SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று தண்ணீர்... நாளை காற்று

2019-06-18@ 00:23:37

இயற்கை சீரழிந்து வருவதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாததால், தண்ணீருக்காக கொலைகள் கூட நடந்து வருகின்றன. தண்ணீரை தொடர்ந்து சுத்தமான காற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம். தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்க முடியும். சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்க முடியுமா? உலகம் முழுவதும் காற்று மாசுபாடு மனிதர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக
உருவெடுத்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 46 லட்சம் பேர் சுவாச பிரச்னை காரணமாக இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சம் குழந்தைகள் இறப்பதாக, டெல்லியை சேர்ந்த அறிவியல் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் தலைநகர் டெல்லி முன்னிலையில் உள்ளது. நகரம் முதல் குக்கிராமங்கள் வரை வாகன எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மாசுபாட்டுக்கு, வாகனப்புகை முக்கியக் காரணம். காற்று மாசுபாடு அதிகரித்தால் காய்ச்சல், கண் எரிச்சல், இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. காற்று மாசு அதிகரித்துக் கொண்டே சென்றால் இயற்கை சீரழிவு கூட ஏற்படலாம். அவற்றின் உச்சக்கட்டம் ‘அமில மழை’ என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். நகர வளர்ச்சி, சாலைப்பணிக்காக ஏராளமான மரங்களை வெட்டித் தள்ளுகிறோம். வெட்டிய மரங்களுக்கு பதிலாக கூடுதலாக மரக்கன்றுகள் நடுவதில்லை. இதனால் நச்சு வாயு வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. வெப்பமயமாதலை குறைக்க, தூயக்காற்றின் மிகச்சிறந்த தோழனான மரங்களை அதிகளவு வளர்க்க வேண்டியது அனைவரின் கடமை. காற்று மாசு, அதன் விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் அதிகளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களின் தரத்தை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

நகர் பகுதிகளில் திடீரென காற்று மாசுபாடு அதிகரித்தால், உடனே அதற்கான காரணத்ைத கண்டறிந்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று மாசுபாடுக்கான காரணங்களை கண்டறிந்து, அதை குறைப்பதற்கான மாற்று முயற்சியில் இறங்க வேண்டியது அரசின் கடமை. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைதான் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் என்பதால், பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மிக மோசமான காற்று மாசு நிலை வெகுதூரத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தனிநபர் ஒவ்வொருவரும் முயன்றால் மட்டுமே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும். மக்கள் பொதுவாகனங்களை பயன்படுத்தத் துவங்கினால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். உயிர் வாழ தேவையான காற்றின் மீது அனைவருக்கும் அக்கறை வேண்டும். காற்று மாசு என்பதை  
அரசியல் பிரச்னையாக எடுத்து, அதை தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

 • bangladeshtrain

  வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

 • wildfireaus

  காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

 • hongkongprofire

  ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்