SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திரா காந்தியை போல நானும் கொல்லப்படலாம்: பாஜ மீது கெஜ்ரிவால் பகீர் புகார்

2019-05-19@ 01:17:19

புதுடெல்லி: ‘‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல், நானும் எனது பாதுகாவலர்களால் ஒருநாள் படுகொலை செய்யப்படுவேன். எனது உயிருக்கு பாஜ குறி வைத்துள்ளது,’’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாஜ.வுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் டெல்லியில் உள்ள மோதி நகரில் திறந்த ஜீப்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவாலை ஒருவர் கன்னத்தில் அறைந்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதன் பின்னணியில் பாஜ இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இன்று தேர்தல் நடக்கும் 13 மக்களவை தொகுதிகளில், ‘ஜனநாயக ஜனதா கட்சி’யுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அதற்கான பிரசாரத்துக்காக இரு தினங்களுக்கு முன் பஞ்சாப் சென்ற கெஜ்ரிவால், அங்குள்ள செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் கொன்றனர். அதேபோல், எனது பாதுகாவலர்களை பயன்படுத்தி, என்றாவது ஒரு நாள் என்னை படுகொலை செய்ய பாஜ கருதுகிறது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எனது பாதுகாவலர்கள், பாஜ.வுக்குதான் சாதகமாக பணியாற்றுவார்கள். எனது உயிருக்கு பாஜ குறி வைத்துள்ளது. நான் கொல்லப்பட்டதும், ‘கட்சி அதிருப்தி தொண்டர் கொலை செய்தார்’ என போலீசார் கூறுவார்கள். காங்கிரசில் அதிருப்தி தொண்டர் ஒருவர் இருந்தால், அவர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கன்னத்தில் அறைவார் என அர்த்தமாகுமா? பாஜ அதிருப்தியாளர் பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்துவாரா? என்று கூறியுள்ளார். கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்துள்ளது.

டெல்லி போலீஸ் விளக்கம்:
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசின் கூடுதல் மக்கள் தொடர்பு அதிகாரி அனில் மிட்டல் கூறுகையில், ‘‘தொழில் ரீதியாக திறமையான பயிற்சி பெற்ற அதிகாரிகளும், காவலர்களும் தான் பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை தலையாய கடமையாக  கருதுவார்கள். நாட்டின் முக்கிய தலைவர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறதோ, அதற்கு இணையாக டெல்லி முதல்வருக்கும் கடமை உணர்வுமிக்க காவலர்கள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dr

  மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

 • hongkong

  சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

 • jappan

  ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

 • fire

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

 • 27-06-2019

  27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்