SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க புதிய திட்டம் கொண்டு வர முடியுமா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

2019-06-12@ 00:42:58

சென்னை: விபத்து வழக்கில் பாதிக்கப்படுபவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிப்பது குறித்து புதிய திட்டம் கொண்டுவரப்படுமா என்று ஆலோசனை செய்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்தில் பலியான ஒருவருக்காக அவரது உறவினர்கள் சார்பில் 3 நீதிமன்றங்களில் இழப்பீடு பெறப்பட்டது தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பல வக்கீல்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஒரே விபத்திற்கு பல இழப்பீடுகள் பெற்றுள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான நிபுணர் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.

இந்த நிபுணர் குழு சம்பந்தப்பட்ட இழப்பீடு பெற்ற நபர்கள், வக்கீல்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில் 4 வக்கீல்களுக்கு இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வாகன விபத்துகள் தொடர்பான 56 வழக்கு ஆவணங்களை காணவில்லை என்று வேலூர் குற்றப்பிரிவு போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று அளித்த உத்தரவில், “போலி எப்ஐஆர்கள் தொடர்பாக விசாரணை நடத்த இந்த நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதுவரை இந்த வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பிக்கிறேன். போலி இழப்பீடு தொடர்பாக 7 வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க பார்கவுன்சில் முடிவு செய்துள்ளது. வக்கீல்கள் தொழில் புனிதமான தொழில். அதை கருத்தில் கொண்டு நீதித்துறைக்கு உதவும் வகையில் வக்கீல்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இந்த தொழில் கறைபடிந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரும் வகையில் வக்கீல்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும். வாகன விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்தால் அவர்களை உயிர் பலியிலிருந்து காப்பாற்றிவிடலாம். இதற்கு அரசு தரப்பில் ஏதாவது திட்டம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து உள்துறை, நிதி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளின் செயலாளர்கள், டிஜிபி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்