SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் ஏலகிரி மலை கிராமங்களில் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் மின்சார வசதி இல்லாத மலைவாழ் மக்கள்

2019-06-16@ 04:58:19

* குடம் தண்ணீருக்கு 3 கி.மீ நடந்து செல்கின்றனர் * மழைநீரை சேகரித்து உணவு சமைக்கும் அவலம்

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலை கிராமங்களை சேர்ந்த  மலைவாழ் மக்கள் மின்சார வசதியே இல்லாமல் உள்ளனர். ஒரு குடம் தண்ணீருக்கு 3 கி.மீ. தூரம் நடந்து செல்கின்றனர். மழை நீரை சேகரித்து உணவு சமைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்று வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை இன்னும் கூட ஒரு வளர்ச்சியடைந்த சுற்றுலா தலமாக இல்லை. ஆனாலும் சமசீதோஷ்ண நிலை அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. ஏலகிரி மலை 14 சிறு கிராமங்களை உள்ளடக்கி ஒரு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வசித்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன. இங்குள்ள நிலாவூரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் ரானேரி என்ற கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளை கடந்தும் இங்குள்ளவர்கள் மின்சாரம் உட்பட அடிப்படை வசதியின்றி இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் வனப்பகுதியின் ஊடாக நடந்து சென்றால் கீழ்க்காட்டுவட்டம் என்ற குக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று வரை குடிநீர், மின்சாரம், சாலை வசதி எதுவுமின்றி தங்கள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.
இதுகுறித்து கீழ்காட்டுவட்டம் மலைவாழ் மக்கள் கூறியதாவது: விவசாயம் எங்கள் குலத்தொழிலாகும். ஆதிகாலத்திலிருந்து பல தலைமுறையாக காட்டுப்பகுதியை சமன்படுத்தி, அதை நிலமாக்கி விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.  எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு, தண்ணீர் வசதி, சாலை வசதி எதுவும் செய்து தரவில்லை.  மின்சாரம் கிடையாது. எங்கள் பிள்ளைகள் இன்றும் சிம்னி விளக்கிலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் படித்து வருகின்றனர். தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தி  தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக போராடி வந்தோம். இதனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு ரானேரி கிராமம் அருகே மின்வசதியும், சாலை வசதியும் உள்ள இடத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்கிணறு ஒன்று வெட்டினர். ஆனால் அதில் தண்ணீர் வராததால் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.  மழைக்காலங்களில் இந்த கிணற்றில் தேங்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தோம்.ஆனால் கோடைக்காலங்களில் முழுவதுமாக வறண்டு விடுவதால் நாங்கள் அனைவரும் சொந்த பணத்தை செலவழித்து மீண்டும் ஊராட்சி கிணற்றை ஆழப்படுத்தினோம், ஆனாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஒரு டிராக்டர் மூலம் தலா ₹200 வீதம் வசூலித்து ஒரு டேங்கர் ஆயிரம் ரூபாய் என ஐந்து முதல் ஏழு லோடு தண்ணீர் வாங்கி ஊராட்சி கிணற்றில் நிரப்பிவிட்டு, பின்னர், பிவிசி பைப் லைன் மூலம் காட்டின் மேல் பகுதிக்கு கொண்டு சென்று அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு 15 நாட்களுக்கு ஒருமுறை கிணற்று நீரை பயன்படுத்துகிறோம். தற்போது கோடைகாலம் என்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒரு குடம் எடுத்துக்கொண்டு 3 கி.மீ தொலைவில் உள்ள ரானேரி கிராமத்திற்கு காட்டு வழியாக நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம் என வேதனை தெரிவித்தனர்.மேலும், மின்சார வசதி இல்லாததால் நாங்களே ₹4000 செலவில் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். எனவே அதிகாரிகள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தந்து எங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் முன்வர வேண்டும்’ என்றனர். கற்காலம் தொடங்கி கம்ப்யூட்டர் காலமாக மாறியுள்ள நிலையில் மலைவாழ் மக்களின் இந்த வாழ்க்கை பயணம் பார்ப்பவர்களின் மனதை உருகச் செய்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்