SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக சவாலான உலக கோப்பை தொடர் நெருக்கடியை சமாளிப்பதே முக்கியம்: கேப்டன் கோஹ்லி உற்சாகம்

2019-05-22@ 00:10:31

மும்பை: இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் மிக சவாலானது; வெற்றியை குவிக்க நெருக்கடியான கட்டங்களை திறம்பட சமாளிப்பது முக்கியம் என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோதும் நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு பெறும்.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று இங்கிலாந்து செல்கின்றனர். அதற்கு முன்பாக கேப்டன் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர். உலக கோப்பையில் வெற்றி வாய்ப்பு குறித்து கோஹ்லி கூறியதாவது: இந்த உலக கோப்பை தொடர் மிக சவாலானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். எல்லா அணிகளுமே பலம் வாய்ந்தவை தான். கொஞ்சம் அசந்தாலும் அதிர்ச்சி தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோம். சூழ்நிலைக்கேற்ப உடனடியாக மாறிக் கொள்வது மிக மிக அவசியம்.

உலக கோப்பையில் பல விதமான ஸ்கோர்களை பார்க்க முடியும் என்றாலும், இங்கிலாந்து ஆடுகளங்களில் சமீபத்தில் நடந்த போட்டிகளை வைத்துப் பார்க்கும்போது மிகப் பெரிய ஸ்கோர்கள் அடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பெரிய தொடருக்கு முன்பாக போதுமான ஓய்வு கிடைத்துள்ளது. வீரர்கள் அனைவரும் நன்கு தயாராகி உள்ளனர். லா லிகா போன்ற நீண்ட தொடர்களில் விளையாடும் கால்பந்து வீரர்கள் 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விளையாடுகின்றனர். அவர்கள் மட்டுமல்ல இந்திய ராணுவ வீரர்களையும் முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுவோம். அவர்களுக்காக உலக கோப்பையை வெல்ல விரும்புகிறோம். அதை விட சிறந்த பரிசும் இருக்க முடியாது. இவ்வாறு கோஹ்லி கூறினார். இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.

அனுபவம் வாய்ந்த அணி... - தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினால் உலக கோப்பை நிச்சயமாக இங்கே இருக்கும். இங்கிலாந்து ஆடுகளங்கள் ரன் குவிப்புக்கு சாதகமானவையாக இருந்தாலும், மேகமூட்டமாக இருந்தால் வேகப் பந்துவீச்சு நன்றாக எடுபடும். எனவே, எத்தகைய சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும். இது நல்ல அனுபவம் வாய்ந்த அணி. ஏற்கனவே பல வெற்றிகளைக் குவித்துள்ளோம். ஒவ்வொரு வீரரும் சக வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி ஒருங்கிணைந்து விளையாடி வருகின்றனர். ஏதாவது ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக மட்டுமே கவனம் செலுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் கோப்பை வசமாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்