SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலுக்கு முன்பாகவே பணம், நகை, ஆவணங்களை பதுக்கும் விஐபிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-05-19@ 01:32:08

‘‘தாமரைக்கு பின்னடைவுன்னு சொல்றாங்களே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சாப்பிடும் பொருளுக்கு ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு... எதற்கெடுத்தாலும் ஆன்லைன் பரிவர்த்தனை. இப்படி தடாலடியாக முடிவெடுத்து, மறைமுகமாக நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு வர முயலும் தாமரையின் எதிர்கால எண்ணம் போன்றவை ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஆபத்து என்பதால் எதிர்ப்பு உணர்வு அதிகமாகி உள்ளது. இது தாமரைக்கு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கு.. ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட கூலியாக கிடைக்காத எத்தனையோ மாநிலங்கள் இந்தியாவில் இருக்கு... அவர்களும் ஜிஎஸ்டி முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் நாடு முழுவதும் மக்கள் செம கடுப்பில் இருக்காங்க... இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்காம். வருமான வரியை கையில் வைத்துக்கொண்டு தாமரையின் சுப்ரீம் ஆடிய ஆட்டத்தை சிறு வணிகர்கள், நடுத்தர வணிகர்கள் மறந்துவிடவில்லை. அதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. துணிக்கடை, பாத்திரக்கடை, இரும்பு கடைகளில் கூட வருமான வரித்துறை நுழைந்தது நடுத்தர வர்க்கத்தினரை அதிர வைத்தது. இதையும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள் எல்லாம் இப்ப எப்படி இருக்காங்களாம்..’’
‘‘கலங்கிப்போய்த்தான் கிடக்கிறார்கள்.. 24ம் தேதி வரை நாம காத்திருக்க முடியாது... டெல்லியில் நம்ம கூட்டணி ஆட்சிக்கு வந்தா பரவாயில்ல... ஆனால் டெல்லி நிலவரம் கலவரமாக இருக்கு. அதனால தங்க கட்டிகள், ரொக்கம், நகை, பத்திரங்கள், முதலீடுகள் மற்றும் பினாமி லிஸ்ட், டைரிகள் என்று ஒன்றையும் விடாமல் இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருக்காங்களாம்... ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறும்... எந்த வகையிலும் நாம சிக்கக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி இருக்காங்களாம்... கருப்பை வெள்ளையாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் வடநாட்டில் செல்வாக்குள்ள நபர்களிடம் கொடுத்து வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். அனைத்து வழிகளிலும் பணம், நகை, ஆவணங்கள் யார் கையிலும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா.

‘‘ஆட்சி மாறினால் என்ன ஆகும்... எதுக்கு அமைச்சர்கள் பயப்படறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெள்ளந்தியா இருக்கியே... ஆட்சி மாறினால், கவர்னர் மாறுவார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் மாறுவார்கள்... அமலாக்கத்துறை களம் இறங்கும்... சிபிஐ அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்... பழைய வழக்குகள் தூசு தட்டப்படும். வருவாய்க்கு மேல் சொத்து சேர்த்தவர்களின் பட்டியல் அலசப்படும். கவர்னரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஊழல் பட்டியல் படி நடவடிக்கை எடுத்தால் பாதி அமைச்சர்களின் நிலை பரிதாபம். பிரச்னையில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பதுக்கல் நடவடிக்கை பாய்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நான்கு தொகுதி இடைத்தேர்தல் எப்டி இருக்காம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எதிர்கட்சிகளின் பிரசாரம் மட்டுமில்லாது... களப்பணியும் அருமையாக இருக்கிறதாம்... டீக்கடைகள்,  மார்க்கெட், ஓட்டல், ரயில், பஸ் நிலையங்களில் கூடும் பொதுமக்கள் பேசுவதை பார்த்தால் ஆளுங்கட்சிக்கு பெரிய அடி என்றே சொல்லத் தோன்றுகிறது... இலையும், கிப்ட்டும் பணத்தை வாரி இறைத்தும் மக்கள் மாறிவிட்டார்கள்... பணத்தை வாங்கினாலும் ஆட்சி மேல் உள்ள வெறுப்பால் ஓட்டு திரும்பும் என்று பேசிக் கொள்கிறார்கள்... சேலம், தேனி என்று பெரும் படை திரண்டு வந்து பிரசாரம் செய்தாலும் எடுபடவில்லை என்றே பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன சேதி இருக்கு...’’
‘‘தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், ஆளுங்கட்சி செல்வாக்கால் சீவலப்பேரி ஆற்றுப்பகுதியில் இருந்து காவல்துறை உதவியுடன் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து உளவுப்பிரிவினருக்கு தகவல் தெரிந்தும், அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. இவ்விஷயம் தென்மண்டல உயர் போலீஸ் அதிகாரிக்கு தெரியவரவே, பாளையங்கோட்டை காவல்துறை அதிகாரிகளை நம்பாமல், நெல்லை உதவி கமிஷனர் மூலம் பாளையில் ரெய்டு நடத்தியுள்ளார். இதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகர உயர் போலீஸ் அதிகாரிக்கு தெரியாமல் இந்த ரெய்டு நடந்ததால் அவர் வேதனையடைந்து உள்ளார்.

மறுநாள் அவர் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவினரை அழைத்து எனது கவனத்துக்கு இந்த சம்பவம் தெரிந்து இருந்தால் நான் நடவடிக்கை எடுத்திருப்பேன். இது எனக்கு தெரியாமல் நடந்துள்ளது. எனவே கொஞ்சம் விஸ்வாசமாக வேலை செய்யுங்கள். எந்த சம்பவத்தையும் மறைக்காதீர்கள். தகவல் தெரிவியுங்கள். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உருக்கமாக பேசினாராம்... அதை கேட்ட உளவு காக்கிகள் இப்படியும் ஒரு அதிகாரியா என்று பேசியபடியே கலைந்து சென்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்