SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்தான்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அமெரிக்கா குற்றச்சாட்டு

2019-06-15@ 05:22:07

வாஷிங்டன்: ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது  நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, அதற்கு ஆதாரமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளது. தீவிரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாதங்களுக்கு முன் ரத்து செய்தார். மேலும், அதன் மீது பொருளாதார தடைகளை  விதித்தார். ஈரானிடம் இருந்து கச்சா எண்ெணய் வாங்குவதை மற்ற நாடுகள் நிறுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அந்நாடுகள் மீதும் பொருளாதார தடை பாயும் எனவும் எச்சரித்தார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஆதரவு நாடுகளின் எண்ணெய் கப்பல்களின் மீதும், விமான நிலையங்களின் மீதும் ஈரான் ஆதரவு தீவிரவாத  அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஓமன் வளைகுடாவில் கடந்த மாதம் 4 கப்பல்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால், ஈரானை எச்சரிப்பதற்காக அமெரிக்கா தனது விமானத் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்கு பகுதியில் நிறுத்தியுள்ளது. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, ஈரானுக்கு கடந்த வியாழக்கிழமை  சென்று  அந்நாட்டு தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், அதேநாளில் ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நார்வே நாட்டின் எண்ணெய் கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.  ஜப்பான் நாட்டின் ‘கொக்குகா கரேஜியஸ்’ என்ற 2 எண்ணெய் கப்பல்களின் அடிப்பகுதி  பலத்த சேதம் அடைந்தது. இதற்கு ஈரான்தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்க ராணுவம் நேற்று கருப்பு-வெள்ளை வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டது. அதில் ஈரான் ராணுவ வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் படகில் சென்று ஜப்பானின் எண்ணெய் கப்பல் அருகே ‘லிம்பெட்’ வகை  கடல் கண்ணிவெடிகளை அகற்றும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து,  ‘‘எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் ராணுவம்தான் காரணம் என அமெரிக்க அரசு கருதுகிறது,’’ என  அமெரிக்க வெளியுறவு  அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று குற்றம்சாட்டினார்.

இதை ஈரான் மறுத்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஜாரிப் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உண்மை ஆதாரமின்றி, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஈரானுக்கு எதிரான பொருளாதார  தீவிரவாதத்தை மறைக்க, அமெரிக்காவின் ‘2வது அணி’ செயல்படுவது தெளிவாக தெரிகிறது’ என குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இஸ்ரேல் பிரதமர், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களைதான் அமெரிக்காவின் 2வது அணி என ஜாரிப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.

கச்சா எண்ணெய் விலை கிடுகிடு
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கிர்கிஸ்தானின் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஈரான் அதிபர்  ஹாசன் ரவுகானியின் உரையில், ‘அமெரிக்கா தனது பொருளாதார, ராணுவ பலம் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விதிமுறைகளை மீறி செயல்பட்டு உலக நிலைத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது’ என  குற்றம்சாட்டினார்.

சவுதி ஏர்போர்ட் மீது டிரோன் தாக்குதல்
அமெரிக்க ஆதரவு நாடுகளின் மீது ஈரானிடம் நிதியுதவி பெறும் ஏமன் ஹைத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள், இரு தினங்களுக்கு முன் சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அதேபோல்,  சவுதியின் ஆபா விமான நிலையம் மீது நேற்று முன்தினம் இவர்கள் 5 டிரோன் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதை சவுதி படை சுட்டு வீழ்த்தியது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரமும் தாக்குல் நடத்தலாம் என்ற  பதற்றம் உருவாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

 • unavu_mudhalvar1

  மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்