SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உட்கட்சி பிரச்னையில் மதுரை செல்லம் அடக்கி வாசிப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-16@ 00:11:44

‘‘டெல்லி நிலவரம் ஏதாவது காதுக்கு வந்ததா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வராமல் இருக்குமா. சேலம்காரரின் வலதுகரமான மைக் அமைச்சரும் போனாரு... அரசு விஷயங்களில் தலைமை செயலாளரும் பங்கேற்றாராம். அரசியல் விஷயங்களில் மைக் அமைச்சரை உடன் வைத்து சேலம்காரர் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள தாமரையின் இரண்டு முக்கிய தலைவர்களை பார்த்து கெஞ்சி கூத்தாடினாராம். தேனியை நம்பாதீங்க. அவரு கூட இருந்தே குழி பறிப்பாரு. இப்போது எனக்கு அதுதான் நடந்து வருது என்று புலம்பினாராம். அப்புறம் தாமரை தலைவரை சந்தித்து நீண்ட நேரம் அரசியல் விஷயம் பேசினாராம். தமிழ்நாட்டில் உள்ள சிறு சிறு குழுக்கள்தான் தேசிய அளவிலான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. அவர்களை முடக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றாராம். அதுக்கு அந்த முக்கிய தலைவர் லிஸ்ட் அனுப்புங்க... அந்த சிறு குழுக்களின் நிதியாதாரம் யாரிடம் இருந்து வருகிறது. அவர்களை யார் இயக்குகிறார்கள். வெளிநாட்டில் இருந்து டிரஸ்ட் பெயரில் வரும் நிதியை வைத்து தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் கலகம் நடத்துகிறார்களா என்று பார்க்கலாம். அப்படி ஒருவர் சிக்கினால் போதும் அவர் படும்பாட்டை வைத்து மற்ற சிறு குழுக்கள் எல்லாம் ஒதுங்கி ஓடிவிடும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். கட்சியில் உங்களை மீறி எதுவும் நடக்காது என்று சேலத்தை பார்த்து ஆறுதல் சொல்லி அனுப்பினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தண்ணீ பிரச்னைக்கு என்னதான் தீர்வாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாசா மாசம் ஒருவர் ரேடியோவில் பேசுவாரே அவரு இந்த முறை தண்ணீர் பிரச்னையை தான் பேசுவார்னு சொல்றாங்க... டிவிட்டரில் அந்த அளவுக்கு டிரண்ட் ஆகி இருக்கு. அது அவர் கண்ணுல படாமலா இருக்கும். அவரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க சில கோடிகளை ஒதுக்குவதாக சொன்னாராம். ரொம்ப குஷியில் சேலம்காரர் தலையை ஆட்டிட்டு வந்துட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பள்ளிக்காக அழுத பெற்றோரை தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஒரு காலத்தில் வேலூர் மாநகரில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி வீதத்துக்கு உதாரணமாய் திகழ்ந்த சிறைச்சாலை அமைந்த பகுதியின் அரசுப்பள்ளி இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் பொதுத்தேர்வு தேர்ச்சி வீதத்தில் கடுமையாக சரிந்து போனது. இது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை மட்டுமல்ல, அந்த பகுதியின் மக்களையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வந்த தேர்ச்சி வீதத்துக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் சமுதாய ரீதியிலான மனப்பாங்கே காரணம் என்ற புகார்கள் அதிகாரிகள் வரை சென்றது. இந்நிலையில், அங்கு ஒரு ஆய்வுக்கூட்டத்துக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலரிடம் அப்பகுதி மக்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பொங்கியே விட்டார்களாம். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை மாற்ற வேண்டும். பள்ளியிலும் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை தீர்க்க வேண்டும். பள்ளியின் தேர்ச்சி வீதத்தை உயர்த்த உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அழுதபடியே கோரிக்கை வைத்தார்களாம். அதுமட்டுமில்லாம நகரின் மையப்பகுதியில் உள்ள இரண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவிகளை இன்று போய் நாளை வா என்ற கணக்காக ஆசிரியர்கள் இல்லை. புத்தகம் வரவில்லை என்று சொல்லி திருப்பி அனுப்புகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆட்கள் போனாலும் பதவியை பிடிக்கும் கிப்ட் தரப்பு பற்றி சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அல்வா மாவட்டத்தில் கிப்ட் கூடாரம் காலியான நிலையில் கூட்டுறவு பேரங்காடி தேர்தலில் போட்டியே இல்லாமல் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று இலை தரப்பு உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் கிப்ட் மாநகர் மாவட்ட செயலாளர் தனது ஆதரவாளர் ஒருவரை சேர்மன் பதவிக்கு முன்நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இலை தரப்புக்கு போட்டியாக 15 வேட்பாளர்களை நிறுத்தி வாக்கு சேகரிப்பில் சுறுசுறுப்பு காட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த இலை தரப்பு ஓட்டுக்கு பணம் கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஒரு ஓட்டுக்கு ரூ.1000, பிரியாணி கொடுத்து கிராமங்களில் இருந்து வேனில் வாக்காளர்களை அழைத்து வந்தனர். அவர்களுக்கு போட்டியாக கிப்ட் தரப்பு 500, பிரியாணி கொடுத்து வேனில் கூட்டி வந்தனர். மொத்தம் 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ள நிலையில் சுமார் 4000 பேருக்கு இலை தரப்பு  பணம் கொடுத்தது. கிப்ட் தரப்பு 1200 பேருக்கு மட்டும் தலா 500 கொடுத்தனர். ஆனால் வெறும் 2700 ஓட்டுகள் மட்டுமே பதிவானது. 4 ஆயிரம் ஓட்டிற்கு பணம் கொடுத்து 2700 ஓட்டுகள் மட்டுமே பதிவானதால் பணம் வாங்கியவர்கள் ஏமாற்றிவிட்டார்களே என்று இலை தரப்பு  அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘மதுரை செல்லம் அடக்கிவாசிக்குது போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஒற்றை தலைமை கோஷத்தை எழுப்பிய மதுரை செல்லம். சென்னைக்கு வந்து சேலம், தேனியை பார்த்த பிறகு ரகசியமாக ஒரு செட்டில்மென்ட்டே நடந்ததாம். அந்த செட்டில்மென்ட் நல்ல படியாக முடிந்ததால் மதுரை செல்லம் வாய் திறக்கவே மறுத்துவிட்டாராம். இனி உட்கட்சி அரசியல் பேச மாட்டேன்னு சொல்லிட்டு வர்றாராம். அவருடன் இருக்கும் அடிபொடிகள் தலைவரை பெரிய அளவில் கவனித்துவிட்டார்கள் போல... அதுதான் அடக்கி வாசிக்கிறார் என்று சொல்லி சிரிக்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • afghanblast

  ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 • venicerain

  இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

 • isrealattack

  காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

 • 13-11-2019

  13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்