SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்ரிக்க வீரர்கள் தோல்வி பயத்தை தோற்கடிக்க வேண்டும்... டு பிளெஸ்ஸி அட்வைஸ்

2019-05-20@ 01:12:29

ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள தென் ஆப்ரிக்க வீரர்கள், முதலில் தோல்வி பயத்தை தோற்கடிக்க வேண்டும் என்று கேப்டன் டு பிளெஸ்ஸி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு உலக கோப்பை தொடர் தொடங்கும்போதும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக தென் ஆப்ரிக்க அணியும் கட்டாயம் இடம் பெறும். அதற்கேற்ப லீக் சுற்றில் சிறப்பாக விளையாடும் அந்த அணி, நாக் அவுட் என்று வரும்போது சொதப்பலாக விளையாடி ஏமாற்றத்துடன் வெளியேறுவதும் வாடிக்கையானதே. அதனால் தான், மிகத் திறமையான அந்த அணி இதுவரை உலக கோப்பையை முத்தமிட்டதே இல்லை என்ற சோக வரலாற்றை சுமந்து வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை தொடரில் தங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி நேற்று கூறியதாவது: முந்தைய உலக கோப்பை தொடர்களில் நாங்கள் சூப்பர்மேன் போல செயல்பட நினைத்தோம். மற்ற அணிகளை விட தனிச்சிறப்பு வாய்ந்த அணியாக விளங்க வேண்டும்; வழக்கமாக செய்வதை விட மிக மேம்பட்ட வகையில் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்களாகவே ஒரு தரத்தை நிர்ணயித்துக் கொண்டோம். ஆனால், முன்பு நன்றாக செய்ததைக் கூட உலக கோப்பையில் செய்ய முடியாமல் சொதப்பியது தான் மிச்சம். தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு, அதன் காரணமாக பதற்றத்துடன் விளையாடி தோல்வியைத் தழுவி வந்துள்ளோம்.

ஆனால், இம்முறை கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மன ரீதியாக எங்கள் வீரர்களைத் தயார் செய்து வருகிறேன். முதலில் தோல்வி பயத்தை தோற்கடியுங்கள் என்பதே அவர்களுக்கு எனது அறிவுரையாக இருந்து வருகிறது. இதற்கு முன் இருந்த எந்த கேப்டனையும் விட, தனித்தனியாக ஒவ்வொரு வீரரிடமும் இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். நெருக்கடியான தருணங்களில் இருந்து மீள எனது அனுபவம் கை கொடுக்கும் என்றும் நம்புகிறேன். அனைவரும் தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினாலே போதுமானது. வெற்றி தானாகவே வரும்.

வீரர்கள் தேர்வில் இப்போது எதையும் உறுதியாக சொல்ல முடியாது. பயிற்சி ஆட்டங்களில் வீரர்களின் செயல்பாட்டை கூர்ந்து கவனித்து, அவர்களின் பார்ம் எப்படி உள்ளது என்பதை கணித்த பிறகே முடிவு செய்வோம். இவ்வாறு டு பிளெஸ்ஸி கூறியுள்ளார். உலக கோப்பைக்கான பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, டுவைன் பிரிடோரியஸ், டாப்ரைஸ் ஷம்சி, வான் டேர் டஸன், ஹாஷிம் அம்லா, ஜீன் பால் டுமினி, எய்டன் மார்க்ராம், கிறிஸ் மோரிஸ், பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, டேல் ஸ்டெயின்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்