SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை, தாமரையின் முட்டல், மோதல் தொடங்கிவிட்டது என்கிறார்: wiki யானந்தா

2019-05-25@ 01:44:08

‘‘எலக்‌ஷன் ரிசல்ட் முடிவுகளை தொடர்ந்து இலைக்கும், தாமரைக்கும் முட்டல், மோதல் தொடங்கிருச்சாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இதற்கு மாங்கனி மாவட்ட இலை கட்சிக்காரங்க முதல் பிள்ளையார் சுழி போட்டிருக்காங்க. கவுன்டிங் சென்டருக்கு காலையில் ஒற்றுமையாக கைகுலுக்கிக் கொண்டு உற்சாகத்துடன் வந்த இலைக்காரர்களும், தாமரைக்காரர்களும் மதியத்திற்கு மேல், முகத்தை திருப்பிக் கொண்டார்களாம்.

இது ஒரு புறமிருக்க, மீடியா சென்டரை பார்வையிட வந்த இலை கட்சி நிர்வாகி ஒருவர் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலையேற்றம் என்று மக்களிடம் அதிருப்தியின் உச்சத்தில் இருந்த அந்த கட்சியை நாங்கள் முதுகில் தூக்கி சுமந்ததுதான் பெரிய தப்பு. அந்த வெறுப்பு தான், எங்கள் மீது வெளிப்பட்டுள்ளது என்றாராம்.

இதைக் கேள்விப்பட்ட தாமரை நிர்வாகி ஒருவரோ, நாடு பூரா வெற்றி பெற்ற எங்களுக்கு தமிழ்நாட்டுலதான் ஒண்ணும் கிடைக்கலை. அதற்கு இலை மேல மக்களுக்கு இருந்த வெறுப்பு தான் காரணம் என்றாராம். இப்படி பார்க்கிற பக்கம் எல்லாம் ரெண்டு கட்சிக்கும் முட்டலும் மோதலுமாத்தான் இருக்காம்' என்றார் விக்கியானந்தா.

‘‘கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை களேபரமாகி கிடந்ததே.. என்ன காரணமாம்..’’ ‘‘நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டிடத்தில் வாக்கு எண்ணிக்கைநடந்தது. 23ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மற்றும் அதுசார்ந்த பணிகள் மறுநாள் அதிகாலை 1.30 மணி வரை தொடர்ந்தது. அன்று இரவு 9 மணியளவில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வந்துவிட்டார்.

அதன் பிறகு பழுதான சில இயந்திரங்களின் எண்ணிக்கை, விவிபேட்களில் பதிவான வாக்குகள் எண்ண 5 மணி நேரம் ஆகும், முகவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது கட்சி தொண்டர்கள் அதிகாரிகளிடம் இரவு 1 மணி வரை ஆகும் என்பதால் நாங்கள் விவி பேட்களை எண்ணி சரிபார்த்ததாக கையெழுத்து போட்டுவிடுகிறோம், எங்களை அனுப்பி விடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

இந்த தகவல் கலெக்டருக்கு செல்ல, அவர் கறாராக கடைசி விவிபேட் சரிபார்ப்பு முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்று கூறியதால் முகவர்கள் வேறு வழியின்றி இரவு 1.10 மணி வரை தொடர்ந்து நடந்த எண்ணிக்கை பணிகளில் உடனிருந்தனர். தேர்தல் ஆணைய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளவற்றை அப்படியே பின்பற்றியதால்தான் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விடியவிடிய நடைபெற்ற ஒரு சில தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரியும் அமைந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் நடக்காத வேலூர் தொகுதியை பத்தி ஏதாவது சேதி இருக்கா..’‘
‘‘தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற 38 தொகுதிகளில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. அன்றைய தினம் அனைவரும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் 2 நாளுக்கு முன்பு வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதோடு, வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் பொதுவிடுமுறை ரத்து செய்யப்பட்டது. இதில் வேலூர் கொணவட்டம் அரசு போக்குவரத்து டெப்போ அரக்கோணம் மக்களவை தொகுதியில் வருகிறது.

ஆனால் தேர்தல் தினத்தன்று கொணவட்டம் டெப்போவில் பணியாற்றிய ஆயிரம் பணியாளர்களுக்கு பொது விடுமுறை அளிக்காமல் அவர்களுக்கு அன்றைய தினத்திற்கான ஊதியம் மற்றும் ஒருநாள் கூடுதல் ஊதியம் வழங்கவில்லையாம். அதேநேரத்தில் ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள டெப்போக்களில் பணியாற்றிய பணியாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்கப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறுவதாக போக்குவரத்துக்கழக பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில் என்ன நடக்குது..’’
‘‘புதுச்சேரி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். இதனால் இன்னும் 6 மாத காலத்துக்குள் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக காமராஜர் நகர் தொகுதி விரைவில் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளது. இப்போதிலிருந்து இந்த தொகுதியை கைப்பற்ற காங்கிரசில் போட்டி நிலவி வருகிறது.

வைத்திலிங்கம் யாரை கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் சீட் என்பதால் பலர் இப்போதிலிருந்து எப்படியாவது தொகுதியை ரிசர்வ் செய்வதில் குறியாக இருக்கின்றனர். ஏற்கனவே இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வாரிசுகள் களமிறங்கி கட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளனர். இதே முறையில் காமராஜர் நகர் தொகுதியை கைப்பற்ற வாரிசுகள் காய்நகர்த்தல் துவங்கியுள்ளது.

இடைத்தேர்தலில் முதன்மை அமைச்சர் மகளும், அமைச்சரின் ஆதரவாளரும் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் என். ஆர் காங்கிரசில் கடந்த முறை எம்பியாக தேர்வான ராதாகிருஷ்ணனை, மீண்டும் காங்கிரசில் இணைப்பதற்கான முயற்சியை ஒரு தரப்பு மேற்கொண்டு வருகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் ராதாகிருஷ்ணன்தான் வேட்பாளர் என்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்