SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் சேனல்

2019-06-23@ 01:48:53

காவல்துறையில் கருப்பு ஆடுகள்
புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையப்பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில் விபசாரம் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்து கொண்டிருந்தது.  இதற்கிடையே ஸ்பா நடத்தி வரும் பெண், பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில்  இன்ஸ்க்கான மாமூல் தொகையை 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்திவிட்டதாகவும், எப்படிப்பா தொழில் செய்வது என புலம்பவது போலவும் இருந்தது. இதனை அப்படியே சீனியர் எஸ்பிக்கு ஒரு சிலர் பார்வர்டு செய்துவிட்டனர். அதிரடியாக விசாரணையில் குதித்த அவர், சட்டம்- ஒழுங்கு போலீசை நம்பாமல், சிறப்பு அதிரடிப்படையை  களத்தில் இறக்கினார். விசாரணையில் கூடுதலாக  போலீசாரே நேரடியாக பேரம்  பேசும் மேலும் சில ஆடியோவும் சிக்கியது.

இதில் கடுப்பான எஸ்பி, சம்பந்தப்பட்ட காவல்நிலையை இன்ஸ்., தனசெல்வத்தை ஆயுதப்படைக்கு தூக்கியடித்தார். இந்த விவகாரத்தில் இடமாற்றம் என்று கூட காவல்துறை குறிப்பிடாமல், அட்டாச்மென்ட்( இணைத்துக்கொள்வது) என பூசி மொழுகியது. அதேபோல் வில்லியனூர் மணல் கொள்ளையில், குற்றவாளியை தப்ப விடும் நோக்கில்  இரண்டு எப்ஐஆர் போட்டு, ஒன்றை கிழித்தெறிந்த சப்-இன்ஸ்., உதவி சப்- இன்ஸ்., மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், இப்போது புகார் கொடுத்தவர் கொலை மிரட்டலுக்கு ஆளாகி வருகிறார். போலீஸ் மீதான குற்றங்கள் மீது காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காததால், காவல்துறையில் கருப்பு ஆடுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக நேர்மையான போலீசார் குமுறுகின்றனர்.

கனிம வளத்தால் நிரம்புது பாக்கெட்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அமராவதி ஆற்றில் லாரி, லாரியாக மணல் கொள்ளை அன்றாடம் நடக்கிறது. இங்குள்ள கணியூர் பகுதியில் அளவே இல்லாமல் ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மணல் கொள்ளையர்கள், இந்த டிவிஷன் போலீசாருக்கு மாதம்தோறும் கப்பம் கட்டிவிடுவதால், காவல்துறையிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்துவிடுகிறது. இதனால், மணல் லோடு நிரப்பிய லாரிகள் அடிக்கடி பறக்கின்றன. காவல்துறை போலவே, கனிம வளத்துறை அதிகாரிகளும் இக்கும்பல் பிடியில் சிக்கிவிட்டனர். அதனால், கனிம வளம் கொள்ளை போகுது.

இதை தடுக்க எந்த அதிகாரிக்கும் முதுகெலும்பு இல்லை. மணல் லாரிகளை ெதாடர்ந்து, சிலர், மாட்டு வண்டியிலும் மணல் கடத்துகின்றனர். இவர்கள், போலீசாருக்கு மாமூல் கொடுப்பதில்லை. அதனால், இந்த மாட்டு வண்டிகள் மட்டும் அடிக்கடி போலீஸ் பிடியில் சிக்கிக்ெகாள்கின்றன. கனிம வளம் கடத்தல் காரணமாக, மடத்துக்குளம் போலீசாரின் பாக்கெட் எப்பவுமே நிரம்பி இருக்கிறது.

என்றும் நம்பர் ஒன்
ஈரோடு மாவட்டம் பவானி நகர் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் எதுவும் இல்லை. அதனால், இங்கு, வீதிக்கு வீதி ஆளும்கட்சியினர் ஆதரவுடன் சட்ட விரோத மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதன்மூலம், பவானியில் உள்ள மேல்மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும், கீழ்மட்ட காவலர்களுக்கும் அதிகளவில் மாமூல் சென்றடைகிறது. இந்த சட்ட விரோத மது விற்பனைக்கு போலீசார் முழுஆதரவு அளிப்பதால், நகர் பகுதியில் இருந்து தற்போது கிராம பகுதிகளிக்கும் சட்ட விரோத மது விற்பனை விரிவடைந்துள்ளது. எல்லை விரிவடைவதால் மாமூல் தொகையும் கூடுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பிற பகுதியைவிட பவானியில் மாமூல் வசூல் ஜோராக நடக்கிறது. அதனால், இந்த சப்-டிவிஷன் எப்பவுமே நம்பர் ஒன் இடத்தில்தான் உள்ளது. இந்த சப்-டிவிஷனுக்கு இடமாற்றம் கேட்டு, பல காவல்துறை அதிகாரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

