SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீருக்காக முற்றுகையிட்ட பெண்களிடம், ‘நீங்க எனக்கா ஓட்டு போட்டீங்க’ என்று மிரட்டிய அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-20@ 00:39:24

‘‘ஏம்பா... தமிழகத்தின் தலைநகரே தண்ணீருக்காக தள்ளாடுது... குடிநீர் வசதி இல்லாம பல பள்ளிக்கூடங்களை தற்காலிகமாக மூடிக்கிட்டு வர்றாங்களாம்... ஆனா, தமிழ்நாட்டுல தண்ணீர் பஞ்சமே இல்லாத மாதிரி, அமைச்சர்கள் பேசுறாங்களேப்பா...’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘அவங்களாவது பொதுவாக சொல்றாங்க... இங்க ஒரு அமைச்சர் வித்தியாசமாக பேசி வெறுப்பேத்துறாரு... அதாவது, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் சமீபத்துல ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு... அதுல பேசுன அமைச்சர் மணிகண்டன், ‘ராமநாதபுரம்  தொகுதியில் (அமைச்சர் தொகுதி) தண்ணீர் 24 மணிநேரமும் கிடைக்குது... ஆனா, முதுகுளத்தூர் தொகுதியிலதான் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கு’ என்று பேசினாரு... அப்புறமா திருவாடானை தொகுதி, கருங்குளம் பகுதியில் தண்ணீர் கேட்டு பெண்கள்  அமைச்சரை முற்றுகையிட்டபோது, ‘இது என் தொகுதி இல்லை. நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை’ என்று கறாராக சொல்லிட்டு கிளம்பிட்டாராம்...
 முதுகுளத்தூர் தொகுதியில காங்கிரசை சேர்ந்த மலேசியா பாண்டியன், திருவாடானை தொகுதியில கருணாஸ் எம்எல்ஏவாக இருக்கிறாரு... இருந்தாலும் மாவட்ட மற்றும் தமிழக அமைச்சர்ங்கிற முறையில பேசாம, ஏதோ முதுகுளத்தூர், திருவாடானை தொகுதிக்கும் தனக்கு சம்பந்தம் இல்லைங்கிற மாதிரி பேசுறாரே... என்று அமைச்சர் மீது மக்கள் செம டென்ஷன்ல இருக்காங்களாம்... அது மட்டுமல்ல... ‘மாவட்டத்துல எல்லா பணிகளும், எனக்கு தெரியாமல் நடக்கக்கூடாது’ என்று சொல்லி வரும் அமைச்சர் மணிகண்டன், மக்கள் பிரச்னையை மட்டும், ‘இது என் தொகுதி இல்லை என்று பிரித்துப் பேசுவது நியாயமா? இவர் தொகுதியில மட்டும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருக்கிறதா என்ன?’ என்று அதிமுக கட்சிக்காரங்களே முணுமுணுக்கத் தொடங்கிட்டாங்கப்பா...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலூர் பெண்கள் சிறையில் செக்ஸ் டார்ச்சர் என்று புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழகத்தில் உள்ள சிறைகளில் பிரச்னையும், சர்ச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைக்குகள் சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகள் குறித்து செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து மற்றொரு பெரிய சர்ச்சை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சிறையில் கண்காணிப்பாளர் பணியிடம் கடந்த ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ளது. இந்நிலையில், சிறையில் தலைமை கிளார்க்காக செல்வமான முழு முதற்கடவுளின் பெயரை கொண்டவர் பணியாற்றி வருகிறார். இவர் அலுவலக வேலை மற்றும் சிறை காவலர்களின் பணப்பலன் கொடுப்பதற்கும் குறிப்பிட்ட பணம் அல்லது பொருளாக பெற்றுக்கொண்டு வந்த பின்னரே பில் பாஸ் செய்வாராம். கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக உள்ளதால் இவருடைய ஆட்டம் அதிகரித்துள்ளதாம்.
இந்நிலையில், தலைமை கிளார்க் அந்த சிறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் கைதிகளிடம் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்துக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளனராம். இதையடுத்து இப்புகாரின் மீது விசாரணையை ரகசியமாக சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு உள்ளதாம். இந்த பிரச்னை சிறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்கச் சொல்லி கொந்தளிச்சாராமே ஒரு அமைச்சர்’’
 ‘‘உண்மைதான். விளக்கமாவே சொல்றேன்..முட்டைக்கு பெயர்பெற்ற மாவட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து, சமீபத்தில் தங்கமான பெல் அமைச்சர்  போட்ட ரகசிய கூட்டம், அதிகாரிகளை அதிர வச்சிருக்காம். இலை கட்சி தனது 47 ஆண்டுகால வரலாற்றில் இப்போது தான், மோசமான தோல்வியை சந்திச்சிருக்கு. வாக்குகளும் 19 சதவீதம் மட்டுமே கிடைச்சிருக்கு. அதிலும் எனது சொந்த ஊரான பாளையத்திலேயே குறைஞ்ச ஓட்டு வாங்கியிருக்கோம். பாளையத்தை வருவாய் கோட்ட தலைநகராக்கினேன். அனைத்து அரசு அலுவலகங்களையும் கொண்டு வந்தேன். கல்லூரி கொண்டு வந்தேன். வாக்காளர்களையும் ‘ப’  வைட்டமின் கொண்டு நனைய விட்டேன். ஆனாலும் இப்படி மோசமான தோல்வி ஏன் என்று கேட்டு சூடாகி விட்டாராம். உடனடியாக இதற்கு காரணம் என்னன்னு கண்டுபிடிங்க என்று   வருவாய், காக்கிகள் மற்றும் உளவுத்துறையினரை வறுத்தெடுத்தாராம். இரவு,பகல் என்று பாராமல் நடக்கும் சரக்கு விற்பனை, அமோகமாக விற்கும் லாட்டரி சீட்டு, ஆகியவற்றால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டது தான் காரணம் என்று சிலர் விளக்கம் அளித்தார்களாம்.
அதே நேரத்தில் மாவட்டத்தில் வீட்டுமனை வரன்முறை என்று எளிய  மக்களை, வாங்கிய விலைக்கு மேல் அதிக கட்டணம் கட்டச் சொன்னது. தாசில்தார் ஆபீஸ் நகராட்சி, யூனியன் ஆபீஸ், இ-சேவைமையம் என்று சுற்றலில் விட்டது. அது சரியில்லை, இது சரியில்லை என்று அலைக்கழித்து லம்பாக கல்லா கட்டியது. இதனால் வயிறு எரிந்து கொந்தளித்த கட்சி சாராத 30 சதவீத மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக திரும்பியது போன்ற விஷயங்களே காரணம் என்பதை மட்டும் கடைசி வரை லீக் ஆகாமல் பார்த்துக் கொண்டார்களாம் அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்