SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடும் கோடையில் அணை, குளங்களில் சரிகிறது நீர்மட்டம்... முடங்கும் கோவை விவசாயம்

2019-05-19@ 14:29:17

கோவை: கோவை மாவட்டத்தில் அணை, குளங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் விவசாயம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சிறுவாணி அணை பிரதான நீர் தேக்கமாக இருக்கிறது. இந்த அணை கடந்த 1929ம் ஆண்டு கட்டப்பட்டது. 1955ம் ஆண்டில் அணை சீரமைக்கப்பட்டது. கடந்த 1973ம் ஆண்டில் அணையை விரிவாக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1984ம் ஆண்டில் அணை 15 மீட்டர் உயரத்திற்கு, 26.5 சதுர கி.மீ பரப்பிற்கு நீர் ேதக்கும் வகையில் கட்டப்பட்டது. அணை நிரம்பினால் 223 நாட்களுக்கு தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். கடந்த 33 ஆண்டுகளில் அணை 19 முறை நிரம்பியுள்ளது. 14 ஆண்டுகள் அணை நிரம்பவில்லை. அணையின் உயரத்தை 1.5 அடி உயர்த்த கடந்த 2006ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. ஆனால், கேரள அரசின் ஒப்புதல் கிடைக்காததால் இந்த திட்டம் முடங்கியது.

அணையில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. குறிப்பாக, அணையின் கிழக்கு, தெற்கு பகுதியில் நீர் தேக்க பகுதி, மண் மூடி கிடப்பதால் நீர் தேக்கம் குறைந்து விட்டது. இதை தவிர்க்க அணையை தூர்வாரி, சேறு, சகதிகளை அகற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், அணையின் பழங்கால தடுப்பணையும் மூடி கிடக்கிறது. இதை சீரமைக்கவும், வறட்சி காலங்களில் தடையின்றி குடிநீர் பெறவும் சீரமைப்பு பணி மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து, ஒரு ஆண்டாகியும் இன்னும் நிதி ஒதுக்கவில்லை. பணியும் நடக்கவில்லை. வற்றாத அணை என்ற பெருமை கொண்ட பில்லூர் அணையில் 3 குடிநீர் திட்டம் உள்ளது. மேலும் 2 குடிநீர் திட்டம் துவங்கவுள்ள நிலையில், நீர் குகை பாதை (டணல்) அமைப்பது சவாலாக இருக்கிறது. இந்த அணையில் போதுமான நீர் இருந்தும், எடுக்கமுடியாத நிலை இருக்கிறது. ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் எடுப்பதும் மழை பெய்வதை பொறுத்தே அமைகிறது. அணைகளின் நிலை மட்டுமின்றி பவானி, நொய்யல் ஆறும் பரிதாப கதியில்தான் உள்ளது. பவானியில் பல இடங்களில் குடிநீர் உறிஞ்சப்படுகிறது. கேரள மாநிலத்தில் 3 இடத்தில் தடுப்பணை கட்டியதால், நீர் வரத்து 40 சதவீதம் வரை குறைந்துவிட்டது.

கோவை நகரில் நொய்யல் நீராதாரத்தில் 28 குளங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் கடந்த தென்மேற்கு பருவ மழையின்போது முழுவதும் நிரம்பியிருந்த முதல் குளமான உக்குளத்தில் தற்போது 20 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. கங்கநாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை ஆகியவற்றில் 70 சதவீதம் நீர் தேங்கியிருந்தது. தற்போது இந்த இரு குளங்களும் முழுவதும் வறண்டு விடும் நிலையில் உள்ளது. நரசாம்பதி குளத்தில் நீர் தேக்கம் 10 சதவீதம் வரையிலும், செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன்குளம் 20 சதவீதம் வரையிலும், குறிச்சி, சிங்காநல்லூர் குளம் 15 முதல் 25 சதவீதம் வரையிலும் நீர் குறைந்து விட்டது. இது, தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. செங்குளம் முற்றிலும் வறண்டுவிட்டது. கண்ணம்பாளையம், பள்ளபாளையம், சாமளாபுரம், சூலூர் குளங்கள் முழு வறட்சியை விரைவில் எட்டும் நிலையிருக்கிறது. கோடையை முன்னிட்டு பாசன வாய்க்கால் காய்ந்து கிடக்கிறது. சித்திரை சாவடி, பேரூர், வெள்ளலூர், சாமளாபுரம் உள்ளிட்ட பாசன வாய்க்கால் புதர் மண்டி கிடக்கிறது. நீராதாரம் பெருமளவு குறைந்துவிட்டதால் கோவை மட்டுமின்றி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதனால், ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இதன்காரணமாக, கோவை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் முடங்கிவிட்டது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குளங்களில் களிமண் மற்றும் கிராவல் மண் உள்ளது. இந்த மண் நீரை அதிகமாக உள் உறிஞ்சும் தன்மை கொண்டது. மழை பெய்து, முழுவதும் தேங்கினாலும், ஓரிரு மாதத்தில் 10 சதவீதம் வரை நீர் மட்டம் குறைந்துவிடும். தற்போது, வெயில் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டிவிட்டது. வெயில் உச்சத்தில் இருக்கிறது. இதனால் நீர் உறிஞ்சுதலுடன் ஆவியாதலும் அதிகமாகி வருகிறது. வெயில் தாக்கம் அதிகமாகும்போது குளங்களின் நீர் மட்டம் மேலும் குறையும். நொய்யல் ஆறு சீரமைக்க 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளம், வாய்க்கால் சீரமைத்தால்தான் நிலத்தடி நீரை சேமிக்க முடியும்’’ என்றனர். தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், ‘‘தென்மேற்கு பருவ மழை குறைவாக பெய்யும் என வேளாண் வானிலை அறிவித்துள்ளது. இப்போது உச்சக்கட்ட வெயில், வறட்சி இருக்கிறது. விவசாய பணிகள், பயிர் சாகுபடி முடங்கி விட்டது. ஜூன், ஜூலை மாதத்தில் போதுமான மழை பெய்யாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். பயிர் சாகுபடி குறைந்தால், விளைபொருட்களின் விலை உயர்ந்துவிடும். மாவட்ட அளவில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. குளம், குட்டை, தடுப்பணைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் நீர் சேமிப்பு சாத்தியமில்லாமல் போய்விட்டது. நீர்தேக்கங்களை சீரமைத்தால்தான் வறட்சியை சமாளிக்க முடியும். விவசாயத்தை காப்பாற்ற முடியும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-09-2019

  இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-09-2019

  15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-09-2019

  14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • indo_fire_poison1

  இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

 • TrainDerailCongo50

  காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்