‘அமைச்சர் மீதான அக்கறையை எங்கக்கிட்டேயும் காட்டுங்க போலீஸ்’
திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களாகவே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, வீட்டை உடைத்து பணம், நகைகள் கொள்ளை, வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூன் 15ம் தேதி வரை 123 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன் வெங்கடேஷன் வீட்டில் 50 பவுன் நகைகள், பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவமும் அடக்கம். ஆனால், அமைச்சர் மகன் வீட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவே அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த கொள்ளைக்காக அடிக்கடி போலீசாரிடையே கூட்டம் நடத்தப்படுகிறது.

அமைச்சரின் மகன் வீட்டில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கும்பல் அலங்கார பணிகளை செய்துள்ளது. அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் மற்ற வழக்குகள் அனைத்தும், ‘ஊறுகாய் பானையில் ஊறும் மாங்காய்’ போல இருக்கும்போது, இந்த வழக்கில் அதிக அக்கறை எடுத்து உத்தரபிரதேசத்திற்கு தனிப்படையை அனுப்புவதற்கும், கொள்ளையர்களை பிடிப்பதற்கும் ‘ஜரூர்’ வேலைகள் நடக்கிறதாம். அமைச்சரின் மகன் வீட்டில் நடந்த கொள்ளைக்கு மட்டும் போலீசார், அதி தீவிர விசாரணை நடத்தி மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் மற்ற 122 வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாக கண்டு கொள்ளப்படவில்லை. எனவே ‘எங்களையும் கொஞ்சம் கவனிங்க போலீஸ்...’ என மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

ஐயாவுக்கு ஒரு ஆஃப்... பெரிய ஐயாவுக்கு  ஒரு ஃபுல்... வாரா... வாரம் காக்கிகள் குஷி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட குறிச்சிக்கோட்டையில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இது, அரசு விதிகளை மீறி 24 மணி நேரமும் இயங்குகிறது. இதற்காக, போலீசாருக்கு மாதம் தவறாமல் மாமூல் ெவட்டப்படுகிறது. சப்-டிவிஷன் டிஎஸ்பி முதல் தளி காவல்நிலைய ஏட்டு வரை எல்லோருக்கும், அவரவர் ரேங்க்-கிற்கு ஏற்ப பங்குத்தொகை சென்றுவிடுகிறது. அத்துடன், வார இறுதி நாட்களில் ஓசி சரக்கு கேட்டு இந்த டாஸ்மாக் கடைக்கு காக்கி சீருடைகள் பறக்கின்றன. ‘ஐயாவுக்கு ஒரு ஆப்...

வேணும், பெரிய ஐயாவுக்கு ஒரு புல்... வேணும்’ என அடிக்கடி ஓசி சரக்கும் வாங்கிச்செல்கின்றனர். மாதம்தோறும் மாமூல்... வாரம்தோறும் சரக்கு... என உடுமலை சப்-டிவிஷனே குஷியாக உள்ளது. இதற்கிடையில், ‘பார்’-க்குள் நுழைந்து, ‘வறுத்த கோழி இருக்கா... அவித்த முட்டை இருக்கா... அட்லீஸ்ட் சுண்டலாவது இருக்கா...’ என தொல்லை கொடுப்பதால், ‘பார்’ ஊழியர்கள் கடுப்பில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில், எஸ்.ஐ. ஒருவருக்கும், ‘பார்’ ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பும்கூட நடந்துள்ளது.

32 சென்ட் நிலப்பிரச்னை தீர்க்க 3 சென்ட் பங்கு ேகட்ட இன்ஸ்.
அதியமான் கோட்டை மாவட்டத்தின் காரிமங்கலம் ஸ்ேடஷன் இன்ஸ்க்கும், சர்ச்சைக்கும் அப்படி ஒரு ராசிப்பொருத்தம் என்கிறார்கள் உள்ளூர் காக்கிகள். 2வருஷத்துக்கு முன்னாடி டூட்டியில் சேரும் போது, மாவட்ட விவிஐபியின் காலில் குடும்பத்துடன் விழுந்து கும்பிட்டுவிட்டு, அப்புறம் தான், கையெழுத்தே போட்டாராம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் ேதர்தலின் போது, மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் இவரை மட்டும் மாற்ற முடியவில்லையாம். இப்படி பவர்புல் பார்ட்டியாக வலம் வரும் இன்ஸ், மணல்கடத்தல், சூதாட்டம், சந்துக்கடை சரக்கு, லாட்டரி விற்பனை என்று அனைத்திற்கும் அனுமதியை அள்ளி இறைத்து, மாதம் தோறும் லட்சக்கணக்கில் கல்லா கட்டுறாராம்.

