SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு இயந்திர கோல்மால் சந்தேகம் வலுப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-05-23@ 00:06:13

‘‘வாக்கு எண்ணிக்கை மையங்களில் எப்போதும் இல்லாத கெடுபிடிகள் இப்போது காட்டப்படுகிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் நடக்கும்போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு  தேர்தல் ஆணையம் அனுமதி அளிப்பதுண்டு. வாக்கு எண்ணிக்கையை இதற்கு முன்பு செய்தியாளர்கள் சிரமமின்றி சேகரித்த நிலையில், தற்போது கடும் கட்டுப்பாடுகளால் மாநிலம் முழுவதுமே வாக்கு எண்ணும் இடத்தையே செய்தியாளர்களால் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகள் மேலும் பன்மடங்கிற்கு தேனி தொகுதியில் எகிறி இருக்கிறது. 10 நாட்களுக்கு முன்பு கூட தேனிக்கு ரகசியமாக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும், போலீசும் துணை நிற்கிறது என பொதுமக்களிடையே சந்தேகம் அதிகரித்துள்ளது. இப்படி அடுக்கடுக்கான செயல்பாடுகள் அரங்கேறி வரும் நிலையில், தேனி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை அனுமதித்தால் கோல்மால் வேலை வெளிச்சத்திற்கு வந்து விடுமே என ஆளும்கட்சியினர் அரசு அதிகாரிகளிடம் அச்சத்தை தெரிவித்தார்களாம்.

இதனால், ஆளும்தரப்புக்கு ஆதரவாக செய்தியாளர்களை வாக்கு எண்ணும் பகுதிக்குள் நுழைய கடும் கட்டுப்பாடு போட்டதோடு, ஊடக அறை எனச் சொல்லி, வாக்கு எண்ணும் பகுதியில் இருந்து அரை கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் அமைத்திருக்கிறார்களாம். செய்தி சேகரிப்பதுதான் எங்கள் பணி. ஆனால் எந்த அடிப்படை வசதியற்ற ஒரு அறையில் அடைத்து அமர வைத்து, தேர்தல் பணி பார்க்க தேனி ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது காலைக் கட்டி நடனமாடச் சொல்வதாக இருக்கிறது என செய்தியாளர்கள் கடும் குமுறலுக்கு ஆளாகியுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

'சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலர் நியமனம் செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளதே' என்றார் பீட்டர் மாமா.
'சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்தும் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை நிர்வகிக்க மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதன்படி சென்னை மாநகராட்சியில் செயற் பொறியாளர்களாக பணியாற்றிவருபவர்கள் பதவி உயர்வு அடிப்படையில் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். இந்நிலையில் இந்த விதிகளில் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இனிமேல் 8 செயற்பொறியாளர்கள் மட்டுமே பதிவு உயர்வின் மூலம் மண்டல அலுவலராக நியமனம் செய்யப்படுவார்கள். மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் (சிறப்பு நிலை) ஆகியோர் 5 பதவிகளில் நியமனம் செய்யப்படுவார்கள். இதைத் தவிர்த்து பதவி உயர்வின் மூலம் கூடுதல் மாநகர நகர அலுவலர் ஒருவர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் ஒருவரும் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

இதன்படி பார்த்தால் 15 செயற்பொறியாளர்கள் பதிவு உயர்வு பெற்ற இடத்தில் இனிமேல் 8 பேர் மட்டும் பதவி உயர்வு பெற முடியும். இதனால் சென்னை மாநகராட்சியின் செயற்பொறியாளர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் களப்பணியில் அனுபவம் இல்லாத கணக்கு அலுவலர்களை மண்டல அலுவலர்களாக நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தள்ளனர்' என்றார் விக்கியானந்தா.

‘‘அமமுக விவகாரம் என்ன..’’
‘‘மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் அதிமுகவிலிருந்து யார் யாரெல்லாம் அமமுகவில் இணைகிறார்கள் என தெரியும் என நெல்லையில் பேட்டியளித்த டிடிவி தினகரன் இலை கட்சியை கலாய்த்தார். ஆனால் தற்போது அவரது கட்சியே கலகலத்துப் போய் இருக்கிறது. தூத்துக்குடி மக்களவை தேர்தல் பொறுப்பை அமமுகவில் அந்த கட்சியின் முக்கிய செயலாளர் ஒருவர் தான் கவனித்தார். அப்போதே தூத்துக்குடியில் பெரும்பான்மை சமுதாயத்திற்கு தேர்தல் பணியில் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

அந்த மாவட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரின் சமுதாயம் பெரும்பான்மையாக இருந்தும் கூட அவருக்கே முக்கிய பொறுப்புகள் கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டாராம். அவர் மட்டுமல்ல, அதிமுகவில் இருந்து டிடிவியை நம்பி வந்த அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கூட தேர்தல் பணியில் முக்கியத்துவம் கொடுக்காமல் ‘ராஜா'' போல நடந்து கொண்டனராம். இது தொடர்பாக டிடிவியிடமே நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டதாம்.

ஆனாலும் என்ன பிரயோஜனம். அதற்கு பின்னர் நடந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும், முன்னாள் அமைச்சர்கள் இன்பத்தமிழன், பச்சைமால் ஆகியோருக்கு பெயருக்கு தான் தேர்தல் பணிக்குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டதாம். அதிலும் மாவட்ட செயலாளரை கண்டு கொள்ளவில்லையாம். இப்படி ராஜா மாதிரி நடந்தால் தேர்தல் முடிவுக்கு பின்னர் அமமுக தான் கலகலக்கும் என்ற பேச்சு முத்துநகர் மாவட்டத்தில் எதிரொலிக்கிறது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்