SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர் பஞ்சத்தை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: வைகோ அறிக்கை

2019-06-12@ 00:30:07

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி, 22 மாவட்டங்களுக்கு மேல் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கின்ற நிலைமை வேதனை அளிக்கின்றது. நாள்தோறும் குடிநீருக்காக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் செய்திகள் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் வெளியாகி வருகின்றன. சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.

நாளொன்றுக்கு சென்னை மக்களின் தாகத்தைப் போக்க 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், மாநகர குடிநீர் வாரியம் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் விநியோகிக்கிறது. வீராணம் ஏரியிலிருந்து அனுப்பப்படும் குடிநீர், கடல்நீரை குடிநீராக்கி விநியோகம் செய்யப்படும் நீர், விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சென்னையில் விநியோகம் செய்வதாக அரசு கூறுகிறது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் கேன் வாட்டர் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டன.

குடியிருப்புகளில் அன்றாட தேவைக்காக விலைக்கு வாங்கும் நீரை லாரி நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்திவிட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி 3,600 நீர் நிலைகள் உள்ளன. அவற்றை முறையாக தூர்வாரி பராமரித்திருந்தால் 80 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும். ஆனால் குடிநீர் பஞ்சத்தை போக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கடந்த 7ம் தேதிதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக அரசு இயந்திரம் போர்க்கால வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் பிரச்னையை தீர்க்க விரைந்து செயலாற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்