SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர் பிரச்னையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 22ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

2019-06-20@ 00:18:05

சென்னை: தண்ணீர் பிரச்னையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 22ம் தேதி திமுக சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:  குடிநீர் பிரச்னையைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன, நீர் வற்றி  வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அடாவடியான பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன் வரவில்லை. தண்ணீருக்காக  காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் பொதுமக்களையும் கொச்சைப்படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதலமைச்சரும் பேட்டியளித்து வருகிறார்கள். குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆணவத்துடன் பேட்டி கொடுக்கிறார். எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை பெரிதாக்கி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்குமே நேரடியாக எச்சரிக்கை விடுக்கிறார். தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாமல் தோல்வியடைந்து நிற்பதோடு மட்டுமின்றி, துறை அமைச்சரும், முதலமைச்சரும் அளிக்கும் பேட்டிகள் குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்து விட்ட கதையாக இருக்கிறது.

உணவகங்கள் மூடப்படுவது, பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது, ஐ.டி. கம்பெனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்டிருப்பது, பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது என்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி, சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி தினம் தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன்னலுக்கு உள்ளாகி, குடிநீர் இல்லாப் பிரச்னை எதிர்காலத்தின் மீதே மக்களுக்கு ஒரு பீதியையே ஏற்படுத்தியுள்ளதை இந்த அரசு ஏற்க மறுத்து, குடிநீர் பிரச்சினையே இல்லை என்று பொறுப்பற்ற விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. கடமை தவறிய அதிமுக அரசு கண்ணையும் மூடிக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

ஆகவே, அதிமுக அரசின் அலட்சியத்தையும், முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படு தோல்வியையும் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உடனடியாக ஆக்கபூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியும் வரும் 22ம் ேததி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கழக மாவட்டச் செயலாளர்கள் பொதுமக்களின் ஆதரவுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறவழியில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்