SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம்காரர் கோபத்தின் உச்சிக்கு போனது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-18@ 23:32:00

‘‘என்ன உள்ளாட்சி மேல உச்ச கோபத்தில் இருந்ததா சொன்னாங்களே உண்மையா...’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான்னு கோட்டை வட்டாரங்கள் தகவல் சொல்றாங்க.. அதாவது தண்ணீர் பஞ்சம் குறித்து உள்ளாட்சி துறையில மீட்டிங் போட்டு அதிகாரிகளிடம் தகவல்களை வாங்கி வர வேண்டும் என்றுதான் குடிநீர் தொடர்பான மீட்டிங்கில் அமைச்சர் பங்கேற்றாராம். அவர் அளிக்கப்போகும் தகவல்களை வைத்துதான் சேலம்காரர் தண்ணீர் பஞ்சத்தில் எதிர்க்கட்சிகளை ஒரு பிடி பிடிக்க நினைத்து இருந்தாராம். அதற்காக பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு ரெடியாக இருந்ததாம். அதற்குள் மீடியாக்களில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் பேட்டி அளிப்பதாக சேலம்காரர் காதுக்கு தகவல் போச்சாம். இதனால அவர் கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராம். ஆட்சி அதிகாரத்தில் அவருடைய பங்களிப்பை மறக்க முடியாது. இன்னும் ஆட்சியை தாங்கி பிடிப்பதில் முக்கிய நபராக இருக்கிறார். இருந்தாலும் தேசிய அளவில் தமிழக தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதை நான் சொன்னால் தானே நன்றாக இருக்கும். என்னை தவிர எல்லா அமைச்சர்களும் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பேட்டி டுத்துவிடுகின்றனர். அதன் பிறகே சில தகவல்கள் எனக்கு தெரியுது... அதுக்கு எதுக்கு நான் இந்த ஆட்சி நாற்காலியில் உட்காரணும்னு தனக்கு நெருக்கமானவங்க கிட்ட சொன்னாராம்.  அதை கேட்ட அடிபொடிகள் பாவம் தலைவர் எத்தனை தான் சமாளிப்பாரு... அமைச்சர்கள் பேசுவதே நாற்காலியில உட்கார்ந்து இருப்பவருக்கு தெரியல என்றால்... அவரை வேறு யாரு மதிப்பாங்க என்று கோட்டையில் காபி குடித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதன் பிறகு என்ன நடந்தது...’’
‘‘சேலம்காரர் வருத்தப்படுறார் என்ற விஷயம் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு போனாங்களாம். அவரும் உடனே போன் போட்டு சேலம்காரரை சாந்தப்படுத்தினாராம். கோபித்துக் கொள்ளாதீங்க... நான் சற்று அவசரப்பட்டுட்டேன். இனிமேல் முக்கிய விஷயங்களில் உங்களுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்னு சொல்லி சமாதானம் செய்தாராம். அதன் பிறகே சேலம்காரர் ‘கூல்’ ஆனாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிண்டிக்காரர் பல்கலைக்கழகங்களின் விஷயத்தில் ெராம்ப கறார் காட்டுகிறார்... அது தமிழக அரசியல்வாதிகளுக்கு எரிச்சலாக இருக்கிறதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான். கிண்டிக்காரர் வருவதற்கு முன்பாக இஷ்டத்துக்கு இணைப்பு கல்லூரிக்கான அனுமதியை கொடுத்துட்டாங்க... ஆனால் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால கல்வி நிறுவனங்கள் தள்ளாடியது. அவங்களால பல்கலைக்கழகத்துக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை கட்டவில்லை. இதனால அவங்களுக்கு கிண்டி தரப்பு குடைச்சல் கொடுக்குது... அவங்க அரசியல்வாதிகளுக்கு குடைச்சல் கொடுக்கிறாங்க... அதனால பணம் கேட்பதாக புகாரும் எழுந்தது... இதற்கு எல்லாம் காரணம் பிஇ கவுன்சலிங்தான் காரணம் என்று சொல்கிறார்கள். இவங்க கிட்ட கொடுத்த உயர்கல்வித்துறையில் ெமாத்த அதிகாரமும் கிண்டிக்காரர் கிண்டி எடுத்துவிடுவார். அப்புறம் அட்மிஷனில் சிக்கல் ஆரம்பிக்கும். எதற்கு வம்பு என்று பிஇ கவுன்சலிங்கை பல்கலைக்கழகத்திடம் இருந்து பிடுங்கிட்டாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நெல்லை போலீஸ் சரகத்தில் குழப்பமோ குழப்பம் நிலவுதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம்.. நெல்லை மாவட்டத்தில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் என 54 பேரை குமரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி.யும் உடன் மறு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் இவர்களை பணியில் விடுவித்து இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 6ம் தேதி உத்தரவு வெளியான பின்னரும் 12 நாட்களுக்கு மேலாக பணியில் இருந்து விடுவிக்கப்படாமலேயே தொடர்ந்து அதே இடங்களில் இவர்கள் 54 பேரும் பணியாற்றி வருகின்றனர். இதே காலகட்டத்தில் பிற சரகங்களில் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை சரகத்தில் மட்டும் ஏன் இந்த குழப்பம். ஏன் விடுவிக்க அதிகாரிங்க மறுக்கிறாங்க என்று காக்கிகள் குழப்பத்தில் உள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ இன்னொரு போலீஸ் மேட்டர் இருப்பதாக சொன்னீங்களே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வேலூருக்கு பக்கத்தில் உள்ள சத்தான காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக் திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே திருடி பாலாற்றங்கரையில் மறைத்து வைத்த பைக்குகளை மட்டும் குறிவைத்து மீண்டும் அந்த பைக்குகளை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் போலீசார் புகாரை வாங்க மறுப்பதுடன், தினந்தோறும் அலைக்கழித்து வருகின்றனர். இதுவரை இந்த பகுதியில் திருட்டு போன பைக்குகளை போலீசார் மீட்டு கொடுத்ததே இல்லையாம். மேலும் பைக் திருடர்களுக்கு போலீசாரே துணை போவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆவடி மாநகராட்சி அறிவிப்பை மக்கள் எப்படி பார்க்கிறாங்க..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஊராட்சிகளில் சாலை வசதி சரியில்லை. பஸ் வசதியும் அப்படிதான். பெரும்பாலும் விவசாய பூமியாக ஊராட்சி பகுதிகள் உள்ளன. ஏற்கனவே குளம், குட்டை, ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டிட்டாங்க... சரியான மின்சார வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை... அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த சூழலில் மாநகராட்சி அறிவிப்பால் எண்ணிக்கை கூடுமே தவிர மக்களின் வாழ்க்கை தரம் உயராது... அரசு தண்ணீர் பிரச்னையை திசை திருப்ப ஆவடியை மாநகராட்சி என்று அறிவித்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறது என்று அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குழாய் வரி உயரும், வீட்டு வரி உயரும், எல்லாம் மக்களின் தலையில் இடியாக விழும் என்று சோகத்துடன் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்