SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

149 பேரவை தொகுதிகளை கைப்பற்றி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார் ஜெகன்

2019-05-24@ 01:55:02

திருமலை: ஆந்திராவில் 149 சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. வரும் 30ம் தேதி ஜெகன் மோகன், முதல்வராக பதவியேற்கிறார். தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களை மட்டுமே பிடித்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் அக்கட்சி இழந்தது. ஆந்திராவில் கடந்த மாதம் 11ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. அதன்படி, 175 சட்டப்பேரவை தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 தொகுதிகளை கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் ஒரு இடத்தில் வென்றனர்.

இதேபோல் 25 மக்களவை தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தது. தெலுங்கு  தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு குப்பம்  சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். இங்கு அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் சந்திர மவுலியை 29,993 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த தேர்தல்களில் இங்கு  அமோக வெற்றி பெற்று வந்த அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மிகப்பெரிய பின்னடைவாக  கருதப்படுகிறது. அதேபோல், புலிவேந்தலா தொகுதியில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து வரும் 30ம் தேதி முதல்வராக பதவியேற்க ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார். அன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தபின்னர், கீழ்திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு ராஜினாமா

சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்து கவர்னர் நரசிம்மனிடம் நேற்று கடிதம் வழங்கினார்.

சந்திரபாபுவின் தப்பு கணக்கு

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் கடந்த மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 175 ஆக குறைந்தது. அதேபோல், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையும் 25 ஆகக் குறைந்தது. மாநில பிரிவினைக்கு பின்னர் கடந்த 2014ல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து தெலுங்கு தேசம் போட்டியிட்டது. அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்பை தெலுங்கு தேசம் பூர்த்தி செய்யவில்லை. அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த போதிலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தைப் பெற்று தர முடியவில்லை. இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கிய நேரத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார். சந்திரபாபு நாயுடுவின் இந்த முடிவை ஆந்திர மக்கள் நிராகரித்து இருப்பதை தேர்தல்  முடிவுகள் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10 ஆண்டு தவம்

ஆந்திராவில் முதல்வராக இருந்த ஜெகன் மோகனின் தந்தை ராஜசேகர் ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தனது தந்தை வகித்த முதல்வர் பதவியை தனக்கு தரும்படி ஜெகன் மோகன் கேட்டார். ஆனால், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மறுத்தார். இதனால், காங்கிரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், தனியாக சென்ற ஜெகன், தனது தந்தை பெயரில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் மேலிடம், ஜெகன் மீது பல்வேறு அடக்கு முறை நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஆனால், அதை எல்லாம் மீறி அவர் கட்சியை நடத்தினார். சொத்துகள் பறிமுதல், சிறை என பல சங்கடங்களை அனுபவித்தும், தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தற்போது சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். இதன் மூலம், அவரது 10 ஆண்டு கால கனவு நனவாகி உள்ளதுடன், அவரது கடுமையான போராட்டம், கட்சியை வளர்க்க அவர் பாடுபட்ட உழைப்புக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்