SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறுதிக்கட்ட தேர்தலில் 64% வாக்குப்பதிவு மேற்குவங்கத்தில் மீண்டும் வன்முறை: 23ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை

2019-05-20@ 00:15:54

புதுடெல்லி: நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடந்த 7வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 64% வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் பெட்ரோல் குண்டுவீச்சால் பரபரப்பு நிலவியது. நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. பீகாரில் 8, இமாச்சல பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, சண்டிகரில் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது.

இதுதவிர தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், கோவாவில் பனாஜி சட்டப்பேரவை தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. கேரளாவில் கண்ணூர், காசர்கோடு தொகுதிகளில் உள்ள 7 பூத்களில் கள்ளஓட்டு புகாரைத் தொடர்ந்து மறுதேர்தல் நடந்தது. இறுதிக்கட்ட தேர்தல் என்பதால் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அங்கு மாற்று இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு தடைபடாமல் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி போட்டியிடும் உபியின் வாரணாசி தொகுதியில் காலையில் இருந்தே வாக்குப்பதிவு சூடுபிடித்தது. இங்கு மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரசின் அஜய் ராய் வாக்களித்தபின் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 5 ஆண்டில் இத்தொகுதியில் போதிய வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி செய்யவில்லை. வெறும் வார்த்தை ஜாலம் தான். இம்முறை இங்கு வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்’’ என்றார். கடந்த 2014 தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் பாட்டியாலா தொகுதியிலும், காங்கிரஸ் வேட்பாளரும் நடிகருமான சத்ருகன் சின்கா பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியிலும், பாஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வாரணாசி தொகுதியிலும், இமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங் தனது குடும்பத்துடன் மாண்டி தொகுதியிலும் வாக்களித்தனர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் வாக்களித்தார்.  மேற்கு வங்கத்தில் பிரசாரத்தின் போதே வன்முறை சம்பவங்கள் நடந்ததால், அங்கு அனைத்து வாக்குசாவடியிலும் 710 மத்திய படை கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. ஆனாலும், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வன்முறைக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ என இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளன.

பாஜவின் உத்தரவுப்படி மத்திய பாதுகாப்பு படையினர் மிக அராஜகமாக நடந்து கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பாஜவுக்கு எதிராக வாக்களிக்கும் மக்களையும், திரிணாமுல் தொண்டர்களை அடித்து விரட்டுவதாக புகார்கள் கூறினர். அதே சமயம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக பாஜவும், இடதுசாரிகளும் குற்றம்சாட்டின. குறிப்பாக ஜாதவ்பூர் தொகுதியில் வாக்காளர்களின் விரலில் மை மட்டும் வைக்கப்பட்டதாகவும், ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அத்தொகுதியில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பராக்போர் தொகுதிக்கு உட்பட்ட காகினராவில் திரிணாமுல் - பாஜ தொண்டர்கள் இடையே காலையில் இருந்தே மோதல் ஏற்பட்டது. இத்தொகுதிக்கு உட்பட்ட பாட்பாரா பகுதியில் திரிணாமுல் காங்கிரசின் இடைத்தேர்தல் வேட்பாளர் மதன் மித்ராவின் காருக்கு அருகே பெட்ரோல் குண்டுவெடித்தது. அங்கு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். வன்முறை தாக்குதலில் வேட்பாளர்களும் தப்பவில்லை. வடக்கு கொல்கத்தா பாஜ வேட்பாளர் ராகுல் சின்கா, தன்னை ஒரு கும்பல் தாக்கி ‘திரும்பி போ’ என கோஷமிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இதேபோல, ஜாதவ்பூர் பாஜ வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா மற்றும் டயமண்ட் ஹார்பர் தொகுதி பாஜ வேட்பாளர் நிலஞ்சன் ராயின் கார் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.

இது தொடர்பாக ஓட்டுபோட்டு வெளியில் வந்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘காலையில் இருந்தே பாஜ தொண்டர்களும், மத்திய பாதுகாப்பு படையினரும் வாக்காளர்களையும், திரிணாமுல் தொண்டர்களையும் சித்ரவதை செய்வது முன்னெப்போதும் பார்த்திராத சம்பவம். இதுபோல் எப்போதும் நடந்ததில்லை’’ என்றார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தனது வன்முறை கொள்கையில் விடாப்பிடியாக உள்ளது. எனவே தேர்தலுக்கு பிறகும் மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மத்திய பாதுகாப்பு படையை அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கச் செய்ய வேண்டும்’’ என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளார். இதே போல, பீகாரிலும் ஒரு சில இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்தன. அங்குள்ள அரா தொகுதியில் கள்ளஓட்டு போடுவதை தடுக்க முயன்ற போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் சில போலீசார் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தாலும் வாக்குசதவீதம் பரவலாகவே அதிகரித்திருந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மொத்தம் 64% வாக்குகள் பதிவாகின. இத்துடன், கடந்த 6 வாரங்களாக நடந்து வந்த 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் யார் என்பது நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

முகத்தை மூடி வந்தவர்களிடம் சோதனை

கேரளாவில் கடந்த மாதம் 23ம் தேதி 20 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடந்தது. இதில் கண்ணூர், காசர்கோடு தொகுதிகளில் கள்ள ஓட்டுக்கள் அதிகமாக பதிவானதாக புகார்கள் எழுந்தது. விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர் உள்பட சிலர் கள்ள ஓட்டு போட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கண்ணூர், காசர்கோடு தொகுதிகளில் உள்ள 7 பூத்களில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கடந்த மாதம் நடந்த தேர்தலின்போது ஏராளமானோர் முகத்தை மூடி துணி அணிந்து வந்து வாக்களித்தனர். இப்படி வந்தவர்கள் உண்மையான வாக்காளர்கள்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  எனவே முகத்தை மூடி துணி அணிந்து வருபவர்களின் முகத்தை பரிசோதித்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதன்படி, ஒவ்வொரு பூத்திலும் கூடுதலாக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். இது தவிர தனி அறையும் அமைக்கப்பட்டிருந்தது. முகத்தை மூடி துணி அணிந்து வந்தவர்கள் முகத்தை பார்த்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்