SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தை திணறடிக்கும் தண்ணீர் பஞ்சம் குடிநீருக்காக 2 பேர் கொலை

2019-06-16@ 04:57:15

* எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு மெத்தனம் * மக்கள் கொந்தளிப்பு; மாநிலமெங்கும் சாலை மறியல், போராட்டங்கள்

சென்னை: தமிழகத்தை தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைக்கிறது. குடிநீர் பிரச்னையில் தஞ்சை, திருச்சியில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய தமிழக சட்டப்பேரவை சபாநாயகரின்  கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தண்ணீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீருக்காக சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. ஆனால் மக்கள்  எந்தக்குறைகளும் இல்லாமல் வாழ்வதுபோல, அமைச்சர்களும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையிலேயே குடிநீர் வினியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமான ஏரிகள் அனைத்தும் வறண்டு போய்விட்டது.  காலி குடங்களுடன் பெண்கள் தண்ணீருக்காக அலையும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையில் பல ஓட்டல்களில் மதிய சாப்பாடு இல்லை என்ற போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது.இந்தியாவின் ஐடி நகரங்களில் பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னை நகரம் விளங்கி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஐடி கம்பெனிகளுக்கு விடுமுறை அளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான கம்பெனிகள்,  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன.

ஐடி கம்பெனிகளில் அனைத்து தளங்களிலும் செயல்பட்டு வந்த ரெஸ்ட் ரூம், இப்போது சில தளங்களில் மூடப்பட்டு உள்ளது. சில கம்பெனிகள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணி செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது. இதற்கெல்லாம் காரணம்  தண்ணீர் பஞ்சம். நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது. ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்து ஒரு வழக்குவிசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கோர்ட்டே நேரடியாக தலையிட்டு ராணுவ உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் என எச்சரித்தனர். ஆனாலும் தமிழக அரசு இந்த பிரச்னையில்  துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் தான் கடந்த 2015ல் சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. நீர்மேலாண்மையில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. கடந்த ஆண்டு காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு அதை தேக்கி வைக்க முடியாமல் 125 டிஎம்சி நீர்  வீணாக கடலில் கலந்தது. ஆனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் கோர தாண்டவமாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால்  டெல்டா விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளனர்.

சென்னை மட்டுமல்லாது ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தமிழகம்  முழுவதும் குடிநீருக்காக மக்கள் அலைவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித்  தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு கண்டு கொள்வதாக இல்லை.இதனால் தமிழகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வட சென்னையில் தினமும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தண்ணீர்  பஞ்சத்தால் ஏற்பட்ட மோதலில் கடந்த 10 தினங்களுக்கு முன் தஞ்சை அடுத்த விளார் கிராமத்தில் சமூக சேவகர் அடித்து கொல்லப்பட்டார். மக்களுக்கு வினியோகிக்க வேண்டிய தண்ணீரை லாரி டிரைவர் தனது வீட்டில் பதுக்கி வைத்ததை  தட்டிக்கேட்டதால் இந்த விபரீதம் நடந்தது. இப்போது தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் இன்ெனாரு உயிரையும் காவு வாங்கி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது உளுந்தங்குடி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (38), இவரது மனைவி கலைமணி (30). இவர்களது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ரமேஷ், சாந்தி தம்பதி. தெருக்குழாயில்  தண்ணீர் பிடிப்பதில் இந்த பகுதியில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

வாரம் 2 நாள் மட்டுமே தண்ணீர் வரும். அதுவும் 1 மணி நேரம் தான் வரும். முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலைமை.இந்நிலையில், தனபால் குடும்பத்தினர் கூடுதலாக 2 குடம் தண்ணீர் பிடித்து உள்ளனர். இதை ரமேஷ் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு முன் விரோதம் உண்டானது. நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் காதுகுத்து,  பூப்புனித நீராட்டு என பல நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கறிவிருந்து போடப்பட்டது. இதற்காக ரமேசின் மகன் பிரவீன் (25) நேற்று முன்தினம் இரவு மது அருந்தி உள்ளார்.போதையில் இருந்த பிரவீன் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை தட்டிக்கேட்ட ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று அதிகாலை 2 மணிக்கு தனது வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்துக்கொண்டு தனபால்  வீட்டுக்கு சென்றார். வெளி வராண்டாவில் தனபால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, உருட்டு கட்டையால் தனபால் நெற்றியில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் தனபால் இறந்தார். சத்தம் கேட்டு தனபால் குடும்பத்தினர்  வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்தனர். அதற்குள் பிரவீன் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி தப்பி ஓடிய பிரவீனை கைது செய்தனர்.

சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் (40). இவர், தமிழக சபாநாயகரின்கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில்  வசிக்கும் மோகன் (30) என்பவர் வீட்டில் கடந்த 13ம் தேதி இரவு தண்ணீர் வராததால், குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார்.அப்போது அங்கு வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், ‘‘தண்ணீர் இல்லையென்று நீ எப்படி தன்னிச்சையாக மோட்டாரை இயக்கலாம்,’’ என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சத்தம்  கேட்டு ஓடிவந்த மோகனின் மனைவி சுபாசினி (28), ‘‘எப்படி எனது கணவரை அடிக்கலாம்,’’ என்று கேட்டுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், தனது வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுபாசினி முகத்தில் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த சுபாசினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆதிமூல ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

தண்ணீர் பிரச்னையால் தஞ்சை, திருச்சியில் நடந்த 2 கொலைகள், சென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து  தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் நடைபெறும் சாலை மறியல் போராட்டம், பெரிய அளவில் வெடிக்கும் என்று பொதுமக்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் பிரச்னையால் தஞ்சை, திருச்சியில் நடந்த 2 கொலைகள், சென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

 • 22-11-2019

  22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்