இதேபோல் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும், எந்த ஜில்லாவிலும் அய்யாவை மிஞ்ச ஆளில்லை என்கின்றனர் அவரது அடிப்பொடிகள். இதில் ஒரு பஞ்சாயத்து இப்போது, அய்யாவுக்கு தலைவலியா மாறியிருக்காம். சமீபத்தில் 32 சென்ட் நிலப்பிரச்னை, தொடர்பான வழக்கு அய்யாவிடம் வந்ததாம். அப்போது அந்த 32 சென்ட் நிலத்தில், எனக்கு 3 சென்ட் கொடுத்தால் இந்த பிரச்னையை, சுமுகமாக நான் தீர்த்து வைக்கிறேன் என்று கூறினாராம் அய்யா. இதனால் புகார் கொடுத்தவங்களும், எதிர்பார்ட்டியும் வழக்ேக வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடிட்டாங்களாம்.

இந்த விவகாரம், தற்போது ஸ்டேஷன் வட்டாரத்தில் மட்டுமல்ல, மாவட்டம் பூராவும் ‘ஹாட் டாபிக்கா’ ஒலிக்குதாம். அய்யாவால் பாதிக்கப்பட்டவர்கள், இதையே சாதகமாக்கி, விஜிலென்ஸ் வரைக்கும் போக முடிவு செஞ்சிருங்காங்களாம். இதனால் அதிரடி அய்யாவின் நாற்காலி லேசாக ஆட்டம் கண்டுகிட்டு இருக்காம். ஆனால், மாங்கனி மாவட்டத்தில் தர்பார் நடத்தும் நிழலானவர் இருக்கும் வரை, எங்க தலையை யாரும் அசைக்க முடியாது என்று தொடையை தட்டுகின்றனர் அடிப்பொடிகள்.

சாராயம், மணல் கொள்ளையில் தன்னந்தனியா கலக்கும் தனி நபர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் கள்ளச்சாராயம், மணல் கொள்ளை எவ்வித தடையும் இன்றி ஜரூராக நடந்து வருகிறது. இதனை ஒன்மேன் ஷோவாக நடத்தி வரும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசாருக்கும், பொது மக்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். இவரது அடாவடித்தனத்தால் 4 குடும்பத்தினர், பந்தநல்லூரை விட்டு வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து வந்து விட்டனர். இத்தனையையும் கண்டு கொள்ளாமல் போலீசார் மவுனமாக உள்ளனர். காரணம் இவரை நேரில் சென்று பார்த்து (தரிசனம்) வந்தால், அன்றைய தேவைக்கான அனைத்தும் கிடைத்துவிடும்.

மேலும் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு மாதமாதம் சில ஆயிரங்கள் தேடி சென்றுவிடுகிறது. அதனால் அவர் சொல்வது தான் சட்டம். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் புகாரை பெற்று கொண்டு நேரில் சென்று அவரிடம் கூறி விடுவார்கள். அதன் பின் புகாரளித்த குடும்பம், அந்த ஊரை காலி செய்து விட்டு வெளியூர் சென்று விட வேண்டியது தான்.

கந்துவட்டிக்காரங்களை பிடிங்க...எஸ்.பி. உத்தரவால்காக்கிகள் பரிதவிப்பு
நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது பல்வேறு புகார்கள் எழுந்ததால் கரூர் மாவட்ட எஸ்பி ராஜசேகரன் மாற்றப்பட்டு விக்ரமன் நியமிக்கப்பட்டார். இவர் வந்தது முதல் மாவட்டத்தில் பல்வேறு விஷயங்களில் அதிரடியை காட்டி வருகிறார். சட்ட விரோத மது விற்பனை, மணல் திருட்டு போன்றவற்றை தடுக்க உத்தரவிட்டதுடன், சிறிய அடிதடி பிரச்னை என்றாலும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கந்துவட்டி வசூல் தொடர்பான புகார்கள் அதிகமாக வரவே என்ன செய்வதென யோசித்து உடனடியாக அதிகாரிகளை அழைத்து சிறப்பு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் சட்டப்படி பதிவு செய்து பைனான்ஸ் தொழில் செய்யவேண்டும்.

சட்ட விரோதமாக மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என வசூலிப்பவர் குறித்து புகார் வந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் மாமூல் பாதிக்கும் என கருதி சின்டிகேட் போட்டு மாவட்டத்திற்குள்ளேயே டேரா போட்டு சுற்றும் சில காக்கி அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் மத்திய ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் ரவுடிகளை வைத்து மிரட்டி கந்து வட்டி வசூலிப்பது குறித்து புகார் சென்றுள்ளதால் அவரை காப்பாற்றுவதா, சிக்க வைப்பதா என தெரியாமல் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்