterrorbabies

  ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

 • 19-11-2019

  19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்