SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2024ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 349 லட்சம் கோடியாக்க முடியும்: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நம்பிக்கை

2019-06-16@ 04:58:09

புதுடெல்லி: ‘‘இந்தியாவின் பொருளாதாரத்தை 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக (ரூ.349 லட்சம் கோடி) உயர்த்துவது சவாலான பணி. ஆனால் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இது சாதிக்க கூடியதுதான்’’ என நிதி  ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். திட்டக் கமிஷன் என்ற பெயரை பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என பெயர் மாற்றினார். நிதி என்பது இந்தியாவின் மாற்றத்துக்கான தேசிய மையம் என்ற வார்த்தையின் சுருக்கம். இதில் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள்  குறித்து, இந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள மாநில முதல்வர்களுடன், பிரதமர் ஆலோசனை நடத்துவார். பிரதமர் மோடி 2வது முறையாக பதவி ஏற்றபின் நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். யூனியன் பிரதேச நிர்வாகிகளும், ஜம்மு காஷ்மீர் சார்பில் ஆளுநரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி  பேசியதாவது:மக்களவைக்கு சமீபத்தில் நடந்த பொது தேர்தல், உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பணி. தற்போது நாம் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற  மந்திரத்தை நிறைவேற்றுவதில் நிதி ஆயோக் முக்கிய பங்காற்றுகிறது. ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி, வெள்ளம், மாசு, ஊழல் மற்றும் வன்முறை போன்றவற்றை ஒழிக்க நாம் இணைந்து போராட வேண்டும்.

வரும் 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.349 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சவாலான பணி. ஆனால் இதை நிச்சயம் நாம் அடைய முடியும். இதற்கு மாநிலங்கள் தங்களின் ஆற்றலை உணர வேண்டும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தி இலக்கை உயர்த்துவதை மாவட்ட அளவிலிருந்து தொடங்க வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதற்கு சொட்டு நீர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்கும் யுக்தியை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை தற்போது ‘ஜல் சக்தி’ என்ற  பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய அமைச்சகம் வழங்கும். தண்ணீரை பாதுகாப்பதற்கும், உபயோகமாக பயன்படுத்துவதற்கும் பல முயற்சிகளை மாநிலங்கள் ஒருங்கிணைக்க வேண்டும். செயல்பாடு, வெளிப்படைத்தன்மை, ஒப்படைப்பு என்ற  அடிப்படையிலான நிர்வாக முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்படும் அரசு நிர்வாகத்தை ஏற்படுத்த, நிதிஆயோக் நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் உதவ வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

3 முதல்வர்கள் ஆப்சென்ட்
பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக பிரதமர்  மோடிக்கு மம்தா எழுதிய கடிதத்தில், ‘‘மாநில திட்டங்களுக்கு நிதி அளிக்க நிதி ஆயோக் அமைப்புக்கு நிதி அதிகாரம் இல்லாததால், இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் எனக்கு எந்த பயனும் இல்லை. அதனால் இந்த கூட்டத்தில்  கலந்து கொள்ள முடியாது’’ என வெளிப்படையாக கூறிவிட்டார். தெலங்கானாவின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான காலீஸ்வரம் நீர்பாசன திட்டத்தை தொடங்கும் பணியில் தீவிரமாக இருப்பதால், முதல்வர்  சந்திரசேகர ராவால், இதில் கலந்து கொள்ள முடியவில்லை  என கூறப்பட்டது. உடல்நிலையை காரணம் காட்டி, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துவிட்டார்.  

மன்மோகனுடன் ஆலோசனை
காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நிதி ஆயோக்கின் 5வது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பேச  வேண்டிய தங்களது மாநில பிரச்னைகள் தொடர்பாக, கூட்டத்துக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இவர்களுடன் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி நடத்தும் கர்நாடக முதல்வர் குமார  சாமியும் உடன் இருந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்