SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் சுருட்டும் இரண்டு பேரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-21@ 00:38:33

‘‘என்ன விக்கி மில்க் நாயகர் மீது தீர்மானம் வருமா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மில்க் நாயகர் 28ம் தேதி வர்றார். சில அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கப் போறதா சொல்றாங்க.. பொறுத்திருந்து பார்ப்போம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பேசமா பதிவுத்துறையில் வேலைக்கு சேரலாம்னு இருக்கேன்...’’ என திடீரென சப்ஜெக்ட் தாவினார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்ட சார்-பதிவாளர் அலுவலக மேட்டருக்குத்தான வர்ற... சொல்றேன்.. இங்கு, சார்-பதிவாளர், கண்காணிப்பாளர், தலைமை எழுத்தர் என அதிகாரிகள் இருந்தாலும், இரண்டு தனியார் ஊழியர்கள்தான் ஆபிசில் கோலோச்சுகின்றனர். இவர்கள் கையில்தான் எல்லோருடைய பிடியும் இருக்கிறது.

இவர்களுக்கு முறையான பயிற்சி, தேவையான படிப்பு, அடையாள அட்டை என எதுவுமே இல்லை. ஆனாலும், சார்-பதிவாளர் அதிக இடம் கொடுப்பதால், இவர்கள்தான் இங்கு எல்லாமே. இந்த அலுவலகத்தில் அன்றாட பணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இவை, வேண்டும் என்றே ரிப்பேர் செய்து வைத்து இருக்காங்களாம்.

காரணம், நோட்டு மற்றும் பைல்களுக்கு இடையே கரன்சிகளை மறைத்து கொடுப்பதற்காக. இவ்விரு ஊழியர்களும் அன்றாடம் ரூ.5 ஆயிரம் வரை அள்ளிவிடுகின்றனர். அதிகாரிகளுக்கு பங்குத்தொகை போக, இவர்களே ஐயாயிரம் சுருட்டுகிறார்கள் என்றால், அதிகாரிகளுக்கு எவ்வளவு போகும் என நினைத்துப்பார்த்தால் கிறு கிறுக்கிறது. அலுவலக வெளிகேட், பதிவறை, கம்ப்யூட்டர் அறை என எல்லா சாவிகளும் இவர்கள் கையில்தான் உள்ளது.

தினமும் காலை 8 மணிக்கு அலுவலகம் திறப்பது, இரவு 8 மணிக்கு அலுவலகம் பூட்டுவதும் இவர்கள்தான். ஐயாவுக்கு, அழுக்குபடாமல் பங்குத்தொகை பிரித்துக்கொடுப்பதால், ஐயாவின் ஆசி இவர்களுக்கு நிரம்பவே உள்ளது. அத்துடன், நம்பகமான பத்திர எழுத்தர்கள் மூன்று பேர், இவர்களுடன் கூட்டு சேர்ந்துகொள்வதால், எல்லாம் சுபமாக முடிகிறது.... இதனால் தான் நீயும் சார்பதிவாளர் அலுவலக பணிக்கு போகலாம் என்று சொன்னீயா பீட்டர்...’’ என்று கேட்டார் விக்கியானந்தா.

‘‘நெல்லையில அல்வாவை மாறி மாறி குடுப்பாங்களோ...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம். முன்னர் கிப்ட். இப்போது இலை. நெல்லை மாவட்ட கூட்டுறவு பேரங்காடி தேர்தலில் கிப்ட் தரப்பை வீழ்த்தி, இலை சார்பில் போட்டியிட்ட அணி வெற்றி பெற்றது. இதையயடுத்து வெற்றிக்காக ‘உழைத்த’ முன்னாள் தலைவரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பேரங்காடியின் கீழ் 200க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், மண்ணெண்ணெய் பங்க், அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் பண்டிகை நாட்களில் ரூ.50 லட்சம் வரை பட்டாசு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் வசூல் வளம் கொழிக்கும் பேரங்காடி என்பதால் இதன் துணைத்தலைவர் பதவிக்கு 3 பேர் முட்டி மோதினர். இதில் உள்ளூர் அமைச்சரின் மாமனாரும் ஒருவர். தனது மாமனாருக்கு துணைத்தலைவர் பதவி வேண்டும் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அமைச்சர் குடும்பத்திற்கு பதவி கொடுப்பதை விட மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வக்கீல் உள்ளிட்ட 3 பேர் போர்க்கொடி தூக்கினர்.

ஆனால் அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அமைச்சர் மாமனாரே துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு கிப்ட் தரப்பே வெற்றி பெற்றிருக்கலாமே உள்ளூர் இலை தரப்பு புலம்ப துவங்கி விட்டனர். முதல்ல அவங்க அல்வா கொடுத்தாங்க. கட்சியில இணைந்த பிறகு இவங்க அல்வா கொடுத்தாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ கேரள வண்டியை பிடித்து நிறுத்தி... வழக்கு போடாமல் இழுத்தடிக்கலாம்னு ஆர்டிஓ முடிவு செய்து இருக்காராமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக-கேரள எல்லையான பொள்ளாச்சி கொழிஞ்சாம்பாறை வழியாக கேரளாவில் இருந்து நடுஇரவில் மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகள் லாரி, லாரியாக எல்லை தாண்டி பொள்ளாச்சி பகுதிக்கு வருகின்றன.

இங்குள்ள தென்னந்தோப்பு மற்றும் சாலையோரங்களில் இந்த கழிவுகளை கொட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இதனால், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தாக்கம் அதிகரிக்கிறது. ஏற்கனவே, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நிபா வைரஸ் தாக்குதல் என பல தொற்றுநோய், கேரளாவில் இருந்துதான் தமிழகத்துக்கு வருகின்றன.

இனி, மருத்துவ கழிவு, கோழிக்கழிவு லாரிகள் எல்லை தாண்டி வந்தால், அவற்றை சிறை மட்டுமே பிடிக்கவேண்டும், அதன் மீது வழக்கு தொடுக்கக்கூடாது, சிறைபிடித்து அப்படியே மாதக்கணக்கில் நிறுத்திவிட்டால் லாரி துருப்பிடித்து வீணாகிவிடும். அதன்மீது உரிமை கோரி வரும் நபர்கள் மீது பென்டிங் கேஸ் பலவற்றை போட்டு, குண்டர் சட்டத்தில் தள்ளவேண்டும் என்பதுதான் இந்த புது டெக்னிக். முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்பதுபோல், சட்ட விரோத செயலை, சட்ட விரோதமாகத்தான் தடுக்கவேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகள் ஐடியா கொடுத்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சமூகவிரோதிகள் சட்டத்தை வளைத்தால். அவர்களையும் அதே சட்டத்தை கொண்டுதான் வளைக்க வேண்டும்...’’ என்று சிரித்தபடி சொன்னார் பீட்டர் மாமா. ‘‘காவல்துறை சேதி ஏதுமிருக்கா..’’
‘‘சென்னையில உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்ய முடிவு செஞ்சிருக்காங்களாம். அதில் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட சில அதிகாரிகளை மாற்றம் செய்ய முடிவு செஞ்சிருக்காங்களாம். அதில் ஒரு பெண் அதிகாரியும் அடக்கமாம். ஆனால் அந்த பெண் அதிகாரி தான் எப்படியும் அதே பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.

இதனால, தனக்கு தெரிஞ்ச அதிகாரிகளையும், சில அரசியல் விஐபிக்களையும் சந்தித்து பேசி வருகிறாராம். அவர் மாற்றப்படுவாரா அல்லது அரசியல் விஐபிக்களை பார்த்ததற்கு பலன் கிடைக்குமா என்று அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகிறார்களாம்’’ என்றார். விